Tuesday, May 31, 2011

ஜவுளி உலகம் – கரூர்


தமிழகத்தில் ஏற்றுமதி என்னும் வார்த்தையை அதிகம் உபயோகிக்கும் நகரங்களில் திருப்பூருக்கு அடுத்தபடியாக வரும் நகரம் கரூர். பின்னலாடை உற்பத்திக்கு திருப்பூர் என்றால் வீட்டு ஜவுளி ரகங்களுக்கு கரூர்தான்.



பஸ்ஸிற்கு பாடி கட்டுதல் மற்றும் கொசுவலை உற்பத்தி என வேறு சில தொழில்களும் கொழித்தாலும் ஜவுளி உற்பத்தியே இங்கு பிரதானம். உள் நாட்டிற்கான தேவைகளுக்கும் வெளி நாட்டிற்கான தேவைகளுக்கும் தனித்தனியாக இங்கு நிறுவனங்கள் இருக்கின்றன. உள் நாட்டு தேவைகள் என்று பார்த்தால் பெட்சீட், போர்வை, தலைகாணி உறைகள், துண்டுகள், திரை சீலைகள், மிதியடிகள் என அடங்கும். வெளி நாட்டிற்கான உற்பத்தி என்பது குஷன்கள், டேபிளின் மீது வைக்கப்படும் டேபிள் கிளாத், மேட், நாப்கின், ரன்னர், பரிமாறும் நபர் அணியும் ஆப்ரான்கள், கிளவ், பாட் ஹோல்டர் என ரகங்கள் கணக்கில் அடங்காது.

ஆயிரக்கணக்கான நபர்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பளிக்கும் நகரமாக கரூர் திகழ்கிறது. திருப்பூர் சந்தித்திருக்கும் சாயப்பட்டறை பிரச்சனை கரூரிலும் உண்டு. எனினும் திருப்பூர் அளவிற்கு இங்கு உற்பத்தி குறைவு என்பதால் கழிவுகளும் குறைவு. தமிழகம் முழுவதிலும் இருந்து கரூருக்கு தினமும் நூல் பேலகள் வந்து இறங்கிக்கொண்டே இருக்கும். அருப்புக்கோட்டை ஜெயவிலாஸின் தரமான நூல் முதல் சாதாரண ரகங்களும் தேவைக்கேற்ப தினசரி வந்திறங்கும். 2, 2/20, 2/30, 10, 2/10 என பல்வேறு ரக நூல்கள் இதில் அடக்கம்.

இப்படி வரும் கோரா நூல்கள் சாயப்பட்டறைகளில் சாயமேற்றப்பட்டு வெள்ளகோவில், முத்தூர், காங்கயம், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, திருச்செங்கோடு, குமாரபாளையம், சென்னிமலை என சுற்று வட்டார நகர கிராமங்களில் இருக்கும் தறிகளுக்கு வினியோகிக்கப்படும். நெசவு செய்து வரும் கலர் துணி தரம் பார்க்கப்பட்டு தையலுக்கு அனுப்பப்படும். தைக்கப்பட்ட துணியானது தரம் பார்க்கப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டு லாரிகளில் தூத்துக்குடிக்கோ அல்லது சென்னை துறைமுகத்திற்கோ அனுப்பப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

தினசரி வெளி நாடுகளில் இருந்து வெளியூர்களில் இருந்தும் வரும் நபர்களால் இங்குள்ள அனைத்து லாட்ஜ் ஹோட்டல்களும் பரபரப்பாகவே இருக்கும். முன் பதிவு இல்லை எனில் ரூம் கிடைக்காது. தினசரி பல பஸ்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஆட்களை அழைத்து வந்து பணியளிப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

நூல் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அன்னிய செலாவணியில் டாலரின் ஏற்ற இறக்கங்கள் இந்த தொழிலை பாதிக்கும் காரணிகள் ஆகும். மேலும் நன்கு படித்த மாணவர்கள் சென்னை திருப்பூருக்கு சென்றுவிடுவதால் எப்பொழுதுமே ஸ்கில்டு லேபருக்கு டிமாண்ட் இருக்கும். ஹேண்ட் லூம் டெக்னாலஜி மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்த நபர்களுக்கு இந்த துறை ஏற்றது. டிசைனர்களுக்கும் டிமாண்ட் அதிகம். சரளமாக ஆங்கிலம் பேசத்தெரிந்து கணிணி தெரிந்திருந்தால் வேலை நிச்சயம்.

