Wednesday, November 14, 2012

பூமியின் கடைசி தீபாவளியா??!!


காற்றின் கந்தக நெடியுடன் கரைந்தது இனிதே தீபாவளி. ஒரு காலத்தில் தீபாவளி என்பது விடியற்காலை எழுந்து எண்ணை தேய்த்து குளித்து சாமி கும்பிட்டு புத்தாடை அணிந்து மத்தாப்பு கொளுத்தி மகிழ்வது என்பது போய் தீபாவளி அன்று இரவுதான் கொண்டாட்ட நேரம் என்பது ஆகிவிட்டது. மக்களுக்கு காலையில் துயில் எழுவது சோம்பேறித்தனமாகிவிட்டது போலும். பட்டாசுகளை விட வாண வேடிக்கைகளில் தான் இப்பொழுது அனைவருக்கும் விருப்பம். உள்ளூர் சிவகாசி தயாரிப்புகளுக்கு இடையே சீனத்து பட்டாசுகளும் சக்கை போடு போட்டன. தரத்தில் நம்மவர்கள் எப்பொழுதும் சிறந்தவர்கள் தான்.

நேற்று தீபாவளி அன்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த சமயம் அவர் சொன்னது என்னவெனில், இந்த 2012ல் உலகம் அழிந்து விடுமாம், அதனால் நம் உலகத்திற்கு இதுதான் கடைசி தீபாவளி என்பதால் கடன் வாங்கி செலவு செய்து மகிழ்ந்தேன் என்றார். இத்தனைக்கும் அவர் படிக்காத காமா சோமா ஆசாமி அல்ல. ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் உற்பத்தி பகுதியின் மேலாளர் ஆவார். நன்கு படித்தவரும் கூட. உலகம் அழிந்து விடும் என ஆழ்ந்த நம்பிக்கையில் பேசினார். இடையில் அவர் மேற்கோள் காட்டியது மயன்களின் காலண்டரைத்தான்.

மயன்கள் நாகரிக காலத்தில் அவர்களின் நாட்காட்டி 2012 டிசம்பர் 21 உடன் முடிவுக்கு வந்ததாகவும் எனவே அவர்கள் அனைவரும் ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் சொல்லியும் ஊடகங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். 2012ல் தான் உலகம் அழியும் என்கிற கூற்று சரியே எனில் அவர்கள் அன்றே ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள்?

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் 1330 என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் வெறும் 1330 மட்டும் தான் எழுதினார் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. நமக்கு கிடைத்தது வெறும் 1330 குறட்பாக்களே! அவர் இதற்கு மேலும் எழுதி இருக்கலாம். அவை நமக்கு கிட்டாமல் போய் இருக்கலாம். ஏனெனில் திருவள்ளுவர் என்று அழைக்கப்படுபவர் (இவருக்கு இதுதான் பெயர் என யாரும் எங்கும் சொல்லவில்லை) உருவமோ பெயரோ தீர்க்கமாக தெரியாது. அவர் வாழ்ந்ததாக சொல்லப்படும் கி.மு.1000த்தில் அவர் எழுதி வந்ததெல்லாம் ஓலைச்சுவடிகள்தான். அதன்பின் நடந்த தொடர் படையெடுப்புகளில் எவ்வளவு அழிந்தன என்பது யாருக்கும் தெரியாது. அது மாதிரி இந்த மயன் காலண்டர்களில் 2012 டிசம்பருக்கு பின் வேறெதுவும் காலண்டர்கள் எழுதி அவை நமக்கு கிட்டாமல் போயிருக்கலாம்.

எனவே இந்த பிரபஞ்சமானது முற்றிலும் அழிந்து விடும் என்பது எனக்கு நம்பிக்கை இல்லை. இது படித்தவர் படிக்காதவர் என்கிற பேதம் எல்லாம் இல்லை. முற்றிலும் படித்தவர் வாழும் அமெரிக்காவில்தான் இந்த கருத்தினை கொண்டு 2012 என்னும் படம் எடுக்கப்பட்டு கிராபிக்ஸில் மிரட்டி சில்லறையை அள்ளியுள்ளார்கள்.

எது எப்படியோ நண்பர்களே! இனி வரும் நாட்களிலாவது முடிந்த வரை ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பு செலவிற்கோ அல்லது அவர்களின் உணவு / உடை தேவைகளுக்கோ நம்மால் ஆனதை செய்வோம். ஒருவேளை இந்த உலகமே அழிந்து போவதாயின் புண்ணிய ஆத்மாக்களான நமக்கு இன்னும் ஒரு சொர்க்கம் காத்திருக்கும்!!

Friday, November 9, 2012

தீபாவளி வந்தாச்சு



எல்லோருக்கும் வணக்கம்!!

2012ம் ஆண்டின் தீபாவளி திரு நாள் இன்னும் சில நாட்களில் வர உள்ளது. கடந்த ஆண்டுகளில் இருந்ததை விட இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் குறைந்துள்ளது. வழக்கமாக இந்த நேரமெல்லாம் சென்னை சில்க்ஸ் இருக்கும் ஏரியா பக்கம் கூட செல்ல முடியாது. ஆனால் இம்முறை அப்படி ஒன்றும் கூட்டம் இல்லை. மிக வழக்கமான நாட்களை போல்தான் இருக்கிறது.

அடுத்த ஆண்டாவது மின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு உண்மையான தீபாவளியாக அமைய ஆண்டவனை வேண்டுவோம்.

எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!