Monday, April 2, 2012
கம்ப்யூட்டர் சாம்பிராணிகள்
சில நாட்களுக்கு முன்பு என் நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். சிறிது நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்த போது அவரின் மகன் பள்ளியில் இருந்து வந்து வீட்டுப்பாடங்கள் செய்ய ஆரம்பித்தான். அப்பொழுதுதான் கவனித்தேன். சிறிய சிறிய கணக்குகளுக்கு கால்குலேட்டரை தடவிக்கொண்டிருந்தான். படிக்கும் காலத்தில் நானெல்லாம் கணக்கில் புலி அல்ல. ஆனால் இவ்வளவு எளிமையான கணக்குகளுக்கு சிரமப்பட்டது கிடையாது. இத்தனைக்கும் அந்த பையன் பயில்வது நகரின் பிரபலமான பள்ளியாகும். மேலும் கம்ப்யூட்டரில் அவன் புலி போல பாய்கிறான். அவனை உற்று நோக்கினால் வயதிற்கு மீறிய அறிவு இருப்பது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் அவனின் மறுபக்கம் அவன் பிராய்லர் கோழி போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
இன்றைய காலகட்டத்தில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு வெளி நாட்டில் இருக்கும் மதிப்பு மரியாதையும் அவர்களின் சமயோசித புத்திக்கும் கணக்கிடும் முறைக்கும் தான். ஆனால் வரும் தலைமுறைகள் கணிணியை மட்டுமே கட்டி அழுது கொண்டிருக்கின்றது. இதனால மற்றவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு அற்றுப்போய்விடுகிறது. நாட்டுக்கோழிகளாக இருப்பதால்தான் நமக்கு சந்தையில் மரியாதை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கணிணியில் புகுந்து விளையாடும் அடுத்த தலைமுறையினருக்கு வாழ்க்கை கல்வியின் அவசியம் தெரியாமல் இருக்கிறது. பள்ளி முடிந்ததும் விளையாட எல்லாம் நேரம் இல்லை. அபாகஸ் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ் என அவர்களது சுமை வேறு வடிவில் வந்து விடுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் விதிவிலக்கல்ல. மதிப்பெண்களே குறிக்கோளாக வாழ்க்கை நகர்கிறது. இவர்களுக்கு தெரிவதில்லை. மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி நிறைய விசயங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பது. ஆங்கிலம் என்பது மொழி என்பதை தாண்டி அது ஒரு அறிவு என திணிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பயின்ற பள்ளி என்பது தமிழ் மீடியம் தான். ஆனால் அதிலிருந்து கிளம்பியவர்கள் டாக்டர், கலெக்டர், இன்ஜினியர் என ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களிடம் எல்லாம் தனித்தன்மையாக ஒரு ஆளுமைத்தன்மையை காண இயலும்.
இன்றிருக்கும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரே குறிக்கோள் என்னவெனில் +2வில் 1000க்கும் மேல் மதிப்பெண்கள். பிறகு ஒரு பொறியியல் பட்டம். பின்னர் கணிணி நிறுவனத்தில் வேலை. கை நிறையும் சம்பளம். அவ்வளவே. இன்று எத்தனை பேர் IAS, IPS, IFS படிப்பேன் என்கிறார்கள்? சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களில் வளரும் குழந்தைகளுக்கு முறையான வழி காட்டுதல் கிடைக்கலாம். ஆனால் கரூர், திண்டுக்கல், மணப்பாறை மாதிரியான ரெண்டுங்கெட்டான் நகரங்களில் வளரும் குழந்தைகளில்தான் இந்த முரண்பாடுகள் தெளிவாக தெரிகிறது.
இன்று கம்ப்யூட்டர் என்பது மலிந்துவிட்டது. எனவே இதையும் தாண்டி நாம் மற்ற அறிவுகளை வளர்த்து வைத்துக்கொண்டால்தான் நம்மால் நெருப்பு போல பிரகாசிக்க முடியும். இல்லை எனில் புகையும் சாதாரண கம்யூட்டர் சாம்பிராணிகளாகத்தான் வாழ்க்கை சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
excellent write up sir, நாளைய சமுதாயத்தின் எதிர்காலம் எப்படி இருக்க போகிறதோ ? இன்று நகரத்தில் இருக்கும் பிள்ளைகளில் எத்தனை பேருக்கு நீச்சல் அடிக்க தெரியும்? வாழ்க்கையே கம்ப்யூட்டர்தான் என்பது போன்ற மாயையை பெற்றோர்களும் பள்ளிகூடங்களும் உருவாக்கி அவர்களை சிதைத்து கொண்டிருக்கின்றன.
ReplyDeleteபிராய்ளர் கோழி நட்டு கோழி மேட்டர் அருமை
தலைப்பு இந்த கட்டுரைக்கு மிகப்பொருத்தம். இன்றைய குழந்தைகள் பிராய்லர் கோழி போலத்தான் வளர்கிறார்கள்.
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜா.. நீச்சலை விட்டுவிட்டேனே! சரியாக நியாபகப்படுத்தி உள்ளீர்கள்.
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பலா.. ஆசிரியர்கள் கையில்தான் இவர்களின் எதிர்காலம் கொஞ்சமேனும் உள்ளது. ஆனால் நம்ம ஊரில்தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாக கொடுத்து கேவலப்படுத்தி வருகிறார்கள். சம்பளம் என்பது ஆசிரியர்களின் தேவைக்குத்தானே ஒழிய அவர்களின் சேவைக்கு அல்ல. அவர்களின் சேவைக்கு எவ்வளவு தந்தாலும் தகும்.
ReplyDelete