சமீப காலமாக சரிவினை சந்தித்து வரும் இந்த தொழில் சீனாவின் போட்டியால் திணறி வருகிறது. இருப்பினும் குவாலிட்டியில் நம்மை மிஞ்ச யாரும் இல்லை என்பதால் ஓடிக்கொண்டு இருக்கிறது.

உழைப்பு... இந்த ஒரு வார்த்தைக்கு மரியாதை தரும் நபருக்கு கரூர் ஏற்ற நகரம்தான்.

Tuesday, May 17, 2011

எந்த ஊரில் எது பேமஸ்?

நமக்கு எல்லருக்கும் தெரிஞ்ச சில திண்பண்டங்கள் எந்தெந்த ஊரில் சிறப்பாக கிடைக்கும் என்பது தெரியும். ஆனால் தெரியாத சில ரகங்கள் பாப்புலராக இருக்கவே செய்கிறது. உங்களுக்காக இதோ.....

நொறுக்குத்தீனி
அல்வா - திருநெல்வேலி
மஸ்கோத் அல்வா - சாத்தான்குளம்
பால்கோவா - ஸ்ரீவில்லிப்புத்தூர்
மக்ரூன் - தூத்துக்குடி
காராச்சேவு - அருப்புக்கோட்டை
சீரணி மிட்டாய் - பாலவாநத்தம்
முறுக்கு - மணப்பாறை
அதிரசம் - வெள்ளியணை
நொதில் - கீழக்கரை
பனங்கல்கண்டு - திருச்செந்தூர்
மைசூர்பா - கோயம்புத்தூர்
டிகிரி காபி - கும்பகோணம்
டீ - வால்பாறை
அப்பளம் - மாயவரம்
குலாப் ஜாமுன் - காரைக்கால்
வர்க்கி - ஊட்டி
மக்கன் பேடா - ஆம்பூர்
தயிர்வடை - சேலம்
தேன்குழல் - காரைக்குடி
மண ஓலை - காரைக்குடி
அச்சுமுறுக்கு - காரைக்குடி
சர்பத் - புதுக்கோட்டை
தேன் - கொல்லிமலை
பஞ்சாமிர்தம் - பழனி

பழங்கள்
பலாப்பழம் - பண்ருட்டி
வாழைப்பழம் - லாலாப்பேட்டை, சத்தியமங்கலம்
மாம்பழம் - சேலம்
பேரிக்காய் - கொடைக்கானல்
முந்திரி - நெய்வேலி

காய்கறி
முருங்கை - அரவக்குறிச்சி
நூக்கில்ஸ் - போடி
முட்டைகோஸ் - ஊட்டி
உருளை - ஊட்டி
கத்தரிக்காய் - ஒட்டன் சத்திரம்
வெற்றிலை - குளித்தலை, அந்தியூர்
தேங்காய் - பொள்ளாச்சி
அன்னாசி - கொல்லிமலை


சாப்பாடு
புரோட்டா - விருதுநகர்
அயிரை மீன் - மதுரை
பிரியாணி - திண்டுக்கல், ஆம்பூர்
உப்புக்கண்டம் - காரைக்குடி
இறால் வருவல் - சிதம்பரம்
நாட்டுக்கோழி சுக்கா - பிரானூர் (குற்றாலம்)
சிறுமீன் - புதுக்கோட்டை
மாசிக்கருவாடு - இராமேஸ்வரம்
வாத்துக்கறி - வேலூர் (நாமக்கல்)

