Wednesday, October 28, 2009

உறவுகள் மேம்பட

உறவுகள் மேம்பட .....
குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க
 1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
 2.. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.
 4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
 
 5. நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
 
 6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
 
 7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
 
 8. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
 
 9. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
 
10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
 
11. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.
 
12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
 
13. மற்றவர் கருத்துக்களில் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்துக் கொள்ளாதீர்கள்.
 
14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன் படுத்தவும் தவறாதீர்கள்.
 
15. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்துக் கொள்ளாதீர்கள்.
 
16. பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
 
17. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
 
18. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.
                                                                          
                                                                                                                                                       
                                                                                                                               - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி



sent By :Ramesh Kumar

Mathiyalagan






To view his blog CLICK HERE


-

காலத்தின் அருமை

காலத்தின் அருமை

மூன்று அமெரிக்கர்கள் இத்தாலி ரோம் நகர் வந்து போப் பாண்டவரைத் தரிசித்தனர். முதல் நபரைப் பார்த்து "நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறீர்கள்" என்று கேட்டார் போப். "ஆறு மாதம்" என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாகச் சுற்றி பார்க்க மாட்டீர்கள்முடியாது என்றார் போப். அடுத்தவர் பதறிப் போய் நான் மூன்று மாதம் தான் தங்கப் போகிறேன் என்றார். "நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள்" என்றார் போப். பிறகு மூன்றாமவரைப் பார்த்து "நீங்கள் எவ்வளவு நாட்கள் தங்குவதாக எண்ணம் என்றதும், அவர் "ஒரு வாரம் தான் எனக்கு விடுமுறைஅதற்குள் நான் எப்படியாவது இத்தாலியைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்". போப்பாண்டவர் சிரித்தபடி "ஒரு வாரம் தான் என்றால் நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள்…" என்றார். பிறகு அவரே காரணமும் கூறினார். "நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப் படுகிறவர்கள் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் என்று எதையுமே முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்" என்று அழகான விளக்கம் அளித்தார்.

"பிறகு", "பிறகு" என்று ஒத்தவைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.



Wednesday, October 21, 2009

தூரத்தில் இருக்கும் பக்கத்து வீடுகள்

தூரத்தில் இருக்கும் பக்கத்து வீடுகள்

ஹலோ ஃப்ரெண்ட்ஸ்.. எப்படி இருக்கீங்க? நலம்தானே? ரொம்ப நாள் ஆச்சு கடிதம் எழுதி. அதான்.. கிளம்பிட்டேன். ஒரு வித்யாசமாக இருக்கட்டுமே என்று இந்த கடிதத்திற்கு ஒரு தலைப்பு வைத்தேன். தலைப்பும் கூட மிக பொருத்தமாக அமைந்து விட்டது. தூரத்தில் இருக்கும் பக்கத்து வீடுகள்.. என் மனதில் எளிதில் தோன்றிய வாசகம்.

ஆலம்பாடி மைன்ஸ் போஸ்ட்.. அனேகமாக நம்மில் அனைவருக்கும் இது தான் ஆரம்ப விலாசம். (இப்ப இல்லை). நம்ம லைஃப்ல ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்த எவ்வளோ நல்லா இருக்கும். ஆனாலும் அந்த ரீவைண்ட் பட்டன் நம்ம மனசுக்கு இருக்கு. நான் சொல்வது சரிதானே? என் மனசில இருக்கும் பட்டனை நான் ஆன் பண்ணிட்டேன். கூடவே நீங்களும்தான்.

