Wednesday, August 17, 2011

கோவில்கள் – கருவூலங்கள்


சமீபத்தில் கேரளா பத்மனாபசாமி கோவிலின் உள்ளே கோடிக்கணக்கில் நகை பொக்கிஷங்கள் கிடைத்திருப்பது நாம் அறிந்ததே. எதனால் இவ்வளவு பொக்கிஷங்களை கோவிலின் உள்ளே வைத்திருந்தனர்? இதே போல மற்ற கோவில்களை தோண்டினால் தங்கம் கிடைக்குமா? இது அனைவருக்கும் மனதில் தோன்றும் கேள்வியாக உள்ளது.



முதலில் இதற்குண்டான விடையை தேடுவதற்கு முன் நாம் சிறிது பின்னோக்கி செல்லவேண்டி இருக்கிறது. அதாவது 1000 வருடங்களுக்கு முன்பு.

தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா மற்றும் ஆந்திரம் ஆகிய மாகாணங்களை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டனர் என்பது நாம் அனைவரும் அறிந்தது. இந்திய வரைபடத்தில் இதற்கு மேல் இருக்கும் ஒரிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசங்களை மராட்டியர்களும், ராஜபுத்திரர்களும் மற்றும் சில ராஜ வம்சங்களும் மாற்றி மாற்றி ஆண்டுள்ளனர். டெல்லியும் சுற்று வட்டாரமும் மொகலாய சாம்ராஜ்ஜியமாகவே இருந்தது. இந்த மொகலாய மன்னர்கள் முறையே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து வந்து ஆட்சியை பிடித்தவர்கள். பாபர், ஹுமாயூன், அக்பர் என அவர்களது சாம்ராஜ்ஜியம் மிகவும் பெரியது. இந்த மொகலாய மன்னர்களிடம் ஒரு பெரிய பயம் இருந்தது. அதுதான் யானைப்படை. அவர்களிடம் இல்லாத இந்த படை தென்னிந்தியாவில் பலமான படையாக இருந்தது. மேலும் மராட்டிய மன்னர்களை தாண்டி அவர்களால் தென் இந்தியாவிற்குள் நுழைய முடியவே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மொகலாய மன்னர்கள் ஒவ்வொருமுறை டெல்லி மற்றும் பிற நாடுகளை கைப்பற்றிய போது அவர்களின் முக்கிய குறி இந்துக்களின் கோவில்களே (மதனின் வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள் புத்தகத்தில் இதன் விளக்கம் அதிகம்). கோவில்கள் எல்லாம் மொகலாய படையெடுப்பகளின்போது கொள்ளையடிக்கப்பட்டன. திப்புவின் காலத்திற்கு பிறகுதான் மொகலாய மன்னர்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைந்தார்கள். தமிழகத்தின் ஆற்காடு மாவட்டங்கள் அவர்களது தலை நகரங்களாக இருந்து வந்துள்ளது. திண்டுக்கல்லும் இவர்களது பிடியில் இருந்த நாடுதான் (இப்பொழுது ஊர்களாக நாம் பாவிக்கும் பகுதிகள் அன்று நாடுகளாகவே அறியப்பட்டன). திண்டுக்கல் நாட்டு மொகலாய மன்னர் ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்து சிவகங்கை நாட்டின் ராணிக்கு பிரசவ நேரத்தில் அடைக்கலம் கொடுத்தவர் என்பது இதில் முக்கியமாக கொள்ளவேண்டியது. விசயத்திற்கு வருவோம்.

