Friday, February 24, 2012

வாழ்க தமிழகம்... இருள்க தமிழகம்.



இருளகம்… இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின்சாரம் கிடையாது. அறிவிக்கப்பட்டது 8 மணி நேரம். அறிவிப்பின்றி 4 மணி நேரம். வாழ்ந்தே ஆக வேண்டிய சூழல். என்ன செய்வது?

செய்தித்தாள்களிலும் மற்ற அனைத்து ஊடகங்களும் கத்தி தீர்த்து விட்டன. பலன் கிடையாது. ஆனால் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இந்த ஆண்டு செய்த மின் உற்பத்திதான் அவர்களது எவர்கிரீன் உற்பத்தி. ஆனால் தமிழ்நாடு இருளில் மூழ்கி இருக்கிறது. முரண்பாடு.

ஏனெனில் நெய்வேலியில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் 12% தான் நமக்கு. மிச்சமெல்லாம் மத்திய அரசுக்கு சென்றுவிடும். மத்திய அரசோ தமிழகத்தின் நிலை அறிந்து கூடுதல் மின்சாரம் தரவில்லை. முதல்வரும் கேட்டு கேட்டு சலித்து விட்டார். நீங்கள் இஷ்டத்திற்கு தரும் இலவசத்தினை நிறுத்திக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டனர். சரி.. இலவசமாக தரப்படும் விவசாய மின்சாரத்தினை நிறுத்த முடியுமா? நிறுத்தினால் என்ன ஆகும். எனக்கு தெரிந்த சில விவசாயம் செய்யும் நண்பர்களிடம் கேட்டேன். ஏதோ இந்த இலவச மின்சாரம் கிடைப்பதால்தான் விவசாயமே செய்கிறோம். இல்லை எனில் சும்மா இருக்க வேண்டியதுதான் என புள்ளி விபரங்களோடு பேசுகின்றனர்.

மின்சாரமின்மையால் தொழில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. உற்பத்தி செலவு அதிகமாகிறது. வீட்டில் குழந்தைகள் படிக்க முடியவில்லை. கொலை கொள்ளை அதிகமாகிறது. இப்படி தினமும் புலம்பல்கள்தான். 6 வருடத்திற்கு முன் நான் ஒருமுறை பீகார் தலைநகரமான பாட்னாவிற்கு சென்றிருந்தேன் பணி நிமித்தமாக. பகல் நேரம் மட்டுமே மக்கள் நடமாடுவர். 6 மணிக்கே இரவு உணவை முடித்துவிட்டு அனேகமாக 7 மணிக்கு படுக்க ஆயத்தமாகிவிடுவர். ஏனெனில் எங்கும் மின்சாரம் கிடையாது. தொழிற்சாலைகள் எதுவும் இல்லா மாநிலம் அது. இரவு நடக்கும் ஒரே தொழில் சாராய விற்பனை மட்டுமே. இப்படி பின் தங்கிய நகரை என் வாழ்நாளில் அன்று சந்தித்தபோது நாம் எவ்வளவோ நல்ல வாழ்க்கை வாழ்கிறோம் என பெருமிதமாக நினைத்தேன். ஆனால் இன்று அங்கு நிலமை வேறு. நிதிஷ்குமாரின் திறமையான ஆட்சியால் அங்கு உண்மையிலேயே நகரம் ஒளிர்கிறது. சாலைகள் பாலங்கள் என ஜொலிக்கிறது. ஆனால் நம் தமிழகம்??? இவரை கேட்டால் அவரை சொல்கிறார். அவரை கேட்டால் இவரை சொல்கிறார். மொத்தத்தில் மிளகாய் நம் தலையில் அரைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 2 வருடத்திற்கு நாம் இருட்டில் வாழ்ந்துவிட்டால் பிறகு அந்த இருட்டு நமக்கு பழகிவிடும். இப்பொழுதே 12 நேரம் மின்சாரம் இல்லாமல் வாழ பழகிவிட்டோம். 24 மணி நேரமும் மின்சாரம் இல்லாமல் நம்மால் வாழ முடியாதா? அரவான் படம் வரப்போகிறது.. அந்த படத்தில் மின்சாரம் கிடையாது. செல்போன் கிடையாது. அதாவது நமது நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கை. அந்த மாதிரி வாழ பழகிக்கொள்வோம். தோசைக்கு பதில் களி. பெப்சிக்கு பதில் கூழ். யாரும் படிக்க வேண்டாம்.

இன்னும் 5 வருடத்தில் தமிழர்கள் மற்ற மாநிலங்களில் தற்போதைய பீகாரிகளை போல கூலி வேலை செய்வார்கள். பீகாரிகள் படித்து முன்னேறி தொழில் முனைவார்கள். வாழ்க தமிழகம்... இருள்க தமிழகம்.