இது தவிர சில
பூட்டு - திண்டுக்கல்
ஆடு - மேச்சேரி (சேலம்)
முட்டை - நாமக்கல்
புகையிலை - புதுக்கோட்டை
சீவல் - மன்னார்குடி
மல்லிகை - மதுரை
கைலி, கர்சீப் - ஈரோடு
கொசுவலை, போர்வை, துண்டு - கரூர்
பஸ்பாடி கட்டுதல் - கரூர்
ஷூ, பெல்ட் - ஆம்பூர்
போர்வெல் வண்டி - திருச்செங்கோடு
லாரி - நாமக்கல்
பேண்டேஜ் துணி - ராஜபாளையம்
வேட்டை நாய் - ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை
பட்டாசு, பிரிண்டிங் - சிவகாசி
தீப்பெட்டி, பேனா நிப் - சாத்தூர்


எனக்கு தெரிந்தவைகளை பட்டியலிட்டு இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்ததை பின்னூட்டமிடுங்கள்.

Saturday, May 14, 2011

அண்ணா திமுகவிற்கு அமோக வெற்றி!!!




நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது. திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் பெறும் சரிவினை சந்தித்துள்ளன. குறிப்பாக திமுகவின் அமைச்சர்கள் கூட சறுக்கியிருக்கிறார்கள். அதிமுக 150 இடங்களிலும், தேமுதிக 29 மற்றும் திமுக 23 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பாமக 3 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வென்றுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளான CPM - 10 மற்றும் CPI – 9 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. மொத்தத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 203 தொகுதிகளின் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார்கள்.

தேமுதிகவின் எழுச்சி
இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. எவ்வளவோ கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட விஜயகாந்த் 30000 வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் பெரும் வெற்றியை பெற்றுள்ளார். மொத்தமாக அந்த கட்சி 29 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது கட்சியாக தன்னை நிலை நிறுத்தியுள்ளது. பாமகவின் கோட்டையை தகர்த்தது மட்டுமின்றி அதன் தலைவர் கோ.க.மணியையே தோற்கடித்துள்ளது. தமிழக மேப்பில் உச்சத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருந்து கீழே இருக்கும் ராதாபுரம் வரை வெற்றிகளை தட்டிச்சென்றுள்ளது. இந்த கட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் பெண்களும் அடங்குவர். திருச்செங்கோடு, சூலூர், மதுரை மத்தி, ராதாபுரம், பேராவூரணி, சேந்தமங்கலம், மேட்டூர், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், செங்கம், மயிலாடுதுறை, சேலம் வடக்கு, விருதுநகர், செங்கல்பட்டு, விருகம்பாக்கம், கும்மிடிப்பூண்டி ஆகியவை உள்ளிட்ட 29 தொகுதிகளில் வென்று கட்சியின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.


வெற்றி பெற்ற அமைச்சர்கள் இவர்கள் மட்டுமே.

முதல்வர் கருணாநிதி - திருவாரூர்
துணை முதல்வர் ஸ்டாலின் - கொளத்தூர்
துரைமுருகன் - காட்பாடி
ஐ.பெரியசாமி - ஆத்தூர்
எ.வ.வேலு - திருவண்ணாமலை
சுப.தங்கவேலன் - திருவாடானை
தங்கம் தென்னரசு - திருச்சுழி
மைதீன் கான் - பாளையங்கோட்டை
க.ராமச்சந்திரன் – குன்னூர்

இதில் ஸ்டாலினின் வெற்றி மிகவும் பிரச்சினைக்கு பிறகு நள்ளிரவே முடிவு தெரிந்தது. மைதீன்கான் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் வென்றார். திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் (திமுக) தபால் வாக்க்குளால் தப்பித்தார். வில்லிவாக்கத்தில் பேராசிரியர் அன்பழகனும், திருச்சியில் கே.என்.நேருவும், விழுப்புரத்தில் பொன்முடியும், விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், வெள்ளகோவில் சாமினாதனும், குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தோற்ற அமைச்சர்களில் முக்கியமானவர்கள். ஆரம்பம் முதலே முன்னனியில் இருந்தவர்கள் முதல்வர் கருணாநிதி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, துரைமுருகன் மட்டுமே. திருச்சுழியில் தங்கம் தென்னரசு கடைசி கட்ட சுற்றுக்களில் முன்னிலைக்கு வந்தார். திருவாடானையில் தேமுதிக வேட்பாளர் சுப.தங்கவேலனுக்கு கடுமையான போட்டியை கொடுத்தார்.

