Wednesday, April 18, 2012

நந்தன ஆண்டு – எப்படி இருக்கும்?தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் என ஐயாவும் இல்லை இல்லை சித்திரைதான் என அம்மாவும் குடைந்து கொண்டிருக்கிற இந்த வேளையில் நமது பாரம்பரிய முறையில் பார்த்தால் சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்பது அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.

கடந்த ஆண்டான கர வருடத்தில் காலம் தவறிய மழையினால் பிரச்சினைகள் அதிகம் இருந்தது. இந்த நந்தன ஆண்டில் எப்படி எப்படி பலன்கள் இருக்கும் என்பதை விளக்கமாக சொல்லிவிடுகிறேன். சுத்த வாக்கிய பஞ்சாங்க கணித முறையில் கீழ்கண்ட பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

நந்தன வருடமானது உலக ஜாதக நட்சத்திரம் உத்திராடம் 1ம் பாதத்தில் கன்னி லக்கினத்தில் 4ம் பாதத்தில் தணுசு ராசியும் வர்க்கோத்திர யோகமும் சூரியன் மகா தசையில் சந்திர புத்தியில் சனியின் அந்தரத்தில் ஆதாயம் 65 ஆகவும் விரையம் 62 ஆகவும் வருவதால் (இலாபம் வெறும் 3 தான்) அரசாங்கத்திற்கு மிகுந்த பொருளாதார இழப்புகளும் தன நாசங்களும் இருக்கும். சிக்கன ஆட்சி நடத்தினால் தப்பலாம். கிழக்கில் மேகங்கள் உற்பத்தி இருப்பதால் 4 மரக்கால் மழையும் இருக்கும். வெள்ளி அன்று வருட ஆரம்பம் வருவதால் வருட ஸ்லோகத்தில் மழை குறைந்து பஞ்சம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால் மேகங்களின் அதிபதியான சுக்கிரன் பலமாக தெரிவதால் மழைக்கு பாதிப்பு இருக்கது என அறியலாம். ஆனால் பருவம் தவறிய மழையாகவே இருக்கும். இதனால் விலைவாசி ஏறலாம்.பணக்காரர்கள் தன விரையம் அடைந்து ஏழ்மைக்கு வருதலும் முக்கியஸ்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பின் நல்ல நிலைக்கு வருதலும் இருக்கும். சுக்கிரனுக்கு சஷ்டாஷ்டக தோஷம் இருப்பதால் மத்திய அரசுகளில் புதிய மாற்றம் வந்து பழைய அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். தவறு செய்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள்.

பருப்பு, சர்க்கரை, கோதுமை விளைச்சல் அதிகமாக இருந்து விலை குறையும். தென்மேற்கு பருவ காற்று ஜூன் 20 முதல் செப்டம்பர் மாதம் வரை நீடித்து நல்ல மழை கொடுக்கும். குஜராத், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்னாடகாவில் இதன் பொருட்டு நல்ல மழை இருக்கும். தமிழகத்தினை பொருத்தவரை தென் மேற்கு மழையினால் லாபம் இருக்காது. ஜவ்வாது மலையில் மழை முடிந்தபின்பு பனி அதிகமாக இருக்கும். இதனால் சென்னை, வேலூர், மதுரை, கர்னாடகா, ஊட்டி, கொடைக்கானலில் உறை நிலையினை ஒட்டிய பனி இருக்கும். வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 20ம் தேதி ஆரம்பித்து நவம்பர் 10 வரை கன மழை இருக்கும். இந்த மழை தமிழகத்திற்கு இலாபம் தரும்.

அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் அதிகம் இருக்கும். காசி, கயா போன்ற புண்ணிய ஸ்தலங்களில் பாதிப்புகள் தெரியும். மலைப்பிரதேசங்களில் பூமி அதிர்ச்சிகள் உணராலம். இந்த ஆண்டு 13 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி 2 பலமில்லாமல் போகும். 1 காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி தமிழகத்தினை தாக்கும். இதில் சென்னை, நாகை பலமாக பாதிக்கப்படும்.

