Thursday, June 28, 2012

நிறமிழந்துவரும் சாயப்பட்டறைகள்

திருப்பூர் மற்றும் கரூரில் வெகுஜன மக்கள் பணிபுரியும் தொழில் துணி உற்பத்தி மற்றும் அதன் ஏற்றுமதி. திருப்பூரில் பின்னலாடை எனில் கரூரில் வீட்டு ஜவுளிகள்.

இவற்றின் தயாரிப்பு முறை என்று பார்த்தால் கோரா நூல் எனப்படும் இயற்கை பருத்தி இழையில் ஆரம்பிக்கிறது. இவற்றில் பல ரக நூல்கள் தமிழத்தின் தெற்கு மாவட்டங்களான அருப்புக்கோட்டை, ராஜபாளையம் மற்றும் திண்டுக்கல் கோவை மாவட்ட நூற்பாலைகளில் இருந்து வாங்கப்படுகிறது. தரத்தில் அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் நூல் முதல் ரகமாக கொள்ளப்படுகிறது. இப்படி வாங்கப்படும் நூல் கரூர் நகரின் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் சாயப்பட்டறைகளில் சாயமேற்றப்பட்டு பின்பு தறிகளில் நெய்யப்படும். நெய்த துணி அளவுக்கேற்றபடி வெட்டி தைக்கப்பட்டு ஏற்றுமதி ஆகிறது. 

 இப்பொழுது சிக்கல் என்னவெனில் சாயப்பட்டறைகளில் சாயம் ஏற்றியபின்பு அதன் கழிவு நீர் வெளியேற்றப்படும் இடத்தில்தான். இது நாள் வரை கழிவு நீர் கிட்டத்தட்ட சுத்திகரிக்கப்பட்டு அமராவதி ஆற்றில் கலக்கப்பட்டு வந்தது. நாள்பட நாள்பட அமராவதியின் நீர்வளம் குறைந்தபோது ஆறு சாக்கடையானது. சாய கழிவு நீர் மிகவும் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன் நிலத்தடி நீரையும் காவு வாங்கியது. விவசாய நிலங்களும் கெட்டுப்போனது. ஒட்டுமொத்த விவசாயிகளும் நீதிமன்றம் சென்று இந்த சாய ஆலைகளை மூட உத்தரவு பெற்றனர். அரசாங்கமும் அதனை செயல்படுத்தி எல்லா ஆலைகளையும் மூடினர். முற்றிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்தால் மட்டும் அனுமதி என்றது. ஆனால் அதற்கு கோடிக்கணக்கில் செலவாகும் என்பதால் ஆலை அதிபர்கள் பின் வாங்கிவிட்டனர். விளைவு ஏற்றுமதி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
 



சுத்திகரிப்பு செய்து தொழிலை நடத்தாவிட்டால் கரூரின் பொருளாதாரமே பாதிக்கும் சூழல். திருப்பூரிலும் இதே பிரச்சனை வந்த போது தமிழக அரசு மானியமாக அளித்த பணத்துடன் ஏற்றுமதி தொழில் செய்யும் அதிபர்கள் மீதமுள்ள பணத்தினை போட்டு ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து நிலமையை சமாளித்து வருகின்றனர். ஆனால் இங்கு நிலமை அப்படி இல்லை. இப்படியே போனால் கரூரில் வேலை வாய்ப்பு குறிப்பாக படித்தவர்களுக்கு பாதிக்கப்படும். கரூரின் மற்ற பிரபலமான தொழில்களான பஸ் கட்டுமானம் மற்றும் கொசுவலை தொழில்களில் படித்தவர்களுக்கு வேலை இல்லை. அது முற்றிலும் மனித உழைப்பினை சார்ந்தது. ஏற்றுமதியில் மட்டும்தான் இவ்வளவு வேலை வாய்ப்புகள். 


இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சியினால் பொங்கி எழுந்திருக்க வேண்டிய தொழில் நொண்டி அடித்துக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அரசாங்கம் நல்ல நடவடிக்கைகள் மேற்கொண்டு இந்த பிரச்சனையை சரி செய்தால் கோடிக்கணக்கில் அன்னிய செலாவணி நாட்டுக்கு கிடைப்பதுடன் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பினை தக்க வைத்துக்கொள்ளும். 

Sunday, June 3, 2012

உருமி – விமர்சனம்



பல நூற்றாண்டுகளுக்கு முன்பான கதையின் நாடியை சம காலத்தின் ஓட்டத்தில் விட்டால் வெற்றி என்கிற மகதீரா மந்திரத்தில் மலையாளத்தில் ஒரு சினிமா. தமிழாக்கத்தில் உருமியாகி இருக்கிறது.

500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஆங்கிலேயர்களுக்கு முன்பு வந்த போர்ச்சுக்கல் நாட்டு மாலுமியான வாஸ்கோடகாமாவின் வருகையின் பாதிப்பினை சம காலம் தொட்டு சொல்லும் படம்தான் உருமி.

நில வழியாக வருவதானால் முகம்மதிய நாடுகளை தாண்டி, பாலைவனத்தினை தாண்டி, முக்கியமாக ரஜபுத்திரர்களைத் தாண்டி கேரளா வருவதென்பது சாத்யப்படாத காலத்தில் நீர் வழியாக வருவதே எல்லா நாடுகளுக்கும் எளிதான வழியாக தென்பட்ட சமயத்தில் அதற்குண்டான வழியை முதலில் கண்டவன்தான் இந்த வாஸ்கோடகாமா. ஏனெனில் அவர்களுக்கு தேவை நம் கருப்பு மிளகு. இது எளிதில் எங்கும் விளையாது. அதனால் கிராக்கி அதிகம். இந்தியா செல்ல வழி கண்டுபிடித்ததற்காக போர்ச்சுக்கல் வாஸ்கோடகாமாவை கொண்டாடுகிறது. முதலில் வரும்போது சில போர்ச்சுகீசியர்களை இங்கேயே விட்டு விட்டு செல்கிறார் வாஸ்கோடகாமா. அவர்கள் வியாபாரத்துடன் விளையாட்டையும் ஆரம்பித்து வைத்து விடுகிறார்கள். 22 வருடங்களுக்கு பின் வரும் வாஸ்கோடகாமா மிளகு மட்டுமல்லை மிளகு விளையும் நாட்டையே கபளீகரம் செய்ய துணிகிறார். அதை நம் மன்னர்கள் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதே கதை.

பிருதிவிராஜ் ஒரு பப் ஒன்றை நடத்தி வருகின்றனர். அவரது நண்பராக வருகிறார் பிரபுதேவா. கடனில் இருக்கும் பிருதிவிராஜிற்கு கேரளாவில் சொந்தமாக ஒரு இடம் இருக்கிறது. இதனை வெளிநாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் விலைக்கு வாங்க வருகிறது. கடன் பிரச்சினையில் அதை விற்று விடும் எண்ணத்தில் இருக்கும் பிருதிவிராஜ், கேரளாவில் அவருக்கு சொந்தமாக உள்ள கண்ணாடிக்காடு என்ற இடத்திற்கு வருகிறார். அந்த இடத்தில் வித்யாபாலன் அப்பகுதி மக்களுக்காக பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த இடத்தை விற்க வேண்டுமெனில் இங்குள்ள ஆதிவாசி மக்களுக்கு பதில் சொல்லிவிட்டு, இடத்தை விற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்.

ஆதிவாசிகளிடம் செல்லும் பிரிதிவிராஜிடம் குகைகால மனிதனாக வரும் ஆர்யா, பிரிதிவிராஜின் மூதாதையர்கள் யார்? அந்த இடத்தின் பெருமை என்ன? என்பதை அவருக்கு விளக்குகிறார். அப்போது துவங்குகிறது 15-ம் நூற்றாண்டுக் கதை.

