Saturday, May 26, 2012

நல்ல குதிரை என்ன விலை?

 விண்ணை முட்டும் விலைவாசி... கச்சா எண்ணை விலை அதிகரிப்பாலும் சந்தையில் இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சியாலும் பெட்ரோல் விலை 7.50 பைசா விலையேறி கிட்டத்தட்ட 80 ரூபாய்க்கு வந்துவிட்டது.
 

வண்டி ஓட்டலாமா? வேண்டாமா? பழையபடி குதிரை வண்டி சவாரிதானா? இனிமேல் இருசக்கர வாகனங்களுக்கு பதிலாக ஆளுக்கொரு குதிரை வைத்துக்கொள்ளலாம். என்ன... பார்க்கிங் ஏரியாவில் தினமும் சாணம் அள்ள கற்றுக்கொள்ள வேண்டும். மார்க்கெட்டில் தக்காளி வெங்காயத்துடன் கொள்ளும் புல்லுக்கட்டும் வாங்கிக்கொள்ள வேண்டும். நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என குதிரை வண்டிகளில் இனி பயணப்பட கற்றுக்கொள்ள வேண்டும். சைக்கிளையும் துடைக்க வேண்டிய நேரம் வந்தாச்சு... 

Sunday, May 6, 2012

கடவுள் இருப்பது எங்கே?


உடலில் உயிர் இருப்பது எங்கே? அது போலத்தான் கடவுளும். அவர் தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார். அப்படி என்றால் வீட்டில் உள்ள தூணிலும் துரும்பிலும் தேடுவதா? தூண் என்பது நமது தேகம். துரும்பு என்பது அதில் இருக்கும் உயிர். இறைவன் நமக்குள்தான் இருக்கிறார். ஒவ்வொரு மதமும் இதைத்தான் சொல்கிறது. அன்பே சிவம் – இது இந்து மதம். அனைத்து உயிர்களிடத்தும் அன்பை செலுத்து – இது இஸ்லாம். உனக்கு பாவமே செய்திருந்தாலும் அவனை ரட்சி – இது கிறிஸ்துவம். சொல்ல வந்த கருத்து ஒன்று தான். அது அனைத்து உயிர்களிடத்தும் அன்பை செலுத்து. அதுவே உன்னை ஆண்டவனிடத்தில் கொண்டு செலுத்தும்.



ஆசைகளை துறந்தவனே துறவியாவான். ஆனால் இப்பவும் துறவிகளை பார்க்கிறோம். தங்கத்தில் கிரீடம். வெள்ளியில் செங்கோல். பட்டாடை அணித்து பகட்டுடன் பக்தியை பரிமாறுகிறார்கள். குமட்டல்தான் வருகிறது. இவர்கள் யாரை கேவலப்படுத்துகிறார்கள். ஆண்டவனையா அல்லது அவர்களையேவா? முற்றிலும் துறந்தவனுக்கு பணம் எதற்கு? ஆன்மீகத்தை போதிக்கிறேன் பேர்வழி என ஹாஸ்டல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். யோகாவை போதிக்கிறவர் எப்படி துறவியாகிறார்? அல்லது துறவியால்தான் யோகத்தினை கற்றுக்கொடுக்க முடியுமா? எனக்கு யோகா கற்றுத்தந்தவர் ஒரு குடும்பஸ்தன். சாதாரண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்தான்.



ஹீலிங் தெரபி எனப்படும் தொடுவர்மத்தின் ஒரு பகுதியை நன்கு கற்று அறிந்தவன் இங்கு தெய்வப்பிறவி அவதாரம் எடுக்கிறான். தன்னையே கிருஷ்ணன் என்கிறார். இரவில் கட்டிலில் யோக நிலையில் இருந்தேன் என்கிறார். என்னே கோமாளித்தனம் இது! இவர்களை எல்லாம் கேட்பதற்கு ஆளில்லாமல் போய்விட்டது. உண்மையில் சொல்லப்போனால் தொடு வர்மம் என்னும் பண்டைய கலையினை முறையாக கற்ற ஒருவன் தொடுதலினால் இன்னொரு மனிதனை அவனின் நெடு நாளைய வியாதிகள், பிரச்சனைகளுக்கு மருந்தளிக்க முடியும். தொடாமலேயே கண் பார்வையினாலும் இயலும். அதற்கு பெயர் நோக்கு வர்மம். ஆனால் முறையாக பயிலாமல் இந்த கலையினை பிரயோகிக்க இயலாது. மேலும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் குறைவு. கற்கவும் நெடு நாட்களாகும். வேலைக்கு செல்லும் ஆசாமிகளுக்கு நாட்கணக்கில் இதனை பயின்று கொண்டிருக்க இயலாது. இந்த ஹீலிங் தெரபியை தெரிந்த ஒரே காரணத்தினால் இவர்களின் ஆன்மீக வழி வாழ்க்கை ஜெகஜோதியாக வியாபாரம் ஆகிறது. கடவுளே எங்கிருக்கிறாய் நீ?