இரண்டு நாட்களுக்கு முன்பு மதியம் உணவருந்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். வழக்கமான கண்ணன் ஸ்டோர்ஸ் பாதைதான். இம்முறை அந்த வீதியில் சென்றபோது ஒரு சிறு கூட்டம் நின்று கொண்டிருந்தது. என்ன என எட்டிப்பார்த்தேன். அங்கே ஒரு நபர் 40 வயதிற்குள் இருக்கும். உடலில் மண்ணெண்னையை ஊற்றி பற்ற வைத்துக்கொண்டார். திகுதிகு என உடல் பற்றி எரிய அனைவரும் ஒரு பதற்றத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தனர். சிலர் ஆம்புலன்சிற்கும், காவல் துறைக்கும் போன் செய்து கொண்டிருந்தனர். நேரில் ஒரு தற்கொலை சம்பவத்தினை பார்த்த எனக்கு பெரிய அதிர்ச்சி. அடுத்த நாள் தினசரியை படிக்கும் பொழுது அந்த நபர் இறந்து போன செய்தியை பிரசுரித்திருந்தார்கள். கண்முன்னே ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டது என்னை மிகவும் பாதித்தது. இரண்டு நாட்களுக்கும் மேலாக உணவு உண்ண முடியவில்லை. அந்த கருகிய நாற்றம் என்னுள் இன்னமும் இருக்கிறதே!
தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பது என் கருத்து. வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். போராடித்தான் வெல்ல வேண்டும். கோடிக்கணக்கில் இன்று சம்பாதித்துள்ள பலரின் இளமை வாழ்க்கையை நாம் அறிவோம். போராடியதால்தான் அவர்களால் அந்த எல்லைக்கோட்டை அடைய முடிந்தது. வாழ்க்கை மிகவும் இயந்திரமயமாகி போனது, கூட்டுக்குடும்ப வாழ்க்கை இல்லாமை, நல்ல நண்பர்கள் இல்லாமை, பொழுது போக்குகள் இல்லாமை என வாழ்க்கையை இயந்திரமயமாக்கி கொண்டவர்களுக்கு மன அழுத்தம் தாங்காமல் சிறு தோல்வியை கூட கண்டு பயந்து விடுகிறார்கள். இப்பொழுதும் சொல்கிறேன். தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது......
Friday, April 29, 2011
Sunday, April 10, 2011
பொன்னர் சங்கர் - விமர்சனம்
கலைஞர் கைவண்ணத்தில் ஏற்கனவே புத்தமாக வந்து விட்ட அண்ணமார்சாமி வரலாறு கதைதான் இந்த பொன்னர்-சங்கர்.
அந்த புத்தகத்தை படித்த மக்களுக்கும் ரெகுலராக வீரப்பூர் திருவிழாவிற்கு சென்று வருபவர்களும் இந்த கதை சற்று ஏமாற்றம் தரலாம். ஏனென்றால் இந்த கதை சினிமாவிற்காக சில மாற்றங்கள் செய்யப்பட்ட விதம்தான்.
கதைப்படி கிளைமாக்ஸில் சங்கர் இறந்துவிட தங்கை அருக்காணித்தங்கம் தீர்த்தம் தெளிவித்து உயிர்ப்பிப்பதுதான் இவ்வளவு நாள் இந்த கதை உயிரோட்டமாக இருக்க காரணம். ஆனால் அந்த சம்பவமே இந்த படத்தில் இல்லை. முக்கியமாக அருக்காணித்தங்கத்தின் கதைக்களமே மிஸ்ஸிங்.
பாத்திரத்தேர்வில் பார்த்தால் ப்ரஷாந்திற்கு அடுத்தபடியாக கதையை உணர்ந்து நடித்தவர்களில் ஜெயராமிற்கே (மசச்சாமி) என் மார்க். மற்றவர்கள் எல்லோரும் நாடக வடிவில் நடித்திருக்கிறார்கள். பல இடங்களில் வசனம் தடுமாறுகிறது. ஜெயராமை தனியறையில் அடைத்து வைக்க சொல்லும் விஜயகுமார் சொல்லும் டயலாக்கில் “காட்டு பங்களா” என்று வருகிறது. பங்களா என்பது ஆங்கிலம் அல்லவா? சோழர் காலத்து கதையில் ஆங்கிலம் எங்கிருந்து வந்தது?
