Thursday, December 29, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2012



நண்பர்கள் அனைவருக்கும் இனிய உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2012 ம் ஆண்டில் அனைவரும் அனைத்து நன்மைகளும் கிடைக்கப்பெற்று சுபீட்சமாய் வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

நம்மால் இயன்ற வரை பிறர்க்கு நனமைகள் செய்வோம். முடியாது போனால் துன்பம் செய்யாது இருப்போம்.

Saturday, December 24, 2011

4ம் ஆண்டில் நடை பயில்கிறது

இந்த வலைப்பூ நாளையுடன் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. 149 பதிவுகளை தாங்கி குறுகிய நண்பர்களின் பின்னூட்டத்துடன் வெற்றி நடை பயில்கிறது.

இந்த வலைப்பூவை பார்த்தவர்கள், பின்னூட்டம் இட்டவர்கள், தொடர்ந்து படித்து வருபவர்கள், நண்பர்களுக்கு பரிந்துரைத்தவர்கள் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இயேசுபிரான் அனைவருக்கும் அமைதியையும் நன்மையையும் அளிப்பாராக... வாழ்க வளமுடன்..!!

Friday, December 23, 2011

முல்லைப் பெரியாறு – என்னதான் தீர்வு?



கடந்த சில நாட்களாக நிறைய ஆணிகள் இருந்ததால் வலைப்பக்கம் வரமுடியவில்லை. ஆதலால் இந்த வலைப்பூவை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்றவர்கள் மன்னிக்கவும்.

விஷயத்திற்கு வருவோம். இன்று கரூர் முழுவதும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் (டாஸ்மாக், மருந்தகங்கள், மருத்துவமனைகள் நீங்கலாக) அழைப்பு விடுத்து ஒட்டு மொத்தமாக கடையடைப்பு நடத்தி தங்களது ஒன்றுபட்ட கருத்தினை முல்லை பெரியாறு விவகாரத்தில் காண்பித்தனர். முல்லைப் பெரியாறு எங்கிருக்கிறது? அதன் பிரச்சனை என்ன? எதற்காக போராட்டம்? இப்படி யாதொரு கேள்விக்கும் விடை தெரியாத சாமான்ய மக்களும் இந்த கடையடைப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். எங்கும் சிறிய அசம்பாவிதங்களும் இல்லை.

பத்து நாட்களுக்கு முன்பு கரூரில் மலையாளிகள் நடத்தி வரும் வணிக நிறுவனங்கள், டீக்கடைகளை சில அமைப்பின சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி மூடச்செய்து சங்கடத்தினை ஏற்படுத்திய நிலையில் இந்த பந்த் நடைபெற்றுள்ளது. கரூருக்கும் முல்லைப் பெரியாறுக்கும் சம்பந்தம் இல்லை எனினும் தமிழக மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த பெரியாற்றின் பிரச்சனையை அனேகமாக எல்லா தொலைக்காட்சிகளிலும் அங்குலம் அங்குலமாக விவரித்து விட்ட நிலையில் அதன் விபரத்தினை எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும் சுருங்க சொல்லலாம்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் சமஸ்தானத்தினை ஆண்ட சேதுபதி மன்னர் நாட்டின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு இந்த அணையை கட்ட உத்தேசித்து நிதி நிலமை கைகொடுக்காததால் விட்டுப்போனது. பின்பு வந்த ஆங்கிலேயர்கள் இந்த அணையை கட்ட முடிவு செய்து கடும் முயற்சி எடுத்து நிறைய உயிர்ப்பலிகளுக்கு பின்பு கட்டி முடித்தனர். இதனை கட்டிய பொறியாளர் கடைசியில் தன் கைக்காசை செலவு செய்திருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது இந்த அணை இரு மாநில எல்லையில் மாட்டிக்கொண்டது. அணையினை தமிழகமே நிர்வகித்துக்கொள்ள இசைந்த கேரளம் அதற்கு 999 வருடங்களுக்குண்டான குத்தகை தொகையை நிர்ணயித்து ஒதுங்கிக்கொண்டது. தண்ணீர் தேவை அவ்வளவாக தேவைப்படாத கேரளம் பிற்காலத்தில் மின்சார தேவைக்காக தமிழகத்துடன் மீண்டும் ஒப்பந்தம் ஒன்றினை போட்டது. அதாவது மின்சாரமும், மீன்பிடி உரிமையை கேட்டுப்பெற்றது. அப்பொழுதும் தண்ணீர் தேவை அவர்களுக்கு இல்லை.