சோழ மன்னர்கள் பெரும்பான்மையாக ஆண்ட பகுதிகளான தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் வேறு மன்னர்கள் நுழையக்கூட முடியவில்லை. ராஜேந்திர சோழன் ஒரிசா வழியாக கங்கை வரை சென்றவன் எனினும் டெல்லி பக்கம் திரும்பவே இல்லை. சோழர்களது கப்பற்படை யாராலும் முறியடிக்க முடியாததாக இருந்ததால் அவர்கள் அந்தப்படை வலிமையை கொண்டு மலேயாவரை போரிட்டு வென்றனர். ஆனால் சோழர்கள் வைணவத்தை தழுவாதற்கள் என்பதால் சிவாலயங்கள் மட்டுமே கட்டி வந்தனர். சிவன் கோவிலில் லிங்கத்திற்கு ஆபரணங்கள் பூட்டி வழிபாடு என்பது திருவண்னாமலை மற்றும் குளித்தலை ஐயர்மலை ரத்னகிரீஸ்வரருக்கு மட்டுமே. மற்ற அனைத்து கோவில்களிலும் வெறும் வேஷ்டியை சுற்றி பட்டையை போட்டு தீபம் காட்டி விடுவர். அதனால் சிவாலயங்களில் செல்வம் குவித்து வைக்கப்படவில்லை. புராண இதிகாசங்களின்படி உலகத்தினை காக்கும் கடவுளாக கருதப்படும் விஷ்ணு அதற்கான செலவினை குபேரனிடம் வட்டிக்கு பெற்று செலவு செய்வதாக ஐதீகம். அவ்வகையில் அலங்காரப்ப்ரியராக விஷ்ணு இருப்பதால் பெருமாள் கோவில்களில் பொக்கிஷங்கள் குவிக்கப்பட்டன. இன்றும் திருப்பதிக்கு வருமானம் வருவதற்கு காரணமும் இதுதான். இப்பொழுது கேரளாவில் இருக்கும் பத்மனாபசாமியும் பெருமாளே. எனவே தமிழ் நாட்டில் இருக்கும் சிவாலயங்களை விட பெருமாள் கோவில்களில் மட்டுமே பொக்கிஷங்கள் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் கேரளாவில் சேர மன்னர்களின் தோன்றல்களாக வந்த அரசர்கள் கோவில் சொத்தை காப்பதில் மிக தீவிரமாக இருந்து வந்துள்ளனர். மேலும் சிற்றரசர்கள் என்னும் அமைப்போ, பாளையக்காரர்கள் என்ற அமைப்போ அங்கு இருக்கவில்லை. அதனால் பொக்கிஷங்கள் எளிதில் இன்று வரை பாதுக்கப்பில் இருந்து வந்துள்ளன.

ஆனால் தமிழ் நாட்டில் சோழ மன்னர்கள் காலம் முடிந்ததும் களப்பிரர்கள், தொண்டைமான்கள், பாளையக்காரர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் என வேறு வேறு கலாச்சார அரசாங்கங்கள் நடைபெற்றன. எனவே மாற்றி மாற்றி போர்கள் நடக்கும் போது கோவில்களின் பொக்கிஷங்கள் களவு கொள்ளப்பட்டன. ஒரு மன்னர் இன்னொரு நாட்டின்பால் போர் தொடுக்கும்போது அவன் மனதில் கொள்வது இரண்டுதான். ஒன்று கோவில் பொக்கிஷங்கள், பசுமாடுகள். இதன்பிறகே கோட்டையை கைப்பற்றுவர். ஒருகாலத்தில் சேர நாட்டின் தலை நகராக இருந்த கரூரில் இன்று மன்னர்கள் வாழ்ந்ததற்கான சுவடு கூட இல்லை. காரணம் தொடர்ச்சியான சோழ படையெடுப்புகள்தான்.

இதை எல்லாம் வைத்து ஆராயும்போது தமிழ் நாட்டில் கோவில்களில் பொக்கிஷங்கள் இருப்பு என்பது பூஜ்ஜியம்தான். ஆனால் எல்லா கோவில்களிலுமே சிலைகளின் அடியிலும் கோபுர கலசங்களிலும் ஐம்பொன்கள் இருக்கும். ஆனால் பத்மானபசாமி கோவிலில் இருப்பது போல புதையல் எங்கும் இருக்க வாய்ப்பில்லை. இவ்வளவு பொக்கிஷங்களை கண்டெடுக்கும் அரசாங்கம் அதனை போதிய பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும். கோவில் சொத்து குல நாசம் என்பதால் கொள்ளை போகாமல் பாதுகாப்புடன் அடுத்த தலைமுறைக்கு சென்றடையவேண்டும்.