Sunday, October 30, 2011
கொண்டாட்டங்கள் குறைந்துவிட்ட தீபாவளி
தீபாவளி – இந்த வார்த்தையை கேட்டதுமே மனம் என்றுமே இளமைக்காலத்தினை பின்னோக்கி சென்று பார்க்கிறது. எனது பால்ய காலம் முழுவதும் திண்டுக்கல் மாவட்டம் ஆலம்பாடி அஞ்சல் சீதை நகரில் மையம் கொண்டிருந்தது. அப்பா தனியார் சிமெண்ட் ஆலையில் பணியாற்ற பணியாளர் குடியிருப்பில் நண்பர்கள் குழாமாக வாழ்க்கை.
சிறிய வயதில் எந்த ஒரு வேலையும் சரி விளையாட்டும் சரி அவ்வளவு ஏன் அரட்டைக்கு கூட பத்து நபர்களாக சேர்ந்துதான். பொன்வண்டு பிடிக்க, குளத்தில் மீன் பிடிக்க, ஊர் சுற்ற, விளையாட என அனைத்து பணிகளும் கூட்டமாகவே செய்வோம். தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அங்கொன்றும் இங்கொன்ற்மாய் பட்டாசு சத்தங்கள் கேட்க ஆரம்பித்துவிடும். தீபாவளி நெருஙக நெருங்க சத்தம் அதிகமாகி விடும். அருகில் இருக்கும் நகரமான கரூரில் ஆடைகள் எல்லாம் வாங்கிய பின் உள்ளூரில் தைக்க கொடுத்து வாங்க 20 நாட்கள் ஆகும். அப்பொழுதெல்லாம் ரெடிமேட் ஆடை கலாச்சாரமே இல்லை. தீபாவளிக்கு முதல் நாள் என் அண்ணன் ஊரிலிருந்து விடுமுறைக்கு வரும்பொழுது கொஞ்சம் பட்டாசுகள் வாங்கி வருவார். அந்த வருகைக்காக நானும் எனது தம்பியும் பஸ் ஸ்டாண்டில் மதிய உணவு முடித்தவுடன் தவமிருக்க ஆரம்பித்து விடுவோம். மாலை 5 மணிக்கு வரும் வண்டியில் அண்ணன் வந்து இறங்கியதும் அவர் கொண்டு வந்த பையை கம்பீரமாக தூக்கிக்கொண்டு காலணிக்குள் செல்வோம். மனம் நிறைய மகிழ்ச்சியாக இருக்கும். அன்று கோடி ரூபாய் பணம் தேவை இருக்க வில்லை இந்த சந்தோசத்தினை பெற.
ஒவ்வொரு நண்பர்களுக்கும் அவர்களது வயதினை ஒத்த குழு இருக்கும். என் அப்பா தரும் ஒரு நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு அண்ணா அருகில் இருக்கும் சிறு நகரமான குஜிலியம்பாறைக்கு பட்டாசு வாங்க செல்வார். வரும் போது ஒரு கூடை நிறைய பட்டாசுகள் இருக்கும். அண்ணன் தம்பி மூவருக்கும் தீபாவளிக்கு முதல் நாள் இரவே பட்டாசுகள் பிரிக்கப்பட்டு விடும். அண்ணனுக்கு ராக்கெட், சரம், அணுகுண்டு என பெரிய வெடிகள். எனக்கு குருவி வெடி, யானைவெடி, டபுள்ஷாட் போன்ற சிறிய வெடிகளும் மத்தாப்புகளும் இருக்கும். தம்பிக்கு வெடியே கிடையாது. மத்தாப்புகளும் துப்பாக்கியும் தான்.
காலை நான்கரை மணிக்கு அப்பா எழுப்பிவிடும் முன்பே எழுந்து எண்ணை தேய்த்து குளிக்க ரெடியாக இருப்போம் நானும் எனது தம்பியும். மெதுவாக குளித்து பூஜையை அப்பா முடிப்பதற்கும் பரபரப்பாகிவிடும். மொத்த காலணியும் பட்டாசு சத்தத்தில் அலறிக்கொண்டு இருக்கும்போது நமக்கு இருப்பு கொள்ளாது. புதுத்துணி உடுத்திக்கொண்டு அண்ணன் முதல் வெடி வெடிக்கும் வரை காத்திருப்போம். எதிலும் கட்டுப்பாடுதான். ஆனால் அதில்தான் சுவராசியம் இருக்கும். எதிர் வீடு ஐயர் என்பதால் அவர்கள் விடிய விடிய வெடித்து களைத்து காபி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது நாங்கள் வெடிக்க ஆரம்பிப்போம். அன்று முழுவதும் வெடிகள் வெடிப்பதை தவிர வேறு வேலையே கிடையாது. வீட்டில் செய்த பலகாரங்களும் கறிக்குழம்புமாய் வீடே களை கட்டி இருக்கும். மதியத்திற்கு மேல் வெடிக்காத பட்டாசுகளை தேடி எடுத்து அவைகளின் மருந்துகளை ஒரு பேப்பரில் கொட்டி அதை எரித்து விளையாடுவோம். யார் வீட்டின் வாசலில் அதிக பட்டாசு குப்பை இருந்தது என்பது முக்கியமான விவாதமாக அன்று இருக்கும். விண்ணை முட்டும் பட்டாசு ரகங்கள் இல்லாத காலம் அது. ஆனால் மனதின் மகிழ்ச்சி விண்ணை தொட்டுவிடும்.