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். பொன் வியாபாரிகள் நஷ்டமடைய நேரிடும். காகிதம் விலை குறையும். பஞ்சு விலை குறைந்து பின் ஏறும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் நன்றாக இருக்கும். வங்கிகளில் புதிய விதி முறைகள் வரும். வாசனை வஸ்துகள் விலை குறையும். விமான விபத்துகள் நிகழும். வெல்லம், சர்க்கரை, இனிப்புகள், கரும்பு, திராட்சை விலை குறைந்து பின் ஏறும். வருடத்தின் பின்பாதியில் சர்க்கரை விலை ஏறும். பூண்டு, வெங்காயம், மஞ்சள், தேங்காய் விலை குறையும். மதுபான விலைகளும் குறையும். மளிகை மற்றும் எண்ணெய் வகைகளுக்கு பற்றாக்குறை ஏற்படலாம். ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும்.

கந்தாய பலன்களில் பார்த்தால் பரணி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், அஸ்தம், சித்திரை, அனுஷம், பூராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு பாதிப்புகள் குறையும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு முதல் நான்கு மாதங்களும், ஆயில்யம், உத்திரம், ஸ்வாதி, கேட்டை மற்றும் சதயத்திற்கு மத்திய நான்கு மாதங்களும் அஸ்வினி, விசாகம் மற்றும் உத்திரட்டாதிக்கு கடைசி நான்கு மாதங்களும் கஷ்டம் மற்றும் நிம்மதி குறைவு ஏற்படும். திருவாதிரை, பூரம், உத்திராடம், ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பு பலன்கள் தராது அல்லது குறந்த நற்பலன்கள் என அறியவும்.

மொத்தத்தில் நன்மை தீமைகள் கலந்தே வருகிறது. பருவம் தவறிய மழையால் உபத்திரவம் உண்டு. வெள்ளிக்கிழமைகளில் புதிய வேலைகள் ஆரம்பித்தால் ஜெயமுண்டு.

Friday, April 13, 2012

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்அனைவருக்கும் இனிய நந்தன ஆண்டு நல்வாழ்த்துக்கள். நல்லதே நடக்க இறைவனை வேண்டுவோம்.

Monday, April 9, 2012

விஜயகாந்த் – ஒரு மாறுபட்ட பார்வைஇன்று அரசியலில் சில பலரால் கிட்டத்தட்ட காமெடியனாக காட்டப்பட்டு வரும் திரு.விஜயகாந்த் அவர்களின் பரிணாமத்தை மாறுபட்ட கண்ணோட்டத்தில் அலசவே இந்த பதிவு. இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்தே ஆகும்.

சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ் தான் பின்னாளின் ஒரு வெற்றிகரமான நடிகரான விஜயகாந்த் ஆவார். சினிமாவிற்குண்டான சில இலட்சணங்களை மீறிய தருணம் அது. சிகப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும் கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம்.நெடிய போராட்டத்திற்கு பின்பு “இனிக்கும் இளமை” என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரின் அடுத்த படமான “தூரத்து இடி முழக்கம்” மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்ற படமாகும். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பம் ஆனது. அந்த காலகட்டத்தில் ஓடும் குதிரையில் (இயக்குனர்) தான் ரஜினியும் கமலும் பயணித்த நேரத்தில் புதிய இயக்குனர்களின் தேர்வாக இவர் அமைந்தார். திறமையான புதிய இயக்குனர்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளி வந்த அனைத்து படங்களும் சக்கை போடு போட்டன. திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர் இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் என பட்டியல் நீளும். அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள், சின்னக்கவுண்டர், கேப்டன் பிரபாகரன், ஊமை விழிகள் என சிறு தயாரிப்பளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார்.இயக்குனர்கள் மட்டும் அல்ல. இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட / ஒத்துழைப்பு அளிக்கப்பட்ட நிறைய சினிமா பிரபலங்கள் உண்டு. பீலி சிவம், அ.செ.இப்ராகிம் ராவுத்தர், நடிகர் சரத்குமார், கசான்கான், அருண் பாண்டியன், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், விஜய் என இந்த பட்டியலும் நீளமே. இவ்வளவு ஏன்? கடந்த தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடிவேலு கூட இவரால் வளர்ந்தவரே. அறிமுகம் வேண்டுமானால் ராஜ்கிரணாக இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த்தான். சின்ன கவுண்டர் படத்தில் கவுண்டமணியால் ரிஜெக்ட் செய்யப்பட்ட வடிவேலுவை மீண்டும் பேசி சிபாரிசு செய்து நடிக்க வைத்தார். மீண்டும் கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கோயில் காளை திரைப்படத்தில் கவுண்டமணி முட்ட அமரனிடமும் கவுண்டமணியிடமும் பேசி வடிவேலுவை நடிக்க வைத்தார். இதை நடிகர் செந்திலே ஒரு பேட்டியில் தெரிவித்தார். இப்படி இவரால் வாழ்க்கை பெற்றவர்களே அதிகம். அதனால்தான் திரைப்பட உலகத்தில் எவரும் இவரை குறைத்து பேச மாட்டர். இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் திரை இயக்கம் தொடங்கிய போது இவரின் முதல் தேர்வாக அமைந்தவர் விஜயகாந்த்தான்.இவரின் நிர்வாகத்திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர். பல ஆண்டுகளாக கடனில் தவித்த, சிவாஜி, மேஜர், ராதாரவி போன்ற ஜாம்பவான்களாலும் கைவிடப்பட்ட திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமின்றி கையிருப்பையும் அதிகப்படுத்தினார். அனைத்து நடிகர்களையும் மலேசியாவிற்கு அழைத்து சென்று நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில் இவரது திறமையான நிர்வாகம் அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இவரின் தொலைக்காட்சி நிர்வாகமும் சிறப்பாக இருந்து வருகிறது.

அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்காமல் அதிலும் காலூண்றி சாதித்தவர் விஜயகாந்த். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற பழம் தின்று கொட்ட போட்டவர்கள் மத்தியில் யாதொரு அனுபவமும் இன்றி தனி ஆளாக இவரின் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது. எந்த ஒரு நடிகையையும் இவர் கொள்கை பரப்பு செயலாளர் ஆக்கியதில்லை. இவரின் கூட்டங்களுக்கு வந்த மக்களை கவர யாதொரு கவர்ச்சி நடிகையும் கிடையாது. கருணாநிதிக்கு ஒரு எம்ஜியார் போல எம்ஜியாருக்கு ஒரு ஜெயலலிதா, நிர்மலா போல நடிகர் பட்டாளம் எதுவும் கிடையாது. எவருடனும் கூட்டணி இல்லாமல் இவர் வாங்கிய ஓட்டுக்கள் அரசியலில் ஜாம்பவானாக அறியப்பட்ட வைகோவையும் கலங்க வைத்தது. இவரின் தேர்தல் வாக்குறுதியான கறவை மாடுகள் வழங்கப்படும் என்கிற திட்டம் அதிமுக வால் இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவாடானை தொகுதியில் ஒரு சுயேச்சை கூடை சின்னத்தில் போட்டியிட்டு முரசுவின் 24000 ஓட்டுக்களை பிரித்ததால் அங்கு 3000 ஓட்டுக்கள் வித்யாசத்தில் தேமுதிக தோற்றது. இது போல வஞ்சகத்தால் பிரிந்த ஓட்டுக்களுக்கு கணக்கே இல்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இவ்வளவு போட்டிகளின் மத்தியிலும் இவர் 10000 வாக்குகளுக்கு கூடுதலாக பெற்றார் என்பது சிந்திக்க வேண்டிய விசயம்.

இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரர் ஆன இவருக்கு முன் கோபமும் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக்காரர்களுக்கு கேலிச்சித்திரமானார். இவர் நடத்திய கணிணி இலவச வகுப்புகளினால் பயனடைந்த கிராமப்புற மாணவர்கள் அதிகம். இலங்கை தமிழர்களின் துயரை மனதில் கொண்டு இவர் பிறந்த நாள் விழாவே கொண்டாட மாட்டேன் எனவும் மகனுக்கு பிரபாகரன் எனவும் பெயரிட்டு தன் பங்கினை அளித்தவர் இவர்.