நால்ரோட்டில் இருக்கும் அந்த ஆர்ச்சை தாண்டி உள்ள வந்தா ஒரு 3 கி.மீ தூரத்தில ஒரு தனி உலகம். சீதை நகர்ன்னு பேர் இருந்தாலும் கூட குவாரிசைட்ன்னு சொன்னா பட்டுன்னு ஞாபகம் வந்துடும். இடையில உக்குவார்பட்டி, பண்டிதகாரனூர் பிரிவுன்னு ரெண்டு ஸ்டாப் வேற. அப்படியே பஸ் வந்து குவாரிக்குள்ளே வந்ததும் இருக்குற ரெண்டு யூனியன் ஆபீஸை சுத்தி வந்தா ஸ்டாப் வந்தாச்சு. (அந்த யூனியன் ஆபீஸில் எந்த ஒரு மீட்டிங்கும் நடந்ததா எனக்கும் நினைவில்லை). மொத்தம் 3 பில்டிங்ஸ் இருந்தாலும் 2 பில்டிங்தான் அதிக அளவில் நம்மால் கையாளப்பட்டிருந்தது. அப்படியே ஊருக்குள்ளே வந்தா சந்தைப்பேட்டை, ஊராட்சி ஒன்றிய பள்ளி, ஸ்டோர்கடை, டார்மெண்ட்ரி, கிளப் வளாகம்னு அப்படியே காலணி வந்துடும். அனேகமா சரவணன் வீடுதான் முதல்ல வரும். சுப்பன் வீடு அடுத்து.. இப்படி நம்ம உலகம் விரியும். 1985 ல இருந்து கொஞ்சம் பின்னோக்கி வருவோமா? இந்த டைம்ல ஒரு குரூப் புறத்தாக்குடில படிச்சிகிட்டு இருந்தப்போ ஒரு குரூப் குவாரி பஞ்சாயத்து ஸ்கூல்லயே படிச்சாங்க. ரெண்டாவது குரூப்தான் நான். செல்வபெருமாள் வாத்தியார், தர்மராஜ் வாத்தியார், கமலா டீச்சர் (மத்தவங்க பேரு மறந்து போச்சே) இப்படி எல்லாரும் ட்ரில் குடுத்து நம்ம ஆரம்ப லைஃப் இனிதே தொடங்கியது. ஸ்கூலுக்கு முன்னாடி ரெண்டு யூக்கலிப்டஸ் மரம் கூட இருக்கும். இப்ப இருக்கான்னு தெரியலை. அப்படி இப்படின்னு 5ம் கிளாஸ் தாண்டினதும் நம்ம இராணி மெய்யம்மை ஸ்கூல் லைஃப். கொஞ்சம் கார சாரமாத்தான் ஆரம்பிச்சது. முதல் மாற்றம் யூனிஃபார்ம் அடுத்தது உக்காரத்துக்கு பென்ச் சிஸ்டம். முதல்ல மஞ்சள் கலர் சட்டை. அப்புறம் பெரிய கட்டம் போட்ட சட்டை. அப்புறம் சின்ன கட்டம். இவ்வளோதான் ட்ரஸ் மாற்றங்கள். எக்ஸ்ட்ராவாக ஒரு டையும், ஷூவும். கவுண்டர் கடைல தான் எல்லா மிட்டாய் பர்ச்சேஸும். லேபிள் கலெக்சன் பண்றது பெரிய ஹாபி. நிறைய புத்தகங்கள், நோட்டுக்கள். எல்லாமே நமக்கு புதுசு. அதே மாதிரி டீச்சர்ன்னு கூப்பிட்டுகிட்ட இருந்த நாம மிஸ்ன்னு கூப்பிட ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல கிளப்ல நடந்துகிட்ட இருந்த ஸ்கூல் நான் ஏழாம் கிளாஸ் முடிக்கிற நேரத்தில புது கட்டடத்துக்கு மாற ஆரம்பிச்சது. இந்த பீரியட்ல மறக்க முடியாத வாத்தியார் வீரமலை. வாய்ப்பாடு ரவுண்ட் முடியறதுக்குள்ள அவனவனுக்கு ஒன்னுக்கு போயிடும். அடி பின்னிடுவார். காலைல அவர் டிவிஎஸ்ல ஸ்கூல் கிராஸ் பண்ணி எலிமெண்ட்ரி ஸ்கூல் போகும்போதே கலக்க ஆரம்பிச்சிடும். ஆனா அவர் போட்ட பிள்ளையார் சுழிதான் நம்ம எல்லாரையும் இன்னைக்கு நிமிர்ந்து உக்கார வைச்சிருக்கு. கோவிந்தசாமி வாத்தியாரை பற்றி நான் சொல்லவே தேவையில்லை. மினிமம் 4 குச்சி உடைச்சிட்டுதான் ஹிஸ்ட்ரியே ஆரம்பிப்பார். ஆனால் இன்னைக்கு யோசிச்சு பாத்தா ஹிஸ்ட்ரிக்கு இவ்வளோ அடி அதிகமோன்னு தோணுது.

