Thursday, February 6, 2014

நாய்

கடந்த பொங்கல் அன்று இரவில் வித்யாசமாக ஒரு சத்தம் வரவே வெளியில் சென்று பார்த்தேன். அப்பொழுது கருப்பும் பழுப்புமாக இரண்டு நாய்க்குட்டிகள் பனி / பசி தாங்காமல் கத்திக்கொண்டிருந்தன. பிறந்து சில நாட்களே ஆகி இருந்த சூழ் நிலையில் பெண் குட்டிகள் என்பதால் யாரோ வளர்க்க சங்கடப்பட்டு தெருவில் விட்டு விட்டனர். பாவமாக இருந்ததால் அந்த குட்டிகளுக்கு அந்த நேரத்தில் சிறிது பாலை ஒரு டப்பாவில் வைத்து கொடுத்தேன். குடித்த இரு குட்டிகளும் வீட்டு வாசலிலேயே படுத்துக்கொண்டு விட்டன.

அடுத்த நாளில் இருந்து அந்த இரு குட்டிகளும் தெருவில் உள்ள குழந்தைகளின் செல்லப்பிராணிகளாயின. பிஸ்கட், பிரட், பால் என ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குழந்தைகளால் கொடுக்கப்பட்டு கொழு கொழுவென வளர துவங்கின. இதில் கருப்பு நாய் (ப்ளாக்கி) நாட்டு நாய் ஆகும். பழுப்பு நாயான பிரவுனி ஏதோ ஜாதி நாயின் வழித்தோன்றல். தெருவில் இருந்த ஒரே ஒரு நபர் மட்டும், இது பெட்டை நாய்கள். எனவே வளர்ப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. கடுவனாக இருந்தால் நன்றாக வளர்க்கலாம். எங்காவது கொண்டு சென்று விட்டு விடுங்கள் என்றார்.



ஆனால் வீட்டிற்கு வந்த வெளி நண்பர்களில் சிலர் நாயின் கால் நகங்களை பார்த்துவிட்டு இது அதிர்ஷ்டம் என்றும் மேலும் இது தானாக வந்துள்ளன. எனவே வளருங்கள் என்றனர். அதிலும் ஒரு நண்பர் இப்படி வரும் நாய்களை எங்காவது கொண்டு சென்று விட்டால் நமது வீட்டில் செல்வம் குறையும் என்று கூட பயமுறுத்தி விட்டார். நான் படிக்கிற காலத்தில் என் குருநாதர் ஒரு முறை சொன்னது என் நியாபகத்தில் வந்தது. அது என்னவெனில் போன ஜென்மத்தில் நமக்கு யாரேனும் துரோகம் விளைவித்திருந்தால் அவர்கள் மறு ஜென்மத்தில் நாயாக பிறந்து விசுவாசமாக இருந்து கடனை கழிக்கும் என்று. அது போல ஒரு ஜென்ம தொடர்போ என என்னை சிந்திக்க வைத்தது. எது எப்படியோ சிவராத்திரி முடிந்து விட்டால் குளிர் பனி இருக்காது. அதற்கப்புறம் இதை வளர்க்கலாமா அல்லது எங்காவது உணவுகள் கிடைக்கும் இடத்தில் (கோவில் மாதிரி) விட்டு விடலாமா என்பதை முடிவெடுக்கலாம் என்று விட்டுவிட்டேன். இதற்கிடையில் அந்த குட்டிகள் மிகுந்த பாசத்துடன் எனது அன்னையுடன் வாக்கிங், எங்களுடன் விளையாட்டு என நன்கு ஒட்டிக்கொண்டது. பக்கத்து வீட்டுக்காரரும் ஒரு பாதுகாப்பிற்காக இதனை வீதியிலேயே இருக்கும்படி வளர்க்கலாம் என்றார்.

இந்த சூழ் நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு மணி சுமார் 2 அளவில் திடீரென்று இரு குட்டிகளும் குரைக்க தொடங்கிவிட்டன. எனக்கு உடன் முழிப்பும் தட்டிவிட்டது. எனினும் ஏதேனும் எலி, பூனையை பார்த்திருக்கும் என சமாதானமாகி தூங்க எத்தனித்த வேளையில் ஒரு குட்டி குரைப்பது நின்றுவிட்டது. மனதில் ஏதோ பட வெளியில் வந்து பார்த்தால் பிரவுனியை காணவில்லை. ப்ளாக்கி பயத்துடன் என் காலை பின்னிக்கொள்ள எனக்கு விளங்கியது. யாரோ ஜாதி நாய் என்பதால் அதை மட்டும் லவட்டி விட்டனர் என்று. நேற்றெல்லாம் மனது பிசைய ஆரம்பித்து விட்டது. எனினும் வளர்ப்பதற்கு தானே யாரோ திருடியிருக்கிறார்கள். எனவே நல்ல முறையில் அது வளர்க்கப்பட்டு விடும் என்று நம்பிக்கையானேன்.


எங்கிருந்தாலும் வாழ்க பிரவுனி………… தெரு நாய் என்றால் திரிஷாவிற்கு மட்டும்தான் பாசம் வருமா என்ன?

No comments:

Post a Comment