கடைசிவரை இழுபறியில் இருந்த தொகுதிகளில் சில.
கொளத்தூர் – ஸ்டாலின்
பாளையங்கோட்டை – மைதீன் கான்
அரவக்குறிச்சி – கே.சி.பழனிச்சாமி
மேட்டூர் – பார்த்திபன் (தேமுதிக)
திருச்சுழி – தங்கம் தென்னரசு
ராமனாதபுரம் – ஜவாகிருல்லா


ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தவர்களில் சிலர்.

கருணாநிதி – திருவாரூர்
ஜெயலலிதா – ஸ்ரீரங்கம்
விஜயகாந்த் – ரிஷிவந்தியம்
சரத்குமார் – தென்காசி
பாலபாரதி – திண்டுக்கல்
விஸ்வனாதன் - நத்தம்
மரியம் பிச்சை – திருச்சி
மைக்கேல் ராயப்பன் – ராதாபுரம்
செந்தில்பாலாஜி – கரூர்
பாப்பா சுந்தரம் – குளித்தலை
வைகை செல்வன் – அருப்புக்கோட்டை
பாண்டியராஜன் – விருதுநகர்
அருண் பாண்டியன் – பேராவூரணி
முத்துக்குமரன் – புதுக்கோட்டை (கம்யூ)
தினகரன் – சூலூர் (தேமுதிக)
செங்கம் – சுரேஷ் (தேமுதிக)
வால்பாறை – ஆறுமுகம் (கம்யூ)
சிவகங்கை – குணசேகரன் (கம்யூ)
உசிலம்பட்டி – கதிரவன் (பார்வேர்டு ப்ளாக்)
கோபிசெட்டிபாளையம் – செங்கோட்டையன்
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
திருச்செங்கோடு – சம்பத்குமார் (தேமுதிக)
கம்பம் - ராமகிருஷ்ணன் (திமுக)
ஐ.பெரியசாமி – ஆத்தூர் (திமுக)
சக்கரபாணி – ஒட்டன்சத்திரம் (திமுக)
முதுகுளத்தூர் – முருகன்
முத்துராமலிங்கம் - திருமங்கலம்

முக்கியமாக பல தேமுதிக வேட்பாளர்கள் ஆரம்பம் முதலே முன்னிலையில்தான் இருந்தனர்.

திமுக கூட்டணியில் இருந்து 7 இடங்களில் போட்டியிட்ட கொங்கு நாடு முன்னேற்ற கழகம் அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து கொங்கு இளைஞர் பேரவை சார்பில் போட்டியிட்ட உ.தனியரசு பரமத்தி வேலூரில் வெற்றி பெற்றுள்ளார். மதுரையில் அனைத்து தொகுதிகளுலும் திமுக தோல்வியடைந்துள்ளது. திருநாவுக்கரசர் அறந்தாங்கி தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். புதுக்கோட்டையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மன்னர் கல்லூரியில் பயின்ற காலத்திலேயே கம்யூனிச கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்து எதையும் எதிர்பாராமல் உழைத்த முத்துக்குமரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பெரி.அரசுவை வென்றுள்ளார்.

மொத்தத்தில் மின்வெட்டு, வெறும் இலவச அறிவிப்புகள், படோடாபம், தொழில் வளர்ச்சியின்மை போன்ற பெரும் காரணிகளே இந்த தேர்தலில் எதிரொலித்துள்ளது. நூல் விலையேற்றம் கொங்கு வட்டாரத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயித்துள்ளது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு அம்மா ஆட்சியை இல்லையில்லை நல்லாட்சியை தந்து தமிழகத்தினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவேண்டும்.

