சமீபகாலமாக டிவி மற்றும் பத்திரிக்கைகளில் பரபரப்பாக
விளம்பரம் செய்யப்பட்டு வரும் ஈமு கோழி பண்ணை வியாபாரம் பற்றிய ஒரு பதிவு.
வறட்சியால் பாதிக்கப்பட்டு விவசாயம் கெட்டுப்போன நிலங்களை
வைத்திருப்பவர் கூட பண்ணைகள் அமைத்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என
கவர்ச்சியான விளம்பரங்களும் களமிறங்கி உள்ளனர் பல நிறுவனங்கள். அதில் ஒரு நிறுவனம்
வீட்டின் மொட்டைமாடியிலேயே வளர்க்கலாம் என்றும் சொல்லி வருகிறது. குஞ்சுகளை தந்து
தீவனம் மற்றும் மருத்துவ செலவுகளையும் அவர்களே பார்த்துக்கொள்வதாக விளம்பரம்
சொல்கிறது. தங்கம் இலவசம் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. சட்டசபையிலேயே இந்த
கோழி வளர்ப்பினால் வரும் பிரச்சனைகள் மற்றும் இதன் எதிர்காலம் பற்றிய விளக்கத்தினை
ஒரு உறுப்பினர் எழுப்பும் அளவிற்கு புற்றீசல் போல பெருகி வரும் இந்த பண்ணை
வியாபாரம் எதிர்காலத்தில் உண்மையிலேயே வளர்ப்பவர்களுக்கு சம்பாத்யம் அளிக்குமா?
இந்த ஈமு கோழிகளின் இறகுகள், கறி, முட்டை என எல்லாமுமே காசு
என்கின்றனர் விற்பவர்கள். வாழை மற்றும் தென்னை போல எல்லாமுமே பணம் தருபவை எனில்
வேளாண்மை துறையோ கால்நடை துறையோ இந்த ஈமு கோழிகள் வளர்ப்பினை பற்றிய முறையான
எதிர்காலத்தினை உணர்த்த வேண்டும் அல்லவா? தேக்கு மரம் நட்டால் காசு, பைனான்ஸில்
போட்டால் இரண்டு மடங்கு காசு என ஒரு காலத்தில் விளம்பரத்தினை நம்பி மரம்
நட்டவர்கள் அதிகம். ஆனால் நிகர முடிவு என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
நடிகர் நடிகைகளை வைத்து விளம்பரம் செய்தால் நம்பி வாங்கும் நம் மக்கள் இந்த ஈமு
கோழிகளை வளர்க்கும் சமயம் விளம்பரங்களினால் சொல்லப்படும் வருமானம் இல்லை எனில்
என்ன செய்வார்கள்? இதுவரை ஒன்று மட்டும் உறுதியாக சொல்லப்படுவது யாதெனில் இந்த ஈமு
கோழிகளினால் முக அலங்காரத்திற்கு பயன்படும் க்ரீம்கள் மற்றும் லோஷன்கள்
தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிலும் உள்ளது.
மொத்தத்தில் இதன் எதிர்காலத்தினை அரசு உடனடியாக ஆய்வு
செய்து தெளிவாக்கினால் வளர்ப்பவர்களும் இன்னும் வளர்க்க யோசனை கொள்பவர்களுக்கும்
ஒரு தெளிவு பிறக்கும்.