Tuesday, July 15, 2014

பகட்டு உலகின் பிளாஸ்டிக் மனிதர்கள்: விடைபெறும் ஐ.டி. ஊழியனின் சில வரி(லி)கள் - படித்தது


வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை வாடிக்கையாக மாறும்போது கொண்ட வியப்பு எல்லாம் விரக்தியாய் மாறும் என எதிர்ப்பார்த்தில்லை. சினிமா போலி பிம்பத்தை கொடுத்து சில சமயங்களில் யதார்த்தை மறைத்து விடும் என்று கேட்டதுண்டு. ஐ.டி.துறையில் இணைந்த பிறகு தான் இத்துறை பற்றிய பிம்பம் எவ்வளவு அபத்தமாக திரையில் அமைந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.
கடந்து செல்லும் நீண்ட நெடும் சாலையை கடக்க முடியாமல் மீளத் துடிக்கும் மன ஓட்டங்கள் ஏராளம். ராஜீவ் காந்தி சாலையில் மனதால் தொலைந்துபோன சில மனிதர்களின் கதைதான் இப்பதிவு.
ஐ.டி. துறையில் நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கைதான் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கதாப்பாத்திரப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.
உறக்கத்தை தேடும் கனவு:
என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் ரகு. கல்லூரி காலங்களில் எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பான். யாருக்கும் உதவிட தயங்க மாட்டான். படிந்த தலை, நெற்றியில் அணுதினம் பூசிய திருநீர், கையில் கல்கியின் புத்தகம், தன்மையாக பேசும் அணுகுமுறை, மொத்தத்தில் இவன் ஒரு சாந்த ஸ்வரூபி. அன்பன்றி யாரிடமும் வெறுப்பை சம்பாதித்திடாத ஓர் இளைஞன்.
ஒரே அலுவலகத்தில் நாங்கள் இருவரும் வேலை செய்ததால் உணவு உண்ணச் செல்லும்போது எப்போதாவது யதேச்சையாக சந்திப்பதுண்டு. வெகுநாட்களுக்குப் பிறகு அன்றொரு நாள் இவனை பார்க்க முடிந்தது. சுரத்தில்லாத முகத்தோடு இடுங்கிய விழிகள், முன்பிருந்த முடிகள் கொட்டிப்போய் அரை வழுக்கை மண்டையுடன் என்னை கடந்து சென்றான். பார்த்தாலே இவன் நிலைமை சரியாக இல்லை என்பதை உணர முடிந்தது. எப்படி'டா இருக்க? ஈவ்னிங் டி'க்கு பார்க்கலாமா? என்று கேட்டபோது 'ரொம்ப மோசமா இருக்கேன் டா. நேத்தி காத்ததால பத்து மணிக்கு வந்தேன்... இப்போதான் வீட்டுக்கு கிளம்புறேன். நான் வரலை அப்புறம் பார்ப்போம்' என்று கண்ணை கசக்கிக் கொண்டே சொன்னான். (அவன் கூறியபோது மதியம் ஒரு மணி).
எப்போதும் வாரத்தில் சனிக்கிழமையும் கட்டாயமாக வேலை பார்க்க வேண்டிய சூழல் இவன் ப்ராஜெக்ட்டில் இருந்தது. அதுவும் ஒவ்வொரு நாள் வேலை எப்போது முடியும் என்பதே இவனால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. திடீர் என்று பத்து மணிக்கு க்ளைன்ட்கால் வைத்துக் கொள்ளலாம் என்ற செய்தி வந்தால் அவ்வளவு தான். அன்று உறங்கிய மாதிரி தான். 'முடியல டா, சண்டே ஒரு நாலு லீவ் கேட்பதற்கே முன் கூட்டி பெர்மிஷன் வாங்க சொல்றாங்க. இப்படியே ஒரு வருஷமா போகுது. நான் ரிசைன் செய்து வீட்டுக்கே திரும்பலாம்ன்னு முடிவு செஞ்சுட்டேன்' என்றான்
சரி, வேலையை விட்டுட்டு என்னடா செய்யப் போகுற என்று கேட்டால்? 'தெரியல டா எங்க ஊருக்கே போகலாம்ன்னு இருக்கேன் (தஞ்சை). அங்கப்போய் எதாவது தொழில் செஞ்சுக்க வேண்டியது தான்' என்றான்.