Friday, May 6, 2011

என்னை கடுப்பேற்றிய இண்டெர்வியூ

பொதுவாக எங்கள் கம்பெனிக்கு தினமும் சிலர் வேலை கேட்டு வருவர். அப்படி வருபவர்களை Preliminary Interview செய்வது என் வேலையில் ஒன்று. சில சமயம் காமெடியாக போகும் இந்த நிகழ்வு சில சமயம் கடுப்பேற்றும். அப்படி ஒரு சம்பவம் நேற்று.


உன் பெயர் என்ன?
சுப்பிரமணி சார்.

இதற்கு முன்பு எங்கே வேலை பார்த்தாய்?
பஸ்பாடி பில்டிங்கில் சூப்பர்வைசர் சார்.

பஸ்பாடி பில்டிங்கில் வேலை பர்ர்த்த உனக்கு இங்கு என்ன வேலை தரமுடியும்?
அங்கும் சூப்பர்வைசர்.. இங்கும் சூப்பர்வைசர்தானே சார். பாத்துடலாம்.

பாத்துடலாமா??!! சரி.. என்ன படிச்சு இருக்கீங்க?
எல்லாமே விபரமா RESUMEல் குடுத்து இருக்கேன். சார். படிச்சி தெரிஞ்சிக்கங்க சார்.

நானே படிச்சி தெரிஞ்சிக்கிறதா இருந்தா நீ என்பா இண்டெர்வியூக்குன்னு வந்தே?
என் Friend ஒருத்தன் சொன்னான் சார். ரொம்ப கேள்வி கேக்க மாட்டீங்கன்னு. அதான் வந்தேன்.

நான் இன்னும் சப்ஜெக்ட்டுக்கே வரலை. அதுக்குள்ளவே உன் பதில் எல்லாம் ஒரு திணுசா இருக்கே. உன்னை பற்றி சொல்லப்பா.
நல்லா சம்பாதிக்கனும் சார். ஜாலியா லைப் என்ஜாய் பண்ணனும் சார்.

என்னப்பா உன்னை பற்றி சொல்லச்சொன்னா.. நாயகன் டயலாக் சொல்றியே.
என்னைப்பற்றி சொல்ல ஒன்னுமில்லை சார்.

ஒன்னுமே இல்லியா??!! சரி உன் Family பற்றி சொல்லு.
அதெல்லாம் எதுக்கு சார். வேலை இருக்கா? இல்லியா?

(நானும் பொறுமயாக) என்னப்பா இப்படி Cut & Rightஆ இருக்கியே? உனக்கு இங்க வேலை கிடைக்கலைன்னா என்ன பண்ணுவே?
ஒன்னும் பிரச்சினை இல்லை சார். வேற கம்பெனி பார்க்க வேண்டியதுதான்.

இப்படியே இருக்கியே.. சாப்பாட்டுக்கு கஷ்டம் வராதா?
அது ஒன்னும் பிரச்சினை இல்லை சார். ஈஸ்வரன் கோவில் அன்னதான டோக்கன் தினமும் காலைலயே வாங்கி வச்சிடுவேன். வடை பாயசத்தோட சாப்பாடு கிடைக்கும் சார் தினமும். நீங்க வேணா ஒரு நாள் வந்து சாப்பிட்டு பாருங்க சார். சங்கீதா ஓட்டலை விட ருசியா இருக்கும்.

கடுப்பேறிய நான்.. முதல்ல இங்க இருந்து கிளம்பு. இனிமேல் இங்க இண்டெர்வியூக்குன்னு வராதே.
லூஸ்ல விடுங்க சார். நல்ல சாப்பாடு ஓசில தாரான். நீங்க ஏன் டென்சன் ஆகுறீங்க. வரட்டுமா சார்.

எப்படி ஆயிடிச்சு என் நிலமை.