Friday, May 30, 2014

திருவிழாக்காலம் - திருவிழாக்கோலம்

கரூர் புதுக்காளியம்மன் கோவிலுக்கு காவிரி தீர்த்தம் செல்லும் வழியில் வரவேற்பு விழா - கலை நிகழ்ச்சிகள்


Saturday, May 17, 2014

அள்ளியது அ.இ.அ.தி.மு.க லேடி – பிரதமராகிறார் மோடி




கடந்த சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் தனி மெஜாரிட்டியாக ஜெயலலிதாவை அமர வைத்து அழகு பார்த்தனர். மீண்டும் தனது ஆளுமையை நிருபித்த அவர் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு யாதொரு இடமும் அளிக்காமலேயே 39க்கு 37 என துடைத்து எடுத்துவிட்டார். இந்திய அளவில் மூன்றாவது பெரிய (அதிக எம்பிக்கள்) கட்சியாகவும் உருவெடுத்தது அதிமுக. முதலிடத்தில் பாஜகவும் இரண்டாம் இடத்தில் காங்கிரசும் இருக்கின்றன. ஆனால் மத்தியில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துவிட்டதால் யாதொரு கட்சியின் ஆதரவு இன்றியே பிரதமராகும் வாய்ப்பினை பெற்றுள்ளது. இது அதிமுகவிற்கு பெறும் ஏமாற்றத்தினை அளித்திருக்கும். ஏனெனில் மத்திய அமைச்சரவையில் இடம் என்பது கடைசிவரை அ.இ.அ.தி.மு.க விற்கு வாய்க்கவே மாட்டேன் என்கிறது. 37 உருப்பினர்கள் இருந்தாலும் அனைவருமே வெறும் உறுப்பினர்கள் என்ற நிலைதான். மீண்டும் கடிதம் எழுதியே காரியம் ஆற்றவேண்டிய நிலையில் தான் உள்ளது அ.இ.அ.தி.மு.க.

இந்த முறை தமிழகத்தினை பொறுத்தவரை காங்கிரசிற்கு இடம் கிடைக்காது என அனைவருமே கிட்டத்தட்ட எண்ணியிருந்ததால் பெரிய அளவில் யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் போட்டியிட்ட 40 இடங்களில் ஒரு இடம் தவிர அனைத்து இடங்களிலும் டெபாசிட் கூட பெறவில்லை என்பது உண்மையிலேயே அதிர்ச்சிதான். நாடாண்ட கட்சி கிழிந்து தொங்குவது காண சகிக்கவில்லை.

திமுகவின் நிலையும் சற்றேறக்குறைய அதே நிலைதான். இருப்பினும் சில இடங்களில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது கவனிக்கவேண்டிய ஒன்று. தேமுதிக நிலை சிறிது பரிதாபம்தான் என்றாலும் குறிப்பிடத்தக்க ஓட்டு வங்கி உள்ள கட்சி என மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. சேலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுதீஷ் இரண்டு லட்சம் ஓட்டுக்கள் வாங்கி இருந்தாலும் 3ம் இடத்திற்கே தள்ளப்பட்டார். பாமகவின் அன்புமணி ஆரம்பம் முதலே தருமபுரி தொகுதியில் முண்ணனியில் இருந்து வெற்றியும் பெற்றுள்ளார். இவர் தவிர பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் மூண்றேமுக்கால் இலட்சம் ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கு இவருக்கு அடுத்து வந்த காங்கிரஸின் வசந்தகுமார் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். இங்கு மட்டுமே டெபாசிட் தப்பித்தது. சில தொகுதிகளில் காங்கிரசிற்கும் நோட்டாவிற்கும்தான் போட்டியே இருந்தது.

கரூரை பொறுத்தவரை ஆரம்ப பிரச்சார நேரத்தில் திமுகவின் வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தாலும் அம்மா வந்து பிரச்சாரம் செய்து திரும்பிய பிறகு அ.இ.அ.தி.மு.க வின் வண்டி வேகமெடுத்துவிட்டது. கடைசிவரை அவர்களது வேகத்திற்கு எவராலும் ஈடு கொடுக்க முடியவில்லை. இங்கு பதிவானது 10,43,909 வாக்குகள். இதில் அ.இ.அ.தி.மு.க வின் தம்பித்துரை 540722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக திமுகவின் சின்னச்சாமி 345475 வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவதாக தேமுதிகவின் கிருஷ்ணன் 76560 வாக்குகளும் காங்கிரசின் ஜோதிமணி 30459 வாக்குகளும் ஆம் ஆத்மி சார்பில் வளையாபதி 2440 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவில் 13763 வாக்களித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட மதுரைவீரன் 5694 வாக்குகள் பெற்று ஆம் ஆத்மியை விட முன்னிலை பெற்றுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய சென்னை மாறன் 46170 வாக்குகள் வித்தியாசத்திலும் விருதுநகரில் வைகோ 145551 வாக்குகள் வித்தியாசத்திலும் அ.இ.அ.தி.மு.க விடம் தோல்வி அடைந்துள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரசின் ராதாகிருஷ்ணன் தனக்கு அடுத்தபடியாக வந்த நாராயணசாமியை 60854 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து விட்டார். இங்கும் அ.இ.அ.தி.மு.க 3வது இடத்தில் 132657 வாக்குகள் பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. இங்கு நோட்டா ஓட்டுக்களை விட பாமக வெறும் 500 ஓட்டுக்கள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளது.