'எதுக்கு டா ரிசைன் பண்ற? ப்ராஜெக்ட்டிலிருந்து ரிலீஸ் கேட்டு வேற எங்கயாவது போக வேண்டியது தானே!' என்று கேட்டேன். 'நீ வேற, நான் ஒரு மாசமா ரிலீஸ் கேட்கிறேன்... இந்த டிசம்பர்லேந்து ப்ராஜெக்ட் ரொம்ப ஹெக்டிக்காக போகுது. இப்போதெல்லாம் படுத்ததா தூக்கமே வரமாட்டேங்குது. 'இந்த ப்ராஜெக்ட்'ல இருப்பதால சரியான நேரத்துக்கு சாப்பிட முடியல, தூக்கத்தையே பார்க்க முடியல ப்ளீஸ் எனக்கு ரிலீஸ் கொடுங்க ' என்று எச்.ஆர் (மனித வளம்) கிட்ட பேசினால் 'நவம்பர் வரைக்கும் வெயிட் பண்ணுங்க அதுக்கு அப்புறம் ஆன்-சைட் தரோம், வேற ப்ராஜெக்ட் வாங்கித் தரோம்ன்னு வடை சுடறாங்க'. இல்லை எனக்கு இது முடியல, என்ன விட்டுடுங்கன்னு கெஞ்சினேன். எனது மேனேஜர் பெரிய தல எச்.ஆர் கிட்டேந்து இதை தெரிஞ்சுகிட்டு 'நீ தான் ப்ரைம் ரிசோர்ஸ், நீ இங்கயே இரு உனக்கு சீக்கிரமா பெரிய போஸ்ட் வாங்கித் தரேன்' என்கிறார்.
இதே ஆள் போன மாசம் 'நீ சராசரியாக பத்து மணி நேரம் தான் வேலை பார்க்குற, உன் வேலை ரொம்ப சுமார் ரகம் தான்'என்று கூறி எனக்கு மோசமான ரேடிங் கொடுத்தார். இப்போது ரிலீஸ் கேட்ட பிறகு 'நீ தானே முக்கியமான ஆள், நீ கிளம்பினால் எப்படி?' என்று ஏதேதோ துதி பாடுகிறார். இப்போ இவங்க ரீலிஸ் தரமாட்டேங்குறாங்க, சரி நான் வேலையை ரிசைன் செய்கிறேன் என்று கூறி பேப்பர் (ராஜினாமா கடிதம்) போட்டு விட்டேன்.
நான் வேலைக்கு சேர்ந்து அந்த நாளோடு இரண்டு வருடம் முடிவடைவதால் பாண்ட் காசு (பாண்ட் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடத்திற்குள் ராஜினாமா செய்தால் இரண்டு முதல் மூன்று மாத சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்ற கம்பெனியின் விதி) தரவேண்டாம் என்று நினைத்தேன். இப்போது எனது கடைசி நாள் முடிய இரண்டு நாட்களே உள்ள சூழலில் எச்.ஆர் பாண்ட் அமௌன்ட் ஐம்பதாயிரம் நீ கட்ட வேண்டும் என்கிறார். அதான் பாண்ட் பீரியட் முடிவடைந்து விட்டதே என்று கேட்டால், 'நீ உடம்பு சரியில்லன்னு இந்த வருஷத்துல பத்து நாள் தொடர்ந்து லீவ் போட்டிருக்கிற அதுக்காக இன்னும் பதினைந்து நாட்கள் வேலை பார்த்துட்டு போ. இல்லைன்னா ஐம்பதாயிரம் கட்டும்படி வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்புவேன்' என்று கூறுகிறார்.
'நான் சரியா வேலை செய்யலன்னு சொல்றாங்க, அப்புறம் இங்கயே இருன்னு படுத்தறாங்க இவங்களுக்குகெல்லாம் ஏன் கொஞ்சம் கூட மனசாட்சியே இருக்க மாட்டேங்குது? சரி டா நான் போய் அவங்கள பார்த்திட்டு வரேன்' என்று கூறி அவ்விடத்தை விட்டு விலகினான்.
