Tuesday, May 31, 2011

ஜவுளி உலகம் – கரூர்


தமிழகத்தில் ஏற்றுமதி என்னும் வார்த்தையை அதிகம் உபயோகிக்கும் நகரங்களில் திருப்பூருக்கு அடுத்தபடியாக வரும் நகரம் கரூர். பின்னலாடை உற்பத்திக்கு திருப்பூர் என்றால் வீட்டு ஜவுளி ரகங்களுக்கு கரூர்தான்.



பஸ்ஸிற்கு பாடி கட்டுதல் மற்றும் கொசுவலை உற்பத்தி என வேறு சில தொழில்களும் கொழித்தாலும் ஜவுளி உற்பத்தியே இங்கு பிரதானம். உள் நாட்டிற்கான தேவைகளுக்கும் வெளி நாட்டிற்கான தேவைகளுக்கும் தனித்தனியாக இங்கு நிறுவனங்கள் இருக்கின்றன. உள் நாட்டு தேவைகள் என்று பார்த்தால் பெட்சீட், போர்வை, தலைகாணி உறைகள், துண்டுகள், திரை சீலைகள், மிதியடிகள் என அடங்கும். வெளி நாட்டிற்கான உற்பத்தி என்பது குஷன்கள், டேபிளின் மீது வைக்கப்படும் டேபிள் கிளாத், மேட், நாப்கின், ரன்னர், பரிமாறும் நபர் அணியும் ஆப்ரான்கள், கிளவ், பாட் ஹோல்டர் என ரகங்கள் கணக்கில் அடங்காது.

ஆயிரக்கணக்கான நபர்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பளிக்கும் நகரமாக கரூர் திகழ்கிறது. திருப்பூர் சந்தித்திருக்கும் சாயப்பட்டறை பிரச்சனை கரூரிலும் உண்டு. எனினும் திருப்பூர் அளவிற்கு இங்கு உற்பத்தி குறைவு என்பதால் கழிவுகளும் குறைவு. தமிழகம் முழுவதிலும் இருந்து கரூருக்கு தினமும் நூல் பேலகள் வந்து இறங்கிக்கொண்டே இருக்கும். அருப்புக்கோட்டை ஜெயவிலாஸின் தரமான நூல் முதல் சாதாரண ரகங்களும் தேவைக்கேற்ப தினசரி வந்திறங்கும். 2, 2/20, 2/30, 10, 2/10 என பல்வேறு ரக நூல்கள் இதில் அடக்கம்.

இப்படி வரும் கோரா நூல்கள் சாயப்பட்டறைகளில் சாயமேற்றப்பட்டு வெள்ளகோவில், முத்தூர், காங்கயம், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, திருச்செங்கோடு, குமாரபாளையம், சென்னிமலை என சுற்று வட்டார நகர கிராமங்களில் இருக்கும் தறிகளுக்கு வினியோகிக்கப்படும். நெசவு செய்து வரும் கலர் துணி தரம் பார்க்கப்பட்டு தையலுக்கு அனுப்பப்படும். தைக்கப்பட்ட துணியானது தரம் பார்க்கப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டு லாரிகளில் தூத்துக்குடிக்கோ அல்லது சென்னை துறைமுகத்திற்கோ அனுப்பப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

தினசரி வெளி நாடுகளில் இருந்து வெளியூர்களில் இருந்தும் வரும் நபர்களால் இங்குள்ள அனைத்து லாட்ஜ் ஹோட்டல்களும் பரபரப்பாகவே இருக்கும். முன் பதிவு இல்லை எனில் ரூம் கிடைக்காது. தினசரி பல பஸ்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஆட்களை அழைத்து வந்து பணியளிப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

நூல் விலை ஏற்ற இறக்கங்கள் மற்றும் அன்னிய செலாவணியில் டாலரின் ஏற்ற இறக்கங்கள் இந்த தொழிலை பாதிக்கும் காரணிகள் ஆகும். மேலும் நன்கு படித்த மாணவர்கள் சென்னை திருப்பூருக்கு சென்றுவிடுவதால் எப்பொழுதுமே ஸ்கில்டு லேபருக்கு டிமாண்ட் இருக்கும். ஹேண்ட் லூம் டெக்னாலஜி மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்த நபர்களுக்கு இந்த துறை ஏற்றது. டிசைனர்களுக்கும் டிமாண்ட் அதிகம். சரளமாக ஆங்கிலம் பேசத்தெரிந்து கணிணி தெரிந்திருந்தால் வேலை நிச்சயம்.

சமீப காலமாக சரிவினை சந்தித்து வரும் இந்த தொழில் சீனாவின் போட்டியால் திணறி வருகிறது. இருப்பினும் குவாலிட்டியில் நம்மை மிஞ்ச யாரும் இல்லை என்பதால் ஓடிக்கொண்டு இருக்கிறது.

உழைப்பு... இந்த ஒரு வார்த்தைக்கு மரியாதை தரும் நபருக்கு கரூர் ஏற்ற நகரம்தான்.

No comments:

Post a Comment