விஜயகாந்த்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் இவர் பெற்ற இடமும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதே உண்மை.

Monday, April 2, 2012

கம்ப்யூட்டர் சாம்பிராணிகள்சில நாட்களுக்கு முன்பு என் நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். சிறிது நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது அவரின் மகன் பள்ளியில் இருந்து வந்து வீட்டுப்பாடங்கள் செய்ய ஆரம்பித்தான். அப்பொழுதுதான் கவனித்தேன். சிறிய சிறிய கணக்குகளுக்கு கால்குலேட்டரை தடவிக்கொண்டிருந்தான். படிக்கும் காலத்தில் நானெல்லாம் கணக்கில் புலி அல்ல. ஆனால் இவ்வளவு எளிமையான கணக்குகளுக்கு சிரமப்பட்டது கிடையாது. இத்தனைக்கும் அந்த பையன் பயில்வது நகரின் பிரபலமான பள்ளியாகும். மேலும் கம்ப்யூட்டரில் அவன் புலி போல பாய்கிறான். அவனை உற்று நோக்கினால் வயதிற்கு மீறிய அறிவு இருப்பது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் அவனின் மறுபக்கம் அவன் பிராய்லர் கோழி போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இன்றைய காலகட்டத்தில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வெளி நாட்டில் இருக்கும் மதிப்பு மரியாதையும் அவர்களின் சமயோசித புத்திக்கும் கணக்கிடும் முறைக்கும் தான். ஆனால் வரும் தலைமுறைகள் கணிணியை மட்டுமே கட்டி அழுது கொண்டிருக்கின்றது. இதனால மற்றவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு அற்றுப்போய்விடுகிறது. நாட்டுக்கோழிகளாக இருப்பதால்தான் நமக்கு சந்தையில் மரியாதை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கணிணியில் புகுந்து விளையாடும் அடுத்த தலைமுறையினருக்கு வாழ்க்கை கல்வியின் அவசியம் தெரியாமல் இருக்கிறது. பள்ளி முடிந்ததும் விளையாட எல்லாம் நேரம் இல்லை. அபாகஸ் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் என அவர்களது சுமை வேறு வடிவில் வந்து விடுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் விதிவிலக்கல்ல. மதிப்பெண்களே குறிக்கோளாக வாழ்க்கை நகர்கிறது. இவர்களுக்கு தெரிவதில்லை. மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி நிறைய விசயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பது. ஆங்கிலம் என்பது மொழி என்பதை தாண்டி அது ஒரு அறிவு என திணிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பயின்ற பள்ளி என்பது தமிழ் மீடியம் தான். ஆனால் அதிலிருந்து கிளம்பியவர்கள் டாக்டர், கலெக்டர், இன்ஜினியர் என ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களிடம் எல்லாம் தனித்தன்மையாக ஒரு ஆளுமைத்தன்மையை காண இயலும்.

இன்றிருக்கும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரே குறிக்கோள் என்னவெனில் +2வில் 1000க்கும் மேல் மதிப்பெண்கள். பிறகு ஒரு பொறியியல் பட்டம். பின்னர் கணிணி நிறுவனத்தில் வேலை. கை நிறையும் சம்பளம். அவ்வளவே. இன்று எத்தனை பேர் IAS, IPS, IFS படிப்பேன் என்கிறார்கள்? சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களில் வளரும் குழந்தைகளுக்கு முறையான வழி காட்டுதல் கிடைக்கலாம். ஆனால் கரூர், திண்டுக்கல், மணப்பாறை மாதிரியான ரெண்டுங்கெட்டான் நகரங்களில் வளரும் குழந்தைகளில்தான் இந்த முரண்பாடுகள் தெளிவாக தெரிகிறது.

இன்று கம்ப்யூட்டர் என்பது மலிந்துவிட்டது. எனவே இதையும் தாண்டி நாம் மற்ற அறிவுகளை வளர்த்து வைத்துக்கொண்டால்தான் நம்மால் நெருப்பு போல பிரகாசிக்க முடியும். இல்லை எனில் புகையும் சாதாரண கம்யூட்டர் சாம்பிராணிகளாகத்தான் வாழ்க்கை சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கும்.