Sunday, January 15, 2012

டெல்லி – ஒரு பயணக்கட்டுரை

இந்த வலைப்பூவில் அனேகமாக ஒரு பயணக்கட்டுரையை எழுதவில்லை என நினைக்கிறேன். எனவே போன வாரம் டெல்லி சென்று வந்ததை ஒரு கட்டுரையாக தரலாம் என நினைத்து கணிணியில் கை வைத்தேன்.

எங்கள் நிறுவனத்தின் ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கு அடுத்து ஆஸ்திரேலியா உள்ளது. அங்குள்ள ஒரு முன்னனி வாடிக்கையாளர் டெல்லியில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அழைப்பும் விடுத்தார். இது ETHICAL SOURCING PROGRAM என்பதால் நிறுவனத்தில் அந்த பொறுப்பினை கவனித்து வரும் எனக்கு இந்த வேலை வந்து சேர்ந்தது. ஏற்கனவே டெல்லிக்கு ஒரு முறை 5 வருடத்திற்கு முன்பு பயணித்து இருந்தாலும் இம்முறை நான் சற்று பயந்ததற்கு காரணம் அங்கு நிலவும் கடும் குளிர். 5 டிகிரி சீதோஷ்ணத்தில் நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் இருந்தது கிடையாது. இந்திராகாந்தி விமான நிலையத்தினை அடைந்ததும் விமானி வெளியே குளிர் அதிகம் என்பதால் அதற்குண்டான ஏற்பாட்டுடன் இறங்கவும் என அறிவித்தார். கதவை திறந்ததும் முகத்தில் அறைந்தது குளிர். மார்கழி பனியில் இங்கு நடுங்கியது எல்லாம் அந்த குளிருக்கு முன்னால் நிற்க முடியாது. விமான நிலையத்திற்கு வெளியில் வந்ததும் சூடாக இட்லி விற்றுக்கொண்டிருந்த இடத்தில் சென்று இரண்டு இட்லிகளும் சூடாக சாம்பாரும் வாங்கி காலை உணவை முடித்தேன். இரண்டு இட்லிக்கு 100 ரூபாய் பில். முதல் அதிர்ச்சி.





எங்களை அழைத்து செல்ல வேண்டிய டிரைவர் வேறு டெர்மினலுக்கு சென்று விட்டபடியால் நடந்த குழப்பத்தில் ஒரு மணி நேரம் குளிரில் நடுங்கும் தண்டனை. ஓட்டுனருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு இந்தி தெரியாது. ஒரு வழியாக ஓட்டல் அறைக்கு சென்று உடை மாற்றி மதிய உணவிற்கு கீழே வந்தோம். ஒரு மீல்ஸ் 100 ரூபாய். அதில் இரண்டு புல்கா ரொட்டிகளும் ஒரு கப் ஜீரக சாதமும் ஒரு அப்பளமும் கொடுத்தார்கள். ரொட்டிக்கு தொட்டுக்கொள்ள பனீர் கிரேவி.. அதுவு சூடாக. ருசியும் நன்றாக இருந்தது.

எங்கள் நிறுவனத்திற்கு டெல்லிக்கருகில் நொய்டாவில் ஒரு தொழிற்சாலை உள்ளது. அதன் மேலாளர் வந்து என்னை கரூர் ஆலையில் மேலாளர் என்கிற முறையில் மரியாதை நிமித்த சந்திப்பை முடித்துக்கொண்டு கூட்டம் நடைபெறும் குர்கானை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். மதிய நேர பயணம் எனினும் 9 டிகிரிதான் வெளியில். மூடுபனி என்னும் வார்த்தைக்குண்டான அர்த்தத்தினை உணரும் தருணம் அது. வழியில் எங்கும் பிரம்மாண்ட கட்டிடங்களை தாண்டி ஒரு சோதனை சாவடியில் வண்டி நின்றது. சுமார் 16 கவுண்ட்டர்கள் கொண்ட அந்த சாவடியில் மேலும் கீழுமாக 600 வண்டிகளுக்கும் மேலாக காத்திருப்பில் இருந்தது. ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பிறகு அந்த சாவடியை கடந்து குர்கானை அடைந்தோம். செக்டர் 15ல் உள்ள பிரம்மாண்ட ஓட்டலின் மாடியில் கூட்டம். மொத்தம் 30 பேர் கூட இல்லை. நடத்த வந்தவர்கள் ஒரு 10 நபர்கள். அதில் ஒருவர் ஹாங்காங்கை சேர்ந்தவர். இருவர் ஆஸ்திரேலியாவில் இருந்தும் மீதமுள்ளவர்கள் இந்திய அலுவலகத்தினை சேர்ந்தவர்களும் இருந்தார்கள். இரண்டரை மணி நேர கூட்டம். இனிதே முடிந்தது. குழந்தை தொழிலாளர்கள் கூடாது. மிகை நேர பணிக்கு இரட்டிப்பு சம்பளம். பாலின ரீதியில் துன்புறுத்த கூடாது. அவர்களுக்குண்டான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இதுவே கூட்டத்தின் சாராம்சம்.