ஆலந்தூர் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்று தனது பலத்தினை சட்டசபையில் அதிகரித்துள்ளது. இங்கு தேமுதிக இம்முறை 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

திமுக முன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட தொகுதிகள்:
  • தர்மபுரி
  • ஈரோடு
  • திருப்பூர்
  • கோயம்புத்தூர்
  • பொள்ளாச்சி
  • விருதுநகர்
  • கன்னியாகுமரி (4ம் இடம்)
  • புதுச்சேரி (4ம் இடம்)

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை தேமுதிக பெற்ற தொகுதிகள்:
  • திருவள்ளூர் (2 இலட்சத்திற்கும் அதிகம்)
  • மத்திய சென்னை
  • விழுப்புரம் (2 இலட்சத்திற்கும் அதிகம்)
  • கள்ளக்குறிச்சி
  • சேலம் (2 இலட்சத்திற்கும் அதிகம்)
  • நாமக்கல்
  • திருப்பூர் (2.5 இலட்சத்திற்கும் அதிகம்)
  • கடலூர்
  • திருநெல்வேலி

50000 வாக்குகளுக்கு மேல் காங்கிரஸ் பெற்ற தொகுதிகள்

  • அரக்கோணம்
  • கோயம்புத்தூர்
  • திருச்சிராப்பள்ளி
  • மயிலாடுதுறை
  • சிவகங்கை (கார்த்தி சிதம்பரம்)
  • தேனி
  • இராமநாதபுரம் (திருநாவுக்கரசர்)
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • திருநெல்வேலி
  • கன்னியாகுமரி (வசந்தகுமார்)
  • புதுச்சேரி (நாராயணசாமி)

நோட்டாவும் – காங்கிரசும் மோதிய தொகுதிகள்
  • வட சென்னை – 18265 (நோட்டா – 17446)
  • மத்திய சென்னை – 26009 (நோட்டா – 21982)
  • ஸ்ரீபெரும்புதூர் – 39015 (நோட்டா – 27676)
  • தர்மபுரி – 15450 (நோட்டா – 12681)
  • நாமக்கல் – 19800 (நோட்டா – 16002)
  • நீலகிரி – 37702 (நோட்டா – 46559) – நோட்டாவிடம் காங்கிரஸ் தோல்வி
  • ஆலந்தூர் சட்டசபை – 6535 (நோட்டா – 4248)

ஒரு சில வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் வென்று ஆண்ட தொகுதியில் நீலகிரி முக்கியமானது. அங்கு நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தத்தில் இந்த தேர்தலில் தமிழகத்தினை பொறுத்தவரை ஒரு இடத்தில் மட்டுமே வென்றிருந்தாலும் இந்திய அளவில் கொண்டாடிக்கொண்டிருப்பது பாஜக மட்டுமே. பெருத்த வெற்றி எனினும் அமைச்சரவையில் பங்கேற்க இயலாமல் போனது அ.இ.அ.தி.மு.க.

மிகவும் கவனத்தில் கொள்ளப்பட்ட மதிமுக குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றிருந்தாலும் 3ம் இடத்திற்கே தள்ளப்பட்டது சோகம். இனி தனியாக காங்கிரஸ் பயணம் செய்வதென்பது தமிழகத்தில் தற்கொலைக்கு சமம். தேமுதிக விழித்துக்கொள்ளவேண்டிய தருணம் இது. திமுக விற்கு இன்னும் கதவுகள் மூடப்படவில்லை என்பது பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தை தக்க வைத்திருப்பதில் இருந்து தெரிகிறது.


வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வார்களா என்பது இன்னும் சிறிது மாதங்களில் தெரிந்துவிடும். நம்புவோம். அதுதானே எல்லாம். 

Wednesday, May 7, 2014

அக்கினியில் மழை


வருடம் தோறும் இந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நம்மில் பலர் புலம்புவது வெயிலின் கொடுமையைத்தான். இந்த ஆண்டும் விதி விலக்கில்லாமல் வெயில் பின்னி எடுத்துவிட்டது. கரூரில் 105 டிகிரி என உச்சம் தொட்டது. அக்கினி நட்சத்திரத்தினை எண்ணிப்பார்க்கையில் கண்ணில் நீரே வந்துவிட்டது.

ஆனால் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலையினால் வந்த கரு மேகங்களின் கூட்டம் கன மழையை அளித்து மண்ணை குளிர்வித்தது. மழை வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பளீர் என இருந்த வானத்தை மேகக்கூட்டம் கவர்ந்ததை புகைப்படம் எடுத்தேன். இந்த மேகத்தினை பார்க்கும்போது எப்படி மழை பொழிந்திருக்கும் என உங்கள் கற்பனைக்கு விட்டுவிட்டேன்.


வாழ்க மழை. நீரின்றி அமையாது உலகு. வருணபகவானுக்கு நன்றி.