வயது ஏற ஏற பட்டாசின் மோகம் குறைந்தது. தொலைக்காட்சி பெட்டிகளின் வருகை தீபாவளி சிறப்பு ஒளிபரப்புகள் வாழ்க்கையின் ரசனையை வீட்டிற்குள்ளேயே புதைத்துவிட்டது. அதிக பட்டாசுகள் இல்லாமல் வானத்தில் வர்ண் ஜாலங்கள் காட்டும் வெடிகள் வந்துவிட்டன. சீனப்பட்டாசுகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. தரத்தில் சிவகாசி தயாரிப்புகளுக்கு அருகே கூட நிற்க முடியாத சீனத்து பட்டாசுகளினால் உள்ளூர் நுகர்வு குறைந்துவிட்டது. இந்த தீபாவளிக்கு துணி எடுக்க கூட மனம் உற்சாகம் பெறவில்லை. அவரவர்களின் தகப்பனார்கள் பணி ஓய்வு பெற்று அவரவர்கள் சொந்த ஊர்களில் செட்டிலாகிவிட்டபடியால் நண்பர்கள் எல்லாம் பிரிய வேண்டி வந்தது. ஊர் தாண்டி நாடு தாண்டி பணத்திற்காக அடுத்த அடுத்த தேவைகளுக்காக யாருக்கோ சம்பாதித்து கொடுத்து நாமும் ஊதியம் பெற்று இது போன்ற விழா கொண்டாட்டங்களை இழந்து விட்டோம். இன்றைய தீபாவளி சந்தோஷம் என்பது ஒரு சில மெயில்களிலும் SMSகளிலும் அடங்கிவிடுகிறது. அடுத்த தலைமுறைக்கு இந்த சந்தோஷ தருணங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லாமலேயே போய்விட்டது.
Monday, October 24, 2011
நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Sunday, October 16, 2011
Tuesday, October 4, 2011
வாகை சூட வா – விமர்சனம்
1966ம் வருடம் புதுக்கோட்டை மாவட்டம் என ஆரம்பித்ததும்... அட! நம்ம ஊர் கதைக்களமா என நிமிர்ந்து உட்கார்ந்தேன்.. (எனது பூர்வீகமும் புதுகைதான்).
ஒரு டூரிங் டாக்கீஸில் எம்ஜிஆரை அடிக்கும் நம்பியாரை பார்த்துவிட்டு பொங்கி எழும் ஒரு குறவர் தனது துப்பாக்கியால் திரையை நோக்கி சுடும்போது மக்களின் அறிவின்மையை ஒரு காட்சியில் கொண்டு வருகிறார் இயக்குனர் சற்குணம். பாராட்டுக்கள். களவாணியில் சிக்சர் அடித்தவர்.. இந்த படத்தில் ஃபோர் அடிக்க முயற்சித்திருக்கிறார்.
கதை நாயகனாக விமல். நாயகியாக இனியா. அறிமுகமாம்.. ஆனால் நடிப்பில் அப்படி தெரியவில்லை. பாரதிராஜாவின் அறிமுகம் போல அதகளம். முகத்தில் உணர்ச்சிகளை எளிதில் கொண்டுவந்து மாற்றிக்காண்பிக்கிறார். ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பாட்டு. இருந்தாலும் எல்லாமே சின்ன சின்ன பாட்டாக வருகிறது. இசை அமைப்பாளரும் அறிமுகமே.. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை. தமிழ் சினிமாவில் புதுமை. ஒளிப்பதிவு படத்தின் உயிரோட்டத்திற்கு முக்கிய காரணம். செம்மண் பூமி கதை என்பதால் விஷுவலில் ஒரு வித்யாசத்தினை காட்டி இருக்கிறார்கள். பீரியட் படம் என்பதை விஷுவல் புரிய வைக்கிறது. படத்தில் வரும் சிறுவர்களும் அவர்களது நக்கல்களும் கலகலப்பு.