இந்தியாவை கண்டு பிடிக்க வரும் வாஸ்கோடகாமா, அரைபடி மிளகை வாங்க வந்து அன்னை நாட்டை அடிமை படுத்துகிறான். நாட்டை மீட்கும் முயற்சியில் பிரிதிவிராஜின் தந்தையாக வரும் ஆர்யா முதலாவது ஆளாக உயிரை விடுகிறார்.

வாஸ்கோடகாமா கடல்பகுதியில் வரும்போது ஹஜ் பயணம் செய்துவிட்டு நாடு திரும்பும் 400 முஸ்லீம்களை கொன்று விடுகிறான். இவர்களில் ஒரு பெண்மணி அவர்களிடம் உள்ள நகைகளை சிறுவனாக இருக்கும் பிரிதிவிராஜின் கையில் கொடுத்து விட்டு நாட்டை காப்பாற்றும் படி சொல்லி விட்டு இறந்து போகிறார். அனாதையாக நிற்கும் சிறுவன் பிரிதிவிராஜ், சிறுவயது பிரபுதேவாவின் வீட்டில் வளர்கிறார். அந்நகைகளை உருக்கி உருமி என்ற ஆயுதத்தை செய்கிறார். (தமிழில் 'சுருள் வாள்' எனப்படும் இந்த ஆயுதம் முஸ்லீம்கள் பயன்படுத்திய ஆயுதமாகும். அவர்கள் அந்த ஆயுதத்திற்கு வைத்திருக்கும் பெயர் உருமி.)

காலச்சக்கரம் சுழல, 22 வருடங்களுக்கு பிறகு வீரனாக வளர்ந்து நிற்கிறார் பிரிதிவிராஜ். அப்போது வாஸ்கோடகாமாவும், அவரது மகனும் சேரநாட்டில் அட்டகாசம் செய்கின்றனர். சிரக்கல் மன்னனின் மகளான நித்யா மேனனை வாஸ்கோடகாமாவின் கூட்டம் சுற்றி வளைக்க, பிரிதிவிராஜும் பிரபுதேவாவும் காப்பாற்றுகிறார்கள்.

வாஸ்கோடகாமா கூட்டத்தை நாட்டை விட்டு விரட்டும் முயற்சியில் சிரக்கல் மன்னன் முயற்சிக்கிறார். ஆனால் அவரது அமைச்சனாக வரும் தளபதி சேனாச்சேரியும், மன்னின் மகனான பானுவிக்கிரமனும் வாஸ்கோடகாமாவிற்கு ரகசியமாக உதவி செய்கின்றனர்.

தன்மகளை கைப்பற்ற நினைத்த வாஸ்கோடகாமாவின் மகனை சிறைப்பிடித்து கொண்டு வரும் பொறுப்பை பிரிதிவிராஜிடம் கொடுக்கிறார் சிரக்கல் மன்னன். கூடவே அவரது படையினரில் 5 பேரையும் அனுப்புகிறார். பிரிதிவிராஜும் பிரபுதேவாவும் தங்களது திறமையால் வாஸ்கோடகாமாவின் மகனை சிறைபிடித்து வருகின்றனர். கூட வந்தோர் அரக்கலில் இருக்கும் முஸ்லிம் பெண்களான ஜெனிலியா கூட்டத்தை சிறைபிடித்து வருகின்றனர்.

பிரிதிவிராஜின் திறைமையை பாராட்டும் அரசர், அவருக்கும் பிரபுதேவாவிற்கும் தளபதி பொறுப்பை அளித்து வாஸ்கோடகாமாவை அழிக்க சொல்கிறார். இதனிடையே நித்யா மேனனுக்கும் பிரபுதேவாவிற்கும் காதல் மலர்கிறது. பிரிதிவிராஜிற்கும் ஜெனிலியாவிற்கும் காதல் மலர்கிறது.

சிரக்கல் அரசனின் மகனும், அமைச்சனும் செய்கின்ற சதியால் வாஸ்கோடகாமாவின் மகன் தப்பிச் செல்கிறான். சிரக்கல் மன்னன் கொல்லப்படுகிறார். அரசனின் ஆதரவற்று இருக்கும் பிரிதிவிராஜும், பிரபுதேவாவும் வாஸ்கோடகாமா கூட்டத்தை விரட்டி அடித்தார்களா இல்லையா என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார்.

