கரூர் ஒரு தொழில் நகரம். இங்கிருக்கும் முக்கால்வாசி மக்களும் ஜவுளி,
கொசுவலை உற்பத்தி, பஸ் கட்டுமானம் போன்ற தொழிலில் சார்ந்தே வாழ்கின்றனர். இந்த
தொழில் நன்றாக இருந்தால்தான் ஹோட்டல் போன்ற இதனை சார்ந்த தொழில்களும் நன்றாக இருக்கும்.
ஆனால் இந்த நகரத்திற்கென பல பிரச்சனைகள் இருந்துகொண்டே இருந்தன.
திருச்சியில் இருந்து கரூருக்கு ரயில் சேவை இருப்பதால் குளித்தலை,
பெட்டவாய்த்தலை, லாலாபேட்டை, மாயனூர் போன்ற சிறு நகரத்து மக்களும் தினசரி கரூர்
வந்து வேலை பார்த்து பிழைக்கின்றனர். ஆனால் கரூரில் இருந்து திண்டுக்கல்
மார்க்கத்தில் ரயில் சேவை இருந்தும் பயணிகள் ரயில் இல்லாததால் பேருந்தை நம்பியே
வாழ்க்கை ஓடுகிறது. கோவைக்கு ரயிலில் போவதாக இருந்தால் ஈரோடு, திருப்பூர் வழிதான்.
வெள்ளகோவில் மற்றும் காங்கயத்திற்கென தண்டவாளமே இல்லை. சேலத்துக்கு தனி வழி இன்றி
ஈரோடு வழியாகவே இயங்கி வந்த ரயில் சேவை தற்சமயம் தனி வழியாக (நாமக்கல் வழி)
இருப்பு பாதை பல வருட கிடப்பில் இருந்து தற்சமயம் துரிதப்படுத்தப்பட்டு சேவையும்
துவங்கப்பட்டுள்ளது. விளைவு யாதெனில் கரூருக்கு கூடுதலாக ஒரு ரயில் கிடைத்தது.
பழனியிலிருந்து சென்னை செண்ட்ரலுக்கு சேலம் வழியாக தினசரி விரைவு ரயில் கிடைத்தது.
இது நாள் வரை சென்னைக்கு செல்லவேண்டுமெனில் இரவில் வரும் மங்களூர் வண்டிதான்
அதுவும் எக்மோர் வரைதான். இந்த புதிய பாதை பிற்காலங்களில் கரூருக்கு புதிய
நம்பிக்கையை அளித்துள்ளதென்னவோ உண்மை.
சாலை வசதிகளும் சமீப காலங்களில் நகருக்குள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மண்மங்கலம் என்னும் புதிய தாலுக்கா பிரிக்கப்பட்டுள்ளது. நகரின் பேருந்து நிலையம்
கவலைக்கிடமாக இருந்த நிலையில் முற்றிலும் செப்பனிடப்பட்டு புதிய முறையில் தயாராகி
வருகிறது. மேலும் விளையாட்டு அரங்கம் (ஸ்டேடியம்) பூங்கா என நகரின் பணிகள்
அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பசுபதி பாளையம் செல்ல இருந்த ஒரே ஒரு தரைப்பாலம்
தற்சமயம் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட உள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு வரை மின்வெட்டு என்பது அனைத்து தொழில்
அமைப்புகளயும் பாதித்திருந்த நிலையில் தற்சமயம் மின்வெட்டு இல்லாத நிலை நிலவி
வருகிறது. இது சிறு குறு தொழில்களை காப்பாற்றி வருகிறது.
மேலும் இதுபோன்ற நற்பணிகள் தொடர வேண்டும் என நம்பிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment