
நேற்று கர்ணன் படம் டிவியில் போட்டிருந்தார்கள். தற்சமயம் இந்த படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு நன்றாக ஓடிக்கொண்டிருப்பதாக கேள்வி. இந்த படத்தை முழுவதும் பார்த்தபின்பு படத்தில் கர்ணன் கதாபாத்திரம் சிவாஜிக்காக சில பல இடங்களில் ஓவர் பில்டப் செய்யப்பட்டிருந்தது தெரிகிறது. மகாபாரதமே பல சமயம் அந்தந்த ஊர்களுக்கு தகுந்தாற்போல் மாற்றி மாற்றி புனையப்பட்டிருக்கிறதோ என்கிற சந்தேகமும் என்னுள் எழுகிறது.
முதலில் மகாபாரதம் ஒரு கதை அல்ல. அது ஒரு இதிகாசம். அதாவது ஒரு அவதார புருஷனால் நடத்தப்பட்ட வாழ்க்கை நாடகம். அன்றைய பாரதம் என்பது பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் சில அண்டை நாடுகளையும் சேர்த்ததே. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நாடாக மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. மகாபாரத காலத்தின்படி பார்த்தால் தமிழகம், கேரளா மற்றும் கர்னாடக ஆந்திர பிரதேசங்களின் தெற்கு பகுதிகள் அடர்ந்த வனமாகவும், ரிஷிகள் இருந்த இடங்களாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏனெனில் பாரத போரில் திராவிட நாடுகள் சம்பந்தப்பட்ட நாடுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் அகஸ்தியரை பற்றிய குறிப்பு வரும் சமயங்களில் தென்னகம் என்பது இமயமலைக்கு இணையாக கடவுள்களின் பிரதேசமாகவே இருந்திருக்கிறது.
விசயத்திற்கு வருவோம். சினிமா கதையின்படி கர்ணன் மிகுந்த பலசாலியாகவும், பராக்கிரமசாலியாகவும் காட்டப்பட்டு இருக்கிறான். இருக்கலாம். சில இடங்களில் உண்மையாக அப்படித்தான் இருந்தது. ஆனால் சினிமாவில் அந்த ப்ளஸ் பாய்ண்ட்கள் மட்டும் காட்டப்பட்டு மற்றவை மறைக்கப்பட்டு விட்டன. ரஜாஜி எழுதிய வியாசர் விருந்து புத்தகத்திலும் சரி விரிவான மகாபாரத காண்டங்களிலும் சரி கர்ணன் சில இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறான். சில இடங்களில் தோல்வியும் அடைந்திருக்கிறான். குறிப்பாக விராட போரில் அருச்சுனன் ஒரே ஆள் கவுரவ படையின் அனைவரையும் வெற்றி கொண்டு விரட்டி அடித்தான் கர்ணன் உள்பட. வனத்தில் கந்தர்வர்களுடன் நடந்த போரிலும் துரியோதனன் மற்றும் கர்ணன் தோல்வி அடைந்து அருச்சுனன் வந்து போரிட்டு மீட்டான். மகாபாரதத்தின் மூலக்கதையின் படி யாரிடமும் இல்லாத கர்ணனிடம் இருந்த சக்தி ஆயுதத்தை பற்றியும் அதனை வைத்து கடோற்கஜனை அழித்ததை பற்றி சினிமாவில் காட்டப்படவில்லை. நாகாஸ்திர பிரயோகம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது.

முழு இதிகாசத்தினையும் உற்றுப்படித்தால் கெளரவர்கள் பக்கம் இருந்த நியாயம் சொல்லப்படாமலேயே போய்விட்டது. விசித்திரவீரியனுக்கு பிறந்தவர்களில் மூத்தவன் திருதராஷ்டிரன் இளையவன் பாண்டு. மூத்தவனுக்கே இராஜ்யபாரம் என்ற போதும் அவன் பிறவிக்குருடன் என்பதால் பாண்டு பட்டத்திற்கு வந்தான். பாண்டுவும் பெரிய ஆள் இல்லை. அவனுக்கு வெண் குஷ்டம். மேலும் புத்திர சந்தானம் பெருக்க வழி இல்லாதவன். பாண்டவர்கள் யாரும் பாண்டுவுக்கு பிறக்கவில்லை. குந்தியின் மந்திர சக்தி மூலம் கடவுளர்களால் பிறந்தவர்கள் தான் பாண்டவர்கள். ஆனால் கர்ணன் மட்டும் இதே காரணம் கொண்டு ஒதுக்கப்பட்டுவிட்டான் என்பது வேறு கதை. நியாயப்பிரகாரம் பதவிக்கு வரவேண்டிய திருதராஷ்டிரன் பாண்டு மறைவிற்கு பிறகு ராச்சியம் ஆண்டான். முறைப்படியே அவனுக்குதான் ராஜ்ஜியம். அவனுக்கு பிறகு துரியோதனனுக்குதான் வந்திருக்க வேண்டிய ராஜ்ஜியம்தான் அது. அதனாலேயே திருதராஷ்டிரனும் அவன் வாரிசான துரியோதனனும் நாட்டை பங்கிட்டு கொடுக்க விரும்பாதவர்களாக இருந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே பீஷ்மர், துரோணர், கிருபர் எல்லோரும் மறுத்து பேச முடியாதவர்களாக இருந்திருக்கிறார்கள்.
துரியோதனன் செய்த ஒரே தவறு திரவுபதியை கேவலப்படுத்தியதுதான். அதிலிருந்து ஆட்டம் மாறி எல்லாம் பாண்டவர்களுக்கு சாதகமாகவே முடிந்தது. கிருஷ்ணன் இல்லை எனில் தலைகீழாக நின்றாலும் கவுரவ சேனையை நெருங்கி இருக்கக்கூட முடியாது. பீஷ்மர் விருப்ப மரணம் என்கிற வரத்துடன் வாழ்பவர். உலகையே அழிக்கும் பிரம்மாஸ்திர பிரயோகம் தெரிந்தவர். என்னவோ தெரியவில்லை கடைசி வரை அதை அவர் பிரயோகப்படுத்தவில்லை. எந்த ஒரு சண்டையிலும் தோல்வி என்பதையே காணாதவர். சிகண்டியை வைத்து இவரை காலி செய்தான் கிருஷ்ணன். துரோணாச்சாரியார். எல்லோருக்கும் குல குரு. தனுர்வேதத்தில் கரை கண்டவர் (யாராலும் போரில் வெற்றி கொள்ள முடியாதவர். திருஷ்டதுய்மனால் வஞ்சகமாக கொல்லப்பட்டவர்). இவரும் இவர் மகன் அஸ்வத்தாமாவும் பிரம்மாஸ்திர பிரயோகம் தெரிந்தவர்கள். அஸ்வத்தாமா சாகா வரம் பெற்றவன். இன்றளவும் அவன் உயிருடன் தொழு நோயாளியாக இருப்பதாக கதை சொல்கிறது. உலகில் யாரிடமும் இல்லாத மிக சக்தி வாய்ந்த ஆயுதமாக சொல்லப்பட்ட சிவனின் வஜ்ராயுதம் விதுரனிடம் இருந்தது. ஆனால் விதுரன் போரில் கலந்து கொள்ளவில்லை. மார்புக்கவசம் இருக்கும் வரை கொல்லமுடியாதவன் கர்ணன். ஆனால் அவன் அதை தானம் அளித்துவிட மரணம் நிச்சயமானது. ஆனால் அதற்கு பதிலாக இந்திரனிடம் இருந்து பெற்ற சக்தி ஆயுதத்தை வைத்து அருச்சுனனை கொன்றுவிடலாம் என்றிருந்தான். ஆனால் விதிவசமாக கடோத்கஜன் அதனால் இறந்து போனான். நாகஸ்திரமும் கிருஷணனால் பயனற்று போனது. பிரம்மாஸ்திர வித்தை தெரிந்திருந்தும் பரசுராமன் சாபத்தால் மறந்து போனது. மொத்தத்தில் சக்தியற்றவனாகத்தான் இருந்தான். இருப்பினும் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் போர் நடந்தபோது கிருஷ்ணன் கர்ணனின் வில்வித்தையைத்தான் போற்றினான். அர்ஜுனனின் அம்பு கர்ணனின் தேரை 30 அடி நகர்த்தினான். ஆனால் கர்ணன் அம்பெய்தபோது அருச்சுனன் தேர் 3 அடிதான் நகர்ந்தது. அர்ஜுனன் இது குறித்து கர்ணனனின் திறமையை குறைத்து மதிப்பிட்டபோது கிருஷ்ணன் சொன்னான் “அர்ஜுனா உன் தேரில் நான் இருக்கிறேன். கொடியில் அனுமன் இருக்கிறான். இப்படி இரண்டு கடவுள்கள் உன் தேரை காத்திருக்கும் சமயத்தில் இவன் உன் தேரை 3 அடி நகர்த்துகிறான் என்றால் நாங்கள் மட்டும் இல்லை எனில் உன் தேர் இவன் அம்புகளினால் காணாமல் போயிருக்கும்” என்று. இதிலிருந்து கர்ணன் நல்ல வில்லாளி என்பது புலனாகிறது. பீமனை கொல்ல வாய்ப்பிருந்தபோதும் கொல்லாமல் விட்டான் கர்ணன். இவனது தேர் மண்ணில் புதையுண்டு இருந்த சமயம் ஆயுதமில்லாதவனை கொல்லக்கூடாது என்னும் விதியை மறந்து அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.