மொழி தெரியாத சில நபர்களால் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியங்கள் எளிதாக அபரிக்கப்பட்டு ஆளப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு காரணம் துப்பாக்கி, பீரங்கி போன்ற வெடிப்பொருட்கள் நமக்கு பரிச்சயமாகாத காலத்தில் அவர்கள் அதில் நிபுணர்களாக இருந்துள்ளார்கள். அந்த சூட்சுமத்தினை ஏன் நாம் அன்று கற்றுக்கொள்ள முயலவில்லை என்பது எனக்கும் இன்றளவும் விளங்காத ஒன்றாக இருக்கிறது.

 இந்த படத்தினை நாம் முதலில் மேக்கிங்கிற்காக பாராட்டியே ஆக வேண்டும். ஆங்கில படங்களுக்கு இணையான ஒளிப்பதிவு மற்றும் காட்சியமைப்பு. அரசர் என்றாலே பளபள உடை மற்றும் கிரீடத்தில் பார்த்தவர்களுக்கு இந்த படம் வித்யாசப்படலாம். அரண்மனை அமைப்பும் அப்படியே. பின்னனி இசையும் பிரம்மாதம். பாடல்களை கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஜெனிலீயாவை கிட்டத்தட்ட கிறுக்கி மாதிரி காட்டி வந்த இயக்குனர்கள் இந்த படத்தினை பார்க்க வேண்டும். சபாஷ் ஜெனிலியா.. விருதை எதிர் நோக்குங்கள். சம்பளம் ஒன்றை மட்டும் கணக்கில் கொள்ளாமல் இந்த திரைப்படம் உருவாக பாடுபட்ட அனைவருக்கும் புண்ணியங்கள் சேரட்டும்.

சேர நாடு என்றவுடன் இன்றைய கேரளம் மட்டுமே என்கிற நினைப்பு பலருக்கு உண்டு. சேர நாடு என்பது கேரளம் தாண்டி கோவை மற்றும் கரூர் வரை உண்டு. ஒரு கட்டத்தில் சேர நாட்டின் தலை நகராக கரூர் (வஞ்சி மாநகரம்) தலை நகராக இருந்தது. இதுதான் வரலாறு. பிற்கால சோழ படையெடுப்பினால் இவை சோழ தேசமாயின. தற்கால கேரளமும் சோழனால் வெற்றி கொள்ளப்பட்டு மலையாளிகளிடம் பாளையத்திற்கு விடப்பட்டவை. இந்த குறிப்பு படத்தின் முதலில் தெளிவாக சொல்லப்பட்டும் இருக்கிறது.

படத்தில் என்ன குறை எனில், தெலுங்கும் தமிழும் உச்சரிப்பின் வேகத்தில் ஒத்துப்போகக்கூடியவை. ஆனால் மலையாளம் உச்சரிப்பில் தமிழை விட வேகம் அதிகம். எனவே டப்பிங் செய்த போது அதே வேகத்தில் தமிழாக்கப்படுத்தி இருக்கிறபடியாலும், தமிழும் பண்டைய உச்சரிப்பில் இருப்பதால் புரிந்து கொள்ளுதல் சிரமமாகிறது. கிளைக்கதைகளும் அதிகம். படத்தின் இடையில் ஒரு ஐந்து நிமிடம் ஒரு போன் பேசிவிட்டு படத்தினை பார்த்தீர்களேயானால் புரிந்து கொள்ள பல நிமிடங்கள் தேவைப்படும். அவ்வளவு வேகம். இந்த வேகம் நமக்கு பழக்கப்படாத ஒன்று.

உருமி நல்ல படம்.

Friday, June 1, 2012

படித்ததில் ரசித்தது - அம்மாவும் வடிவேலுவும்



தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக போயஸ் தோட்ட வரவேற்பறையில் காத்திருக்கிறார் நடிகர் வடிவேலு...
அப்போது அங்கு வருகிறார் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். 