குர்கான்






கூட்டம் முடிந்து அறைக்கு திரும்பும் சமயம் 6 மணிக்கே கும்மிருட்டாகி விட்டது. இரவு உணவும் ரொட்டிகள் தான். அந்த உணவகத்தில் உள்ள தொலைக்காட்சி பெட்டியில் சோனி ம்யூசிக் ஓடிக்கொண்டு இருந்தது. அதில் ஒய் திஸ் கொலவெறி பாட்டிற்கு அங்குள்ளவர்கள் வாயை பிளந்து கொண்டு பாராட்டிக்கொண்டிருந்தார்கள். கருமம்.. அந்த பாட்டில் என்னதான் உள்ளது என தெரியவில்லை.

காலை 6 மணிக்கு விமானம் என்பதால் சீக்கிரம் உறங்கப்போனேன். அறையில் அங்குள்ள தொலைக்காட்சியில் சன் டிவி தெரிந்தது. ஒன்பதரை மணி வரை பார்த்துவிட்டு உறங்கிவிட்டேன். 4 மணிக்கு எழுந்து கடும் குளிரில் சுடு நீர் வர தாமதமாகும் என நிர்வாகம் சொல்லி விட்டதால் குளிர் நீரில் தயாரானேன். நடுங்க நடுங்க விமான நிலையம் சென்றேன். அங்கு ஹீட்டர் போட்டு இருந்ததால் இதமாக இருந்தது. இண்டிகோ விமானத்தில்தான் பயணம். ஏறி உட்கார்ந்ததும் உறக்கம் வந்து விட்டது. விழிக்கையில் சென்னை வந்துவிட்டது. நம் ஊரில் காலடி எடுத்து வைத்ததும் தான் உடம்பு சராசரிக்கு வந்தது. எங்கள் நிறுவனத்தில் தலைமை அலுவலகம் சென்னை என்பதால் எங்கள் டிரைவர் சென்னை அலுவலகத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டார். அங்குள்ள கெஸ்ட் ஹவுசில் தங்கி உடை மாற்றி கம்பெனி முதலாளியை பார்த்துவிட்டு ஊருக்கு கிளம்பினேன்.







ஆனால் குறிப்பிடவேண்டிய ஒரு விசயம் என்னவெனில் கடும் குளிரில் இருந்த எனக்கு ஒரு தும்மல் கூட அங்கு வரவில்லை. உணவும் வயிற்றிற்கு தொந்தரவு தரவில்லை. ஆனால் நம்ம ஊரில் மினரல் வாட்டர் குடித்தும் கூட தொண்டையில் தொந்தரவு தெரிய ஆரம்பித்து விட்டது.

Sunday, January 8, 2012

பொங்கல் வாழ்த்துக்கள்



இந்த வலைப்பூவிற்கு வருகை தந்தருளும் அனைவருக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் முதலில் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கல் என்பது சூரியப்பொங்கல் என்று நாம் குறிப்பிடுகிறோம். வட இந்தியர்கள் மகர சங்கராந்தி என சொல்லுகிறார்கள். சூரியன் மகர ராசிக்கு பெயர்வது அதாவது சங்கமமாவது மகர சங்கராந்தி ஆகும். மொத்தத்தில் இந்துக்கள் அனைவருக்கும், இந்தியர்கள் அனைவருக்கும் இனிப்பான பண்டிகை இது.

நான் சிறுவனாக இருந்த பொழுது பொங்கல் என்றதும் ஒரு வாரத்திற்கு முன்பே கடைக்கு சென்று பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்கி உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி வைப்பேன். நம்மில் அனேகருக்கும் அந்த பழக்கம் இருந்து வந்தது. காலப்போக்கில் இந்த பழக்கம் காலாவதியாகிவிட்டது. செல்போன் வந்ததும் இந்த பழக்கம் அழிந்து விட்டது. அதேபோல பொங்கலுக்கு ஒரு பத்து நாட்களுக்கும் முன்பாகவே கரும்புகள் சுவைக்கத்தொடங்கிவிடுவோம். இன்று... பொங்கல் அன்று கரும்பு தின்பது கூட அனைவருக்கும் களைப்பை தருகிறது. வெளி நாடு வாழ் நண்பர்களுக்கு ஆசை இருப்பினும் கரும்பு கிடைப்பதில்லை.

அட்டை வாழ்த்திற்கு மாற்றாக மின்னஞ்சல் வாழ்த்து வந்தது. கரும்புக்கு மாற்றாக கொஞ்சம் சர்க்கரையை வாயில் போட்டுக்கொள்ளவேண்டியதுதான். மாட்டுப்பொங்கல் கொண்டாட மாடே இல்லாத நிலையில் இந்த பொங்கல் அடுத்த தலைமுறைக்கு எட்டாது. உழவு என்பது அடுத்த தலைமுறை செய்யத்தயங்கும் தொழிலாக மாறி வருவதால் இந்த பொங்கலுக்கும் ஆபத்து இருக்கிறது. இன்றைய சூழ் நிலையில் பொங்கல் விடுமுறையில் ஒரே ஒரு கரும்பை கடித்து கேஸ் அடுப்பில் சமைத்த பொங்கலில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவிட்டு தொலைக்காட்சியில் ஒரு சினிமா பார்த்துவிட்டால் பொங்கல் ஓவர்.

இந்த நிலை மாறவேண்டும். அடுத்த தலைமுறைக்கு பண்டிகைகளும் அதன் வழக்கங்களும் சேரவேண்டும் என்பது என் அவா. ஆசை நிறைவேறுமா?? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.