இவர்களை தவிர குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு மாகாரதர் உண்டு. அவன் பகதத்தன் என்னும் ஒரு கிழவன். இந்த கிழட்டு அரசனின் சுப்ரதீகம் என்னும் யானை யாராலும் கொல்ல முடியாதது. இந்திரனின் ஐராவதத்திற்கு ஒப்பானது இந்த சுப்ரதீகம். யானைப்போரில் யாராலும் கொல்ல முடியாதவன் இவன். மிகுந்த கிழவனாகிவிட்டபடியால் இவனின் நெற்றி சதை மிகவும் தொங்கி கண்ணை மூடிவிடும். எனவே ஒரு பட்டுத்துணியால் இழுத்து கட்டி இருப்பான். இந்த ரகசியத்தினை கிருஷ்ணன் மூலம் அறிந்த அர்ஜுனன் முதலில் துணியை வெட்டி பின் ஆளை கொன்றான். அதே நேரத்தில் யானையில் கால்களுக்கு நடுவில் ஒளிந்து கொண்டிருந்த பீமன் யானையை மதம் பிடிக்க செய்து முடிவில் அர்ஜுனனால் கொல்லப்பட்டது. இரண்டு மகாரதர்கள் சேர்ந்து ஒரு கிழவனை கொல்ல ஒரு நாள் முழுவதும் ஆனதாம். இவனை மட்டும் இன்னும் ஒரு நாள் விட்டிருந்தால் பாண்டவ சேனையில் இரண்டு அக்குரோணிகளை காலி செய்திருப்பான் என வியாசர் சொல்கிறார்.

அதேபோல பூரிசிவரஸ் கதை. கவுரவர்கள் படையில் ஒரு மகாரதனாக இருந்த பூரிசிவரஸுக்கும் அவன் பரம்பரை வைரி சாத்யகிக்கும் (கிருஷ்ணனின் பங்காளி) நடந்த சண்டையில் சாத்யகி தோற்ற நேரத்தில் பின்னால் இருந்து கிருஷ்ணன் தூண்டுதலால் அர்ஜுனன் அம்பெய்து பூரிசிவரசின் கையை வெட்ட கிடைத்த நேரத்தில் சாத்யகி அவனை கொன்றான். அர்ஜுனன் வில்லுக்கு எப்படியோ அதே போல வாள் சண்டைக்கு பூரிசிவரஸ் என்பது அனைவரும் அறிந்தது.
மொத்தத்தில் பாண்டவர்களை அழிக்க நினைக்காத பீஷ்மர், பிரியமான சிஷ்யனான அர்ஜுனனை அழிக்க நினைக்காத துரோனர், அர்ஜுனனை தவிர யாரையும் கொல்ல மாட்டாத கர்ணன், விதிவசத்தால் அணி மாறிய சல்லியன், போரை விரும்பாமல் ஒதுங்கிவிட்ட விதுரன், கடைசியில் நடு நிலை வகித்துவிட்ட பலராமன் (இவன் துரியோதனின் குரு) என பல விசயங்கள் துரியோதனனுக்கு சாதகமாக இல்லாமல் போய்விட்டது. கஜாயுத சண்டையில் நாபிக்கு (தொப்புள்) கீழ் அடிக்க கூடாது என்கிற விதியை மீறி பீமன் துரியோதனனை அடித்து கொன்றான் (துரியோதனன் உயிர் தொடையில்). பாண்டவர்கள் சூழ்ச்சியால் இழந்த நாட்டை சூழ்ச்சியினாலேயே வென்றார்கள் என்பதுதான் கொள்ளப்படவேண்டிய பாடம்.
sir fantastic, naan ஒரு கிருத்துவன் என்பதால் சிறுவயதில் இந்த கதைகளையெல்லாம் கேட்டதில்லை .... கூர்ந்து படித்தால் mikavum விறுவிறுப்பாக இருக்கும் போல
ReplyDeleteஆமாம். அற்புதமான கதையம்சங்கள் கொண்ட இதிகாசம். இராமாயணத்தை விட சுவராஸ்யங்கள் அதிகம். ஒரு நிறுவனத்தின் மேலாளர் பதவிக்கு ஒருவன் வரவேண்டும் எனில் மகாபாரதத்தை முழுக்க படித்து அர்த்தம் செய்து கொண்டால் போதுமானது. அவன் ஒரு வெற்றிகரமான மேலாளராக முடியும். அவ்வளவு சூட்சுமங்கள் நிறைந்தது. குறிப்பாக விதுரன் சொல்லும் விசயங்களை மனதில் கொள்ள வேண்டும். உதாரணம் “கோடாலி ஒரு நாளும் பாறையை வெட்டாது”. அர்த்தம் என்னவெனில் அர்த்தமில்லாத கோபம் எல்லா சமயங்களிலும் பயனளிக்காது. இப்படி பல..
ReplyDeleteமிகவும் அருமை அருமை
ReplyDelete