ஓ.பி: வாங்க..வடிவேலு, இப்பவாவது அம்மாதான் எல்லாம் என்று தெரிஞ்சுக்கிட்டீங்களே...சந்தோசம். இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா வருவாங்க. உங்களுக்கு 15 நிமிசம்தான் அப்பாயிமெண்ட். அதுக்குள்ள எல்லாத்தையும் பேசிடனும். இன்னொரு முக்கியமான விஷயம்...

வடிவேலு: சொல்லுங்கண்ணே

ஓ.பி: அம்மா வருவதற்கு முன்னால் சொல்லிடுவோம். பட்டுன்னு எந்திரிச்சிடனும். அப்புறம் அம்மா உட்கார்ந்த பிறகுதான் நீங்க உட்காரனும். உட்காரனும்ன்னு சொன்னதும் உங்க வீட்டில உட்கார்ரது மாதிரி ஹாயா சாஞ்சுக்கெல்லாம் உட்காரக்கூடாது. ஒரு திகில் படம் பார்க்கும்போது எப்படி கலவர முகத்துடன், சீட்டுக்கு நுனில உட்காருவோமோ அப்படி உட்காரனும். மேலோட்டமா பார்த்தா உட்கார்ந்த மாதிரியே தெரியக்கூடாது. அப்புறம்....கைய கட்டிக்கே உட்கார்ந்திருக்கனும். எடுத்தறக்கூடாது. குறிப்பா...குளோசப் விளம்பரத்துல வர்ர மாதிரி பல்லெல்லாம் தெரிய சிரிக்கக்கூடாது. லேசா புன் முறுவல்தான். அம்மா சிரிச்சாங்கன்னா நீங்க சிரிக்க தடையில்லை. 

வடிவேலு: அண்ணே...எனக்கொரு சந்தேகம்? இப்ப நான் அம்மாவை பார்க்கப்போறேனா? கடவுள பார்க்க போறேனா?

ஓ.பி: என்ன வடிவேலு,சின்னப்புள்ளத்தனமா கேட்கறீங்க?...அம்மாவும் கடவுளும் வேறு வேறா? எங்களுக்கு ரெண்டுமே ஒண்ணுதான். இதை அறியாதவன் இருக்கவேண்டிய இடம் ஜெயிலு...அம்மான்னா சும்மா இல்லேடா....அவங்க இல்லேன்னா நாங்க இல்லேடா....என்று பாடுகிறார். 

அப்போது ஜெயலலிதாவின் உதவியாளர் வருகிறார்....
அம்மா வாராங்க....அம்மா வாராங்க....

(வடிவேலு மனதுக்குள்....அடேங்கப்பா நம்ம புலிகேசி படமே தோத்துடும் போல...)


ஜெயலலிதா வருகிறார். 


ஜெயலலிதா: வாங்க வடிவேலு....எப்படி இருக்கீங்க?

வடிவேலு: எங்கேம்மா நல்லாஇருக்கேன். உங்க ஆட்சி வந்ததிலிருந்து நான் நல்லாவே இல்லைம்மா

ஜெயலலிதா: என்ன முட்டாள்தனமா பேசறீங்க?....என் ஆட்சியில மக்கள் எல்லோரும் நல்லாத்தானே இருக்காங்க?

வடிவேலு: அய்யய்யோ.... நான் அப்படி சொல்லலேம்மா....உங்க ஆட்சியில் உங்களுக்கு பயந்து ஒருத்தரும் என்னை நடிக்க கூப்பிடலேன்னு சொல்லவந்தேன். 

ஜெயலலிதா: அதானே பார்த்தேன். நீங்க அந்த கருணாநிதிக்கு ஆதரவா பேசும்போதே இதையெல்லாம் யோசிச்சிருக்கனும். 

வடிவேலு: நான் கலைஞருக்கு.....

