Monday, December 31, 2012

5ம் ஆண்டு ஆரம்பம்


இந்த வலைப்பூ தனது 5ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஆதரவளித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி.
 
வரும் 2013ம் ஆண்டு அனைவருக்கும் நன்மை அளிக்க வேண்டும் என ஆண்டவனை கேட்டுக்கொள்கிறேன்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!

Saturday, December 22, 2012

2012 – ஒரு பார்வை


ஒரு வழியாக பூமி அழியப்போகிறது என்கிற பூச்சாண்டி எல்லாம் ஓய்ந்த நிலையில் 2012 ஆண்டை மேலோட்டமாக பார்த்தால் என்ன என்கிற சிந்தனை இந்த பதிவை எழுத தூண்டியது. ஒரு பெரிய காரியமாக 2 நாட்களுக்கு முன் எட்டையாபுரம் சென்றிருந்தேன். அங்கு வெறித்தனமாக ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த பெருமக்கள் இரண்டே நிமிடத்தில் கேஷுவலாக “ஏம்ப்பா நாளைக்கு உலகம் அழிஞ்சிடுமாமே?” என்றபோது எனக்கு சிரிப்பே வந்து விட்டது. சிரித்தால் அந்த இடத்தில் சிக்கலாகி விடும் என கட்டுப்படுத்திக்கொண்டேன். அந்த அளவிற்கு மக்களை உசுப்பி விட்டார்கள். இதில் ஒரு படி மேலே போய் தினத்தந்தியில் ஒரு கட்டுரையை படித்தால், அதில் மாயன்கள் என்பவர்கள் அடிப்படையில் மலையாளிகள் எனவும் வாமண அவதாரத்தில் பெருமாள் அவர்களை பாதாள உலகம் வழியே மெக்சிகோ அனுப்பியதாகவும், அவர்களது நாகரிகமும் மலையாள நாகரிகமும் ஒன்றுதான் என சொல்லி அதை ஒத்துக்கொள்வதை போல சில படங்களையும் வெளியிட்டு இருந்தார்கள். கடவுளுக்கே வெளிச்சம்!!
 
2012ல் வந்த சினிமாக்களில் என்னை சில படங்கள் உற்றுப்பார்க்க வைத்தன. வசூலில் சாதனை படைத்த ஒரு கல் ஒரு கண்ணாடி, பில்லா 2, துப்பாக்கி, நண்பன், மெரினா, மசாலா கபே போன்ற படங்களுக்கு மத்தியில் அட்டகத்தி, மதுபானக்கடை, பீட்சா கடைசியில் வந்த கும்கி வரை பிரம்மாண்டங்களை நம்பாமல் பேச வைத்தன. காதலில் சொதப்புவது எப்படி மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோமும் இதில் அடக்கம். பெரிதாக வரும் என பேசப்பட்ட சகுனி சரிந்த சோகமும் உண்டு. இதை எல்லாம் தாண்டி எனக்கு சாட்டை படம் மிகவும் பிடித்துப்போனது. அரசு பள்ளியின் அவலங்களை அழகாக சுட்டிக்காட்டி மண்டையில் உரைப்பது போல கருத்து சொல்லி இருந்தார்கள். இந்த வருடத்தில் சிறப்பான ஒரு ரவுண்ட் வந்தவர் ‘தம்பி ராமையா’ தான். மனிதருக்கு நடிப்பு அல்வா சாப்பிடுவது போல வருகிறது. அவரின் நடிப்பு பேசப்பட்டது உண்மை.

வழக்கம்போல காவிரியில் கர்’நாடகம்’ காற்றை மட்டும் திறந்து விட்டும் நம் பாவத்தினை வழக்கம்போல கட்டிக்கொண்டது. இந்த வருடம் குடிநீருக்கே அல்லாட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரிய பட தேவை இல்லை. காவிரி என்னும் ஜீவ நதி இராமநாதபுரம் வரை தாகத்தினை தீர்த்து வருகிற நிலையில் வறண்ட நதியை பார்கும் போது வயிறு எரிகிறது. யார் சொன்னாலும் நீதி மன்றங்கள் ஆணையே இட்டாலும் முடியவே முடியாது என முகம் திருப்பும் நமது நண்பர்களுக்கு நம் காய்ந்த வயிறின் அவலம் புரிய மாட்டேன் என்கிறது. அட ஆண்டவா!


கலை துறையில் இந்த வருடம் நகைச்சுவையில் பெரிதும் பேசப்பட்ட காக்கா ராதாகிருஷ்ணன், லூஸ் மோகன், என்னத்தை கண்ணையா, இடிச்சபுளி செல்வராஜ் மற்றும் விருமாண்டி போன்ற படங்களில் நடித்த பெரிய கருப்பு தேவர், வறுமையின் நிறம் சிகப்பில் வந்த திலீப் போன்ற நடிகர்கள் இவ்வுலக வாழ்வினை நீத்தார்கள். ஆத்மா சாந்தி அடைக!

 எங்கள் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு துரதிர்ஷ்டம் எப்பொழுதும் துரத்தி வரும். என்னவெனில் இந்த மாவட்டத்தில் திமுக ஜெயித்தால் அதிமுக ஆட்சியில் இருக்கும். அதிமுக ஜெயிக்கும் சமயத்தில் திமுக இருக்கும். இந்த முறை பாராளுமன்றத்திற்கு திரு.தம்பித்துரையும், சட்டமன்றத்திற்கு திரு.செந்தில் பாலாஜியும் (போக்குவரத்து துறை அமைச்சர்) ஜெயித்து மக்களும் சிறப்பான திட்டங்களையும் அம்மாவின் ஒப்புதல் பெற்று அறிவித்துள்ளார்கள். அதிர்ஷ்டம் என்னவெனில் நெடு நாளாக எதிர்பார்ப்பில் இருந்த புதிய பேருந்து நிலையம் போன்ற சிறப்பான அறிவிப்புகள் வந்தன. நலிவடையும் நிலைக்கு தள்ளப்பட்ட சாயப்பட்டறை தொழிலை தூக்கிவிட அரசின் பங்களிப்புடன் கூடிய சுத்திகரிப்பு நிலையத்திற்கான அறிவிப்பு தேனாக அனைவரது காதுகளிலும் ஒலித்தது இந்த வருடம் தான். பழைய சாலைகள் எல்லாம் புதிய வடிவம் பெற்றது. விபத்துகளை குறைக்கும் வண்ணம் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு டிவைடர் வைக்கப்பட்டது. மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு ஈடாக தரம் உயர்த்தும் அரசாணையும் கிடைக்கப்பெற்றதும் இந்த 2012ன் இறுதியில்தான்.


இது போக பாலங்கள் உட்பட பல நல்ல திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கரூர் – சேலம் அகல ரயில் பாதை பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்து இந்த வருடம் இறுதியில் சோதனை ஓட்டங்கள் நிறைவடைந்து 2013 ஜனவரி முதல் போக்குவரத்துக்கு திறந்து விடப் படவுள்ளது.

மொத்தத்தில் கரூர் மாவட்டத்தை பொறுத்த வரை இனிய வருடமாக இந்த 2012 அமைந்தது என்பது மிகை இல்லை. மின்சாரம் மட்டும் தடையின்றி கிடைத்து விட்டால் 2013ம் இனிய வருடம் தான்.