வாழ்க்கையை நடத்த வேலை என்பதை மறந்து வேலை செய்வதற்கும் பொருள் ஈட்டுவதற்குமே வாழ்க்கை என்ற சூழல் இன்றைய சென்னை நகரத்தின் ஒரு புறம் உருவாகி வருகிறது. ஐந்து நாட்கள் மெஷின்களுடன் மெஷினாக வாழ்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் வாழ்க்கையின் அத்தனை இன்பங்களையும் அவசர அவசரமாக வாழப்பார்க்கும் மனிதர்கள் இவ்வலையிலிருந்து வெளிவரப் பார்த்தாலும் வேலையை துறந்து வெளியே வந்தால் அடுத்த பொழப்புக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற பயத்தினாலே நாளும் தெய்கின்றனர்.
இவனுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கிடைப்பதே கேள்விக்குறியாக இருந்தது. 'அடுத்து என்ன செய்ய போகிறேன்னு தெரியல டா, இருந்தாலும் ஊருக்கே திரும்பப் போய் எதாவது நல்ல வேலை அமைச்சுபேன்' என்று கூறிய அவனின் தன்நம்பிக்கை இங்கே பலரும் தேடும் ஒன்றாக இருக்கின்றது.
கேம்பஸ் இன்டர்வியு-வில் பல சுற்றுக்களை கடந்து ஒரு பெயர் பெற்ற நிறுவனத்தில் வேலை வாங்கி எத்தனை கனவுகளுடன் அவன் இந்த தகவல் தொழில்நுட்பத் துறையினில் நுழைந்திருப்பான். கோடிங்கில் எப்போதும் பிரிச்சு மேயும் திறன் கொண்டவனாக அவன் இருந்ததால் வேலை பார்ப்பதும் இவனுக்கு கடினம் கிடையாது, எப்போதும் செய்கின்ற வேலையை ரசித்து செய்யும் குணம் கொண்டவன், மிகுந்த நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இவன் தன் குடும்பத்து பொருளாதார பின்னடைவை மனதில் கொள்ளாமலா ராஜினாமா செய்யத் துணிந்திருப்பான்? இருப்பினும் இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கிறான் என்றால் அப்போது அவன் மன உலைச்சல் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
****
வீடு, மனைவி, மக்கள், வாழ்க்கை?
"ஆமாம் ப்ரோ நீங்க பேஸ்புக்குல இருக்கீங்களா?"
"ம்... இருக்கேன்டா தம்பி!"
"அப்புறம் ஏன் நம்ம டீம் மேட்ஸ் யார் பிரண்ட்ஸ் லிஸ்ட்லயும் நீங்க இல்லை?"
"ஆமாம் டா அங்க மட்டும்தான் நான் மனசுல நெனச்சத பேச முடியுது. அங்கயும் இவங்கள சேர்த்துகிட்டா, அப்புறம் அங்கயும் போலித் தனமா நடிக்க வேண்டியதாகிடும். நான் பாட்டுக்கு எனக்கு தோணினத சொல்லுவேன் அதெல்லாம் இவங்க கேட்டா அப்புறம் தேவை இல்லாம பேச்சு வார்த்தை உருவாகும்.
ஏன் அங்க அவங்கள எதாவது அசிங்கமா திட்டுவீங்களா? சீச்சீ இல்லைடா எனக்கு தோணினத சொல்லுவேன் அது நிறைய பேரால ஏத்துக்க முடியாது. உதாரணமா? 'பரதேசி படம் பார்த்து ரொம்ப ஃபீல் ஆகிட்டேன். நமக்கும் படத்துல அடிமையா வந்தவங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லைன்னு நினைக்கறேன், நாமளும் நமக்கு முன்னாடி கிளம்பின சீனியர்ஸ், சினிமாவுவல வர காரு, பங்களாவ'லாம் பார்த்து இங்க வந்துட்டோம். உள்ள வந்தாதான் எவ்வளவு கங்காணிங்க நம்மள மாதிரி ஆட்டை கொக்கி போட்டு இழுத்து வந்திருகாங்கன்னு உணர முடிஞ்சிது. என்ன அவங்கள சவுக்கால அடிக்கறாங்க, இவங்க நம்மள பணத்தால, ரேடிங்கால அடிக்கறாங்க, அங்க அதர்வாவுக்கு காலுல சங்கிலி இங்க நமக்கு கழுத்துல ஐ.டி.கார்ட். நாமளும் நம்ம சொந்தக்காரங்க இங்க நம்ம பேச்சை கேட்காம வந்து சேர்ந்திட்டா நாயன்மாரேன்னு வயித்துல வாயில அடிச்சிக்கறோம்.' இந்த ஐடியாவா வெச்சு ஒரு ஸ்டேடஸ் போட்டேன் டா.