வெள்ளிக்கிழமை இரவு வந்துட்டா எப்படிடா ஏமாத்திட்டு சினிமா பாக்குறதுன்னு ஒரு குரூப் டிஸ்கஸ் நடக்கும். நம்ம களவானித்தனமா யோசிக்கும்போது கோவிந்தசாமி வாத்தியார் நம்மளைவிட யோசிச்சு பிடிச்சிறுவார். முத்துலக்‌ஷ்மி டீச்சர், பாத்திமா, ரத்னா, கலவாதி, லலிதா மிஸ் இப்படி எல்லாருமே நாம நல்லா இருக்கனும்னு மனப்பூர்வமா நினைச்சு உழைச்சாங்க. அந்த வயசில நமக்கு வில்லனா தெரிஞ்ச அவுங்கள்ளாம் இப்ப நம்ம மனசில ஹீரோவாயிட்டாங்க. ராஜூன்னு ஒரு பி.டி.வாத்தியார் இருந்தார். அனேகமாக அவர்தான் நமக்கு சரிசமமாக பழகியவர். அப்புறம் தி கிரேட் புண்ணியமூர்த்தி வாத்தியார். எல்லருக்கும் இவர் பேர் தெரியாதுன்னு நினைக்கிறேன். தமிழ் அய்யான்னு சொன்னா போதுமே! இவர் கிளாஸ் ஜாலியா போகுமா.. இல்லை களேபரமான்னு யாரலையும் சொல்லவே முடியாது. அன்பு, அடி.. இவருக்கு மிஞ்சின ஆளு இல்லை. என் அண்ணா, நான், என் தம்பி என எலலாருக்கும் கிளாஸ் எடுத்தவர். போர்ட்ல ரொம்ப வேகமாக எழுதக்கூடியவர். ஓரளவுக்கு சோதிடமும் தெரிஞ்சவர்ன்னு ரொம்ப நாள் கழிச்சி நான் தெரிஞ்சிக்கிட்டேன். கடைசியா சௌந்தர்ராஜன்னு ஒரு பி,டி.வாத்தியார் இருந்தார். அவரும் நல்லவரே.

வாரத்தில் ஒரு சினிமா மட்டுமே சாத்தியம் என்று இருந்த நிலையில் கேபிள் டி.வி. கொண்டு வந்த மாற்றம் மிகப்பெரியது. முதலில் குண்டு செந்திலால் நிர்வகிக்கப்பட்ட கேபிள் பிறகு நாகராஜ் கையில் மாறியது. மதியம் 2 மணிக்கு ஒரு காட்சி. இரவு 8 மணிக்கு ஒரு காட்சி என சினிமா காண்பிக்கப்பட்டது. ஆனால் இந்த நிலை வெகு நாள் நீடிக்கவில்லை. 1994ல் வந்த சன் டிவி வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. ஆனால் சாயங்காலம் 6 முதல் இரவு 8 மணி வரை இருந்த டிவி வாழ்க்கையை ராஜ் டிவி (முதன் முதலில் 24 மணி நேர சேனல்) முற்றிலும் மாற்றியது. பிறகு வந்த விஜய், ஸ்டார், கே டிவி என சேனல்கள் கூடிக்கொண்டே போய் இப்ப அனேகமாக 21 தமிழ் சேனல்கள் தெரிகிறது.