விமலை சுற்றியே கதை நகர்ந்து வருகிறது. உணர்ச்சிகள் இல்லாத அந்த முகத்தினை தொடர்ந்து பார்க்க அலுப்பு வந்து விடுகிறது. கமலஹாசனின் கால்சீட் கிடைக்கததால்தான் தமிழ் சினிமாவிற்கு மோகன் என்றொரு ஹீரோ வந்தார். அதுபோல அஜீத், விஜய் எல்லோரும் கலக்கல் சினிமா கான்செப்ட்டிற்கு போய்விட எதார்த்த சினிமாவிற்கு நாயகனாக விமல் நம்பிக்கை அளிக்கிறார்.
டூனாலெட்டு என்னும் கேரக்டர் தம்பி ராமையா பொருந்திப்போகிறார். மற்ற கதை மாந்தர்களும் பொருத்தம் தான்.. ஆனால் எதற்காக கதையை 45 வருடங்களுக்கு முன்பு நடந்தது போல காட்ட வேண்டும்? சம காலத்திய படமாகவே காட்டி இருக்கலாமே? மேலும் படத்தில் அப்பா கேரக்டராக வரும் பாக்யராஜிற்கு அதிகம் வேலை இல்லை. கிடைத்த இடத்தில் முத்திரை பதிக்கிறார். 1966லேயே அரசு வேலை கிடைக்க கஷ்டம் என்பது போல காட்டியிருக்கிறார்கள். அந்த காலத்தில் அது எளிதுதானே? அது காமராசர் ஆட்சிக்காலம் ஆச்சே! வாத்தியார் உத்தியோகம் எளிதில் கிடைத்ததே..! சரி.. பாக்யராஜ் படித்தவர் தானே.. அதுவும் சுதந்திரம் கிடைத்த காலத்திலேயே..! அவருக்கு கூடவா அரசு வேலை கிடைக்கவில்லை??! அதே போல 1950 களிலேயே முடிவுக்கு வந்து விட்ட “ஆண்டே” (ஜமீன்தார்களின் திவான்கள்) கேரக்டர்களை 1966 கதைக்களத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.. நெருடல்.
நான் 90களின் ஆரம்பத்தில் பாலிடெக்னிக் படிக்க செட்டிநாட்டில் இருந்த சமயம் இந்த படத்தில் வரும் டூனாலெட்டு கேரக்டர் போல் ஒருவர் இருந்தார். இப்படித்தான் புரியாத வகையில் கேள்விகள் மூலம் கணக்கு போட்டு “படிச்ச பசங்களா இதுக்கு பதில் சொல்லுங்க” என்பார். நாமதான் ஸ்கூல்ல படிக்கிறப்பவே அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடெண்ட்ஸ் (கணக்கு பீரியட்ல கிளாஸ்க்கு வெளியே அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடெண்ட்ஸ்) ஆச்சே.. எப்படி சொல்ல முடியும்? அவரை கண்டாலே ஓட்டம்தான். கடைசி ஆண்டு படிக்கும் போதுதான் அவரின் பல கணக்குளை ஆராய்ந்து விடை தெரியாமல் அவரிடமே கேட்டு தெரிந்து கொண்டோம். பார்க்க பைத்தியக்காரன் போல இருந்த அவர் அந்தக்கால இண்டர்மீடியேட் வரை படித்தவர் என்பதும் விளங்கியது. பர்மாவில் சம்பாத்யம் செய்து வசதியாக இருந்த அவர் அங்கே கலவரத்தில் சொத்துக்களை இழந்து பூர்வீக பூமிக்கு வந்து பிரமை பிடித்தவர் போல ஆகிவிட்டாராம். ஆனால் பேச்சில் மிகவும் தெளிவு இருக்கும்.
கதைக்கு வருவோம்.. இடைவேளை வரை ஜவ்வு மிட்டாய் போல காட்சிகள் நகர்ந்தாலும் இடைவேளைக்கு பிறகு படம் வேகமாக பயணிக்கிறது. கண்டிப்பாக இந்த படம் 20 நாட்களுக்கு அதிகமாக ஓடாது. ஆனாலும் பரவாயில்லை அந்த ஓட்டமே தயாரிப்பாளருக்கு இலாபத்தினை அளித்திருக்கும்.
ஒரு முறை பார்க்கலாம்.
Subscribe to:
Posts (Atom)