'வாழ்கையில விரக்தியா இருக்கிறவங்க பாலா படத்துல வர மாதிரி மொட்டை அடிச்சிகிட்டு, கை காலுல சங்கிலி போட்டு பைத்தியம் மாதிரி காட்டுல மேட்டுல திரியணும்னு அவசியம் இல்லை. நல்ல புல் ஹான்ட் ஷர்ட் போட்டு, முடிவெட்டி, டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணி, கழுத்துல ஐடி கார்டோட உங்கள கிராஸ் பண்ற ஒருத்தனா கூட அந்த ஆள் இருக்கலாம்'ன்னு போட்டேன் டா. இப்படி நான் பல ஸ்டேடஸ் போடற்துனால என் ப்ரண்ட்ஸ்ல சில பேரே என்ன அன்-ப்ரன்ட் பண்ணிட்டாங்க."
***
"இந்த ஏரியாவுல வீடு வாடகைக்கு கேட்டு போனா குறைஞ்சது பதினஞ்சுலேந்து இருபத்தஞ்சாயிரம் வரைக்கும் வாடகை கேட்கறாங்க. பழக்கடைக்காரர் என்ன சார் இருபது ரூபாய்க்குலாம் பழம் வாங்கறீங்க.. நீங்க ஐ.டி ஒரு நூறு ரூபாய்காவது வாங்க வேண்டாமான்னு கேட்கறார். டீ குடிச்சிட்டு மிச்ச சில்லறையை கேட்டா... என்ன சார் இப்படி அசிங்கமா சில்லறையை கேட்கறீங்க, எதாவது பூமர், சாக்லேட் எடுத்துக்கோங்கன்னு சொல்றாரு. என்னோட பேசிக் மாடல் மொபைல பார்த்திட்டு சித்தப்பா என்னடா ஒரு ஆப்பிள் வெச்சிக்க வேணாமா? நீயெல்லாம் என்ன ஐ.டி இன்ஜினியறோ!ன்னு கேட்கிறார். நாம ஏதோ ஆகாசத்த பிச்சுகிட்டு சம்பளம் வாங்குற மாதிரி இந்த சமூகம் நம்மள பார்க்குது. என் வாழ்க்கையை நான் எப்படி இவங்களுக்காக வாழ முடியும்?"
"சரி எதுக்கு இவ்ளோ சூடாகரீங்க? ஒரு கல்யாணத்தை பண்ணி செட்டில் ஆக வேண்டியது தானே?"
"அது ஒண்ணு தான் குறைச்சல் எனக்கு. இன்னிக்கு என் தங்கச்சி கையை புடிச்சு அழறா! காத்தால ஒன்பது மணிக்கு அவ வீட்டுலேந்து கிளம்பினா வீட்டுக்கு போக நைட் ஒன்பது மணி ஆகுது. குழந்தைக்கு காய்ச்சலாம், ரொம்ப கொதிக்கிறதிங்குறா? 'அப்பத்தாவ பார்த்துக்க சொல்லிட்டு இங்க கிளம்பி வந்திட்டேன், வேலையை விட்டுடறேன்னு சொன்னா அவர் கேட்க மாட்டேங்குராறு நீங்க அவருக்கு சொல்லி புரிய வைங்கன்னு' சொல்றா. நான் மச்சான் கிட்ட சொன்னா 'சென்னை விலைவாசி ஜாஸ்தியா இருக்கு ரெண்டு பேர் வேலை பார்த்தாதானே மச்சான் நல்லா காசு சேர்த்து நாளைக்கு பையனுக்கு நல்ல வாழ்க்கை உண்டாக்கித் தர முடியும்னு' சொல்றாரு.
இத்தனைக்கும் அவருக்கு ஊர்ல நல்லா சொத்து இருக்கு. ஆனாலும் கேட்டா அப்பா சேர்த்தது, நானா சொந்தமா என் பையனுக்கு சேர்த்து வைக்கணும்னு சொல்றாரு.