ஸ்ரீராம் வீட்டு கொல்லையில் விளையாடப்பட்ட பேந்தா, அனல் வீட்டு சைட் ரோடில் கிரிக்கெட், செவன்ஸ்டோன், இராம்குமார் வீட்டு எதிரில் கிரிக்கெட், அனல் வீட்டு மாமர அடியில் அனிபுல், பல வீட்டு திண்ணையில் விளையாடப்பட்ட ரம்மி இப்படி நினைவில் நின்றவை நிறைய. இதையெல்லாம் விட சுவராசியமானது மீன் பிடித்தல். அதில் கருவாயன், ப்ளாக்கன் இருவரும் ஸ்பெசலிஸ்ட். அனேகமாக குவாரி பறவைகளான நாம் அனைவருமே தூண்டில் பிடித்து இருக்கிறோம். ஒரு முறை ஒரு செட்டாக மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது யாருக்குமே மீன் கிடைக்கவில்லை. அப்போது பைராம்கான் தான் ஏற்கனவே பிடித்து வைத்திருந்த மீனை யாருக்குமே தெரியாமல் மீண்டும் கொக்கியில் மாட்டி தண்ணியில் போட்டுவிட்டு பிறகு எல்லாரும் பார்க்கிறமாதிரி எடுத்த போது இருந்த மீனும் போய்விட்டது. இப்படி மறக்க இயலாத காமெடிகள் அதிகம்.

இப்படி அருகருகே இருந்த வீட்டு உறவுகள் இன்று எங்கு இருக்கிறோம் என்றே தெரியவில்லை. குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறை கூட சந்திக்க இயலாத நிலையில் ஒரு வாழ்க்கை. எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் தன்னிறைவை அடைந்து விட்டாலும் குவாரியில் கொண்டாடிய தீபாவளியை போல இன்னும் ஒருமுறை கொண்டாட முடியாதா என மனம் ஏங்குவதை அறிய முடிகிறது. 100 ரூபாய்க்கு குஜிலியம்பாறையில் பட்டாசு வாங்கி ஒரு கூடை நிறைய என் அண்ணா கொண்டுவந்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஆனால் இன்று 1000 ரூபாய் கொடுத்தாலும் கூட ஓலை பட்டாசு வாங்க முடிவது இல்லை. தீபாவளி என்றதும் ஸ்ரீராம் நினைவில் வந்து போகிறான்.

இரவு நேரங்களில் செந்திலுடன் சேர்ந்து கொண்டு ஏர்கன்னில் மைனா சுட்டது, அரை பரீட்சை லீவில் பொன் வண்டு பிடித்து முட்டை போட வைத்தது, கோவிந்தசாமி வாத்தியார் வீட்டு நைட் ஸ்டடி, வாலிபால் விளையாட்டுக்கள், தீபாவளிக்கு ஊர் சுற்றல் என மனதில் மட்டுமே நினைவில் வாழ்கிற பல விசயங்கள். அந்த சமயம் நம்மில் யாரிடமும் காமிரா இல்லாததால் விட்டுப்போன காட்சிகள் பல.
குறைந்த பட்சம் நமது இணையதளத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் புகைப்படங்கள் ஆறுதல் அளிப்பவை. நண்பர்களே! இன்னும் நிறைய படங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்வோம். வாரம் ஒருமுறையாவது குறைந்த பட்சம் இணையத்தில் கருத்துப்பரிமாற்றத்தை கண்டிப்பாக மேற்கொள்வோம் என உறுதி எடுப்போம். நம் சக்திக்கு மீறி நாம் பிரிக்கப்பட்டுவிட்டோம். ஆனால் நம் சக்திக்குட்பட்ட இணையத்தில் ஒன்றிணைவோம்.

வாழ்க வளமுடன்.

மிக்க அன்புடன்.
கார்த்திகேயன்.

Saturday, October 17, 2009

தீபாவ‌ளி - வாழ்த்துக்க‌ள்

அனைவ‌ருக்கும் தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்!!!

Thursday, October 8, 2009

Ramasubramani



Hi guys... Today i met our old chap Ramasubramani everloving guy at my office. Just he return back from dubai. Shared lot of sweet memories and updated so many things.. you can get him thru mail (subbs99us@yahoo.com / r.subramanian99@gmail.com) and his mobile number was 9952288323. Soon he will be with us in this blog. advance diwali wishes...
luv karthik.

Saturday, October 3, 2009