முக்கியமான வில்லன் பாத்திரமான மாந்தியப்பன் வேடத்தில் ப்ரகாஷ்ராஜ். இந்த மாதிரி கேரக்டர் கிடைத்தால் அல்வா சாப்பிடுவது போல நடிக்கும் இவர் எனோ காய்ச்சலில் இருப்பவர் போலவே முகத்தினை வைத்துக்கொண்டு டயலாக் பேசுகிறார். குஷ்புவின் நடிப்பு பரவாயில்லை. ப்ரசாந்தின் கட்டுமஸ்தான உடல்வாகு அற்புதமாக பொருந்திப்போகிறது. நீண்ட இடைவெளிக்குபின் நடித்திருக்கிறார். பின்னி எடுத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். முழு ஆளுமையும் இவரே. தலயூர்காளியாக நெப்போலியனும் சோழ மன்னராக சில நிமிடங்கள் பிரபுவும் நடித்திருக்கிறார்கள். அனேகமாக டெல்லி கண்ஷ் டயலாக்கே பேசாமல் ஒரு காட்சியில் மட்டும் நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும். நிறைய பேரின் திறமைகள் இப்படி வீணாக்கப்பட்டுள்ளது. உதாரணம் போஸ் வெங்கட், ஸ்னேகா, சீதா, பொன்னம்பலம், ரியாஸ்கான் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ராஜ்கிரணும் நாசரும் சிறப்பாக நடித்திருந்தாலும் சங்கரை “ஷங்க்கர்” என்று சொல்லும் போது தியேட்டரில் நிறைய பேர் தலை சொறிவது நன்கு தெரிகிறது. பொன் வண்ணனும் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
இயக்கம் தியாகராஜன்.
இசை இளையராஜா. இசையமைப்பு பரவாயில்லை.
ஆள்மயக்கிப்பாறை, தங்கக்கிளி, பன்றிவேட்டை எல்லாமே மிஸ்ஸிங். மேலும் இந்த கதையில் வரும் எல்லோருக்கும் மிகப்பெரிய அரண்மனைகள் இருப்பது போலவும் ஆயிரக்கணக்கில் படைபலம் இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அப்படி அரண்மனைகள் இருந்ததற்கான சுவடுகள் இல்லை.. ஆரிச்சம்பட்டி கோட்டையை தவிர. மேலும் மணப்பாறையை ஒட்டியுள்ள வீரப்பூர் தான் கதைக்களம். ஆனால் சினிமாவில் ஒரிஜினல் இடத்தில் படப்பதிவே நடத்தப்படவில்லை. எனவே கதை களத்துடன் ஒட்டவே இல்லை. காட்சியமைப்பும் படு பிரமாண்டமாக உள்ளது. கிராபிக்ஸில் கலக்கி இருக்கிறார்கள். ஆனால் பல சமயம் வீடியோ கேம்ஸ் பார்த்த மாதிரி இருக்கிறது.
ப்ளஸ் : ப்ரஷாந்த், ஜெயராம் நடிப்பு, போர் காட்சியமைப்புகள், பின்னனி இசை
மைனஸ் : டூயட் பாடல்கள், அதீத கவர்ச்சி, அளவிற்கு மீறிய பிரம்மாண்டம், அருக்கணித்தங்கமான ஸ்னேகாவின் கதையமைப்பு, நகைச்சுவை காட்சிகள் இல்லாமை
பொன்னர் - சங்கர் = கிராபிக்ஸ் கலக்கல்
Wednesday, April 6, 2011
Monday, April 4, 2011
ஜெயிச்சாச்சு!! ஜெயிச்சாச்சு!!!
ஒரு வழியா கிரிக்கெட் ஜுரம் முடிஞ்சது. உலக நாடுகள் எதிர்பார்த்த மாதிரியே நம்ம இந்தியா வெற்றி பெற்றது. தோனியோட ராசியோ இல்லை யுவராஜின் ஆட்டமோ மொத்தத்தில் ஜெயிச்சாச்சு. இதை வச்சி இன்னும் 10 வருசம் ஓட்டிடலாம்.
ஆஸ்திரேலியாவை வென்றவுடனே நம் கோப்பை கனவு 50% கைவசமானது. பாகிஸ்தானும் சரி இலங்கையும் சரி நம்முடன் மோதும் பலசாலிகள் இல்லை. இருப்பினும் இரு அணிகளும் தங்கள் அணியின் வெற்றிக்காக தலைகீழாக நின்றன. நான் பெரிதும் எதிர்பார்த்த சேவக் இறுதி ஆட்டத்தில் சொதப்பிவிட கம்பீரின் கம்பீரமான ஆட்டம் கைகொடுத்தது. கோலியும் நன்றாகவே விளையாடி தான் இனி இந்திய அணியில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறேன் என நிரூபித்தார். அடுத்த முக்கியமான ஆள் என்று பார்த்தால் இந்த உலக கோப்பை தொடரில் பெரிதும் சோபிக்காத ஹர்பஜன் தான். என்னாச்சு சிங்? நானும் டவுசர் போட்ட காலத்தில் இருந்து கிரிக்கெட் என்றாலே சச்சின் தான். இன்னும் சச்சின் தான் டாப் ஸ்கோரர்ராக இருக்கிறார் என்பது பெரிய ஆச்சரியம். இந்திய கிரிக்கெட்டில் சச்சின் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை.
மொத்தத்தில் தனிப்பட்ட நபர் எவரின் தயவும் இன்றி கூட்டு முயற்சியில் கிடைத்த பொன் முட்டை இந்த உலக கோப்பை. இதே ஒற்றுமையுடன் வரும் ஆட்டங்களிலும் நம் அணி ஜெயிக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)