இதே மாதிரி ஒவ்வொரு பையனும் அப்பா சேர்த்து வெச்சது வேண்டாம் நாம தனியா சேர்த்து வைக்கனும்னு நெனச்சா அப்போ ஒவ்வொரு அப்பாவும் எதுக்கு சேர்க்கணும்? எல்லாத்தையும் செலவு பண்ணிட்டு ஜாலியா இருக்கலாமே! இவங்க குழந்தையை நல்லபடியா வளர்கணும்னு மறந்திடறாங்க சும்மா காசு சேர்க்கணும், காசு சேர்க்கணும்னு மட்டும் அலையறாங்க. என் வாழ்க்கைக்கே என்ன தேவைன்னு என்னால இப்போ உணர முடியல, இதுல ஒரு கல்யாணம் பண்ணி என் பையனுக்கு இது தேவைப்படும்ன்னு நான் எப்படி சொல்ல முடியும்? அதுக்கு தான்பா எனக்கு இந்த கல்யாணமே வேணாங்குறேன்னு சொல்றேன்."
வணிகமயமாக்கப்படும் அன்பு:
பட்டர்ப்ளை எபக்ட், கேயாஸ் தியரி என்றெல்லாம் கூறுவார்கள் உலகத்தில். ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வின் தாக்கம் வேறொரு இடத்தில் கண்டிப்பாக உணரப்படும் என்பது தான் அதன் சாராம்சம். இப்போது கூறப்படும் ஒரு கதையும் நிகழ்வுகள் முன்கூறிய கதையின் தொடர்ச்சியாக நிகழ்வில் அமைய வாய்ப்புண்டு.
ஐ.டி நிறுவனத்திலே பத்து வருடங்களாக வேலைப் பார்ப்பவர் இவர். ஐ.டியிலே ஒரு பெண்ணை காதலித்து மணமுடித்த இவரின் வாழ்க்கையும் ஏறத்தாழ முன் கூறிய கதையுடன் ஒத்துப்போகும். குழந்தைக்கு நிறைய காசு சேர்க்க வேண்டும் என்று இவரின் மனைவியும் அலைந்து ஆன்சைட் வாய்ப்பினை பிடித்து வெளிநாட்டிற்கு சென்று விட்டார். தினமும் இவ்விருவர் ஆன்லைனில் ஸ்கைப்பினில் பேசுவதுண்டு. டேய் ஒரு முறை அம்மாக்கு ஹாய் சொல்லுடா? இங்க பாரு டா? என்று தினமும் இவர் மனைவி தன் மகனிடம் குழைகிறாராம். ஆனால் இதற்கெல்லாம் செவி சாய்க்காமல் அந்த ஐந்து வயது சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே இருக்கிறானாம்.
'டேய் அம்மா உனக்கு என்னெல்லாம் வாங்கிருக்கேன்னு பாரு டா' என்றார் இவர் மனைவி. உடனே அடித்து பிடித்து லாப்டாப் முன் அமர்ந்தான் அச்சிறுவன். இப்போதெல்லாம் குழந்தைகள் எவ்வளவு கமர்ஷியலைஸ்ட் ஆகிட்டாங்கன்னு பார்த்தீங்களா? என்கிறார் அவர்.
இது யார் தவறு? அக்குழந்தையின் தவறா? பணம் சேர்ப்பது மட்டும் தான் கடமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் இதைப்போன்ற பெற்றோர்கள் நாளை சமுதாயத்தில் தன் மகன் எத்தகு குடிமகனாக வருவான் என்று யோசித்து பார்த்திடாமல் பணம் பின்பு மட்டும் ஓடுவதே இதற்கு காரணம். சரி, இத்தனை நாட்கள் தாத்தா பாட்டி இருக்கும் தைரியத்தில் குழந்தையை அவர்களிடம் விட்டுவிட்டீர்கள் நாளைக்கு உங்களுக்கு வயதாகும் போது குழந்தைகள் உங்களினும் பிசியாக இருப்பார்களே அப்போது அவர்கள் உங்களை எங்கே விடுவார்கள் என்று யோசித்து பார்த்தீர்களா?
காலியான பேருந்தில் இரவில் பயணம் செய்யும்போது இந்த அனுபங்கள் எல்லாம் மனதிற்குள் புகுந்து 'எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்' என்ற சேது பாடலை செவிகளில் ஒலிக்கச் செய்கிறது.

No comments:

Post a Comment