அதன் பிறகு தண்ணீருக்குண்டான தேவைகள் அதிகரித்து இடுக்கி அணையை கட்டிய போது அவர்கள் எதிர்பார்த்த நீர் வரத்து இல்லை. மின்சார தேவை அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனை பெரிதானது. இப்பொழுது இருக்கும் அணையின் தண்ணீரை முழுமையாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அணையை திறந்தால் தண்ணீர் கேரளாவிற்கே செல்லும். நாம் புறவழியாகத்தான் தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுக்கொள்கிறோம். அதாவது அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் சமயம் வழியும் நீரினை வேறு மதகு வழியாக நாம் பெற்று வெவ்வேறு அணைகளில் தேக்கி வைத்து நாம் உபயோக்கித்து வருகிறோம்.

இப்பொழுது கேரளம் சொல்லும் வண்ணம் இருக்கும் அணையை இடித்து விட்டு இன்னும் கீழ் இறங்கி வேறு அணை கட்டினால் அதனால் உயரத்தில் இருக்கும் மதகிற்கு தண்ணீரை மேலேற்ற முடியாது. மேலும் அவர்கள் கட்டும் அணை மின்சார தேவைக்குதான். எனவே அணையின் தண்ணீரை திறந்துவிட்டுக்கொண்டே இருப்பார்கள். நமக்கு வெறும் காற்றுதான் கிடைக்கும். தமிழகத்தில் 5 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். இதுதான் நிலைமை.

இப்பொழுது பிரச்சனை வேறு வடிவத்தில் மாறிக்கொண்டு வருகிறது. இது சபரி மலை சீசன். அங்கு செல்லும் நம்மவர்கள் தாக்கப்படுகிறார்கள். அங்குள்ள தமிழர்கள் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இங்குள்ள மலையாளிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். இது உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சனை. ஆனால் மத்திய அரசாங்கம் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. இவ்வளவு பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் தமிழகம் வரவுள்ள பிரதமர் இந்த பக்கமே எட்டிப்பார்க்கப் போவதில்லை. இருக்கும் அணையே பாதுகாப்பாக பலமாக இருக்கிறது என விஷய ஞானம் உள்ளவர்கள் சொல்லிவிட்டார்கள். நீதிமன்றமும் இடிக்க கூடாது என சொல்லிவிட்டது. எனினும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் அரசாங்கங்கள் சப்பைக்கட்டு கட்டி வருகின்றன.

எங்கோ உள்ள மக்களின் பிரச்சனை என பார்க்காமல் நம் சகோதரர்களின் பிரச்சனை என்று இதனை பார்க்க வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பிறகு கரூரில் நடந்துள்ள வெற்றிகரமான பந்த் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. எங்கும் சிறிய அளவில் கூட ஆர்ப்பாட்டங்களோ பிரச்சனைகளோ இல்லை. இன்று மட்டும் கரூர் மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தினால் 500 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இரண்டும் வர்த்தக நகரங்களாகும். இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் இந்த இரு நகரங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.

மொத்தத்தில் பேசித் தீர்க்கப்படவேண்டிய இந்த பிரச்சனையை பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பே இரு மாநிலங்களுக்கும் ஒப்புதல் ஏற்படும் வண்ண தீர்க்கப்படவேண்டும்.