ஜெயலலிதா: ஸ்டுப்பிட்....கருணாநிதின்னு சொல்லுங்க

வடிவேலு: சாரிம்மா.... நான் கருணாநிதிக்கு ஆதரவா பேசலம்மா....விஜயகாந்துக்கு எதிராத்தான் பேசினேன். 

ஜெயலலிதா: அந்த ஒரு காரணத்துக்காகத்தான் நீங்க இப்ப வெளில இருக்கீங்க. இல்லேன்னா இப்ப களிதான் திண்ணுக்கு இருந்திருப்பீங்க...

வடிவேலு: அய்யய்யோ அப்படிலாம் செஞ்சுடாதீங்கம்மா நான் புள்ளை குட்டிக்காரன். இப்ப என் தவற உணர்ந்திட்டேன். இனிமே நீங்கதான் என் தெய்வம். 

ஜெயலலிதா: ஓகே...ஓகே...இப்ப உங்களுக்கு என்ன வேணும்?

வடிவேலு: என்னை உங்க கட்சியில சேர்த்துக்கிட்டீங்கன்னா ஒரு பேச்சாளரா காலத்தை ஓட்டிடுவேன். நல்லா எம்.ஜி.ஆரு பாட்டெல்லாம் பாடுவேன்மா...

ஜெயலலிதா: எங்கே பாடுங்க கேட்கிறேன்.

வடிவேலு தொண்டையை செருமியபடி......

பதவி வரும்போது பணிவு வரவேண்டும். துணிவு வரவேண்டும் தோழா....என்று பாடுகிறார்.

ஜெயலலிதா: ஓகே...இந்த பாட்டுக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?

வடிவேலு: அது வந்தும்மா....

ஜெயலலிதா: சரி நானே சொல்றேன் கேட்டுக்கங்க....அதாவது எனக்கு முதலமைச்சர்ங்கற பதவி வரும்போது, மத்தவங்களுக்கு என்னை பார்த்தவுடன் பணிவு வரவேண்டும். அதைப்பார்த்த எனக்கு பால் விலை, பஸ் டிக்கெட்டுன்னு எல்லாத்தையும் உயர்த்தற துணிவு வரவேண்டும்ன்னு அர்த்தம். என்னைப்பற்றி எப்படி ஒரு தீர்க்கதரிசனமா அன்னைக்கே மிஸ்டர் எம்.ஜி.ஆர்., பாடியிருக்கார் பாருங்க..

வடிவேலு: ஆமாம்மா.....

ஜெயலலிதா: அதுசரி வடிவேலு, என் கட்சியில நிறைய பேச்சாளர்கள் இருக்காங்களே? உங்களுக்கு வேலையே இல்லையே?

வடிவேலு: அம்மா...அப்படி சொல்லாதீங்கம்மா...அவங்க பொதுவான பேச்சாளரா இருக்கட்டும். நான் அந்த விஜயகாந்த திட்ட்ற பேச்சாளரா இருந்திட்டு போறேன். 

ஜெயலலிதா: அந்தாள் யாரும் திட்டக்கூடாதுன்னு நான் சொல்லிருக்கேன்.

வடிவேலு: அம்மா.... எதிரியக்கூட திட்டாத உங்க நல்ல மனசு யாருக்கு வரும்?

ஜெயலலிதா: நல்ல மனசுலாம் இல்லை. எதுக்கு அவர திட்டி பெரியாளா ஆக்கனும்? சரி...ரொம்ப கெஞ்சி கேட்கறதால ஒரு வேலை தாறேன். ஜெயா டி.வி.,யில புதுசா ஒரு புரோக்ராம் செய்யலாம்ன்னு இருக்காங்க...

வடிவேலு: ஜெயா டி.வி.யிலா?

ஜெயலலிதா: என்ன வடிவேலு? மரியாதை இல்லாம பேரெல்லாம் சொல்றீங்க... நான் மட்டும்தான் ஜெயா டி.வி.ன்னு சொல்லுவேன். மத்தவங்க அம்மா டி.வி.ன்னுதான் சொல்லனும்..சரியா?

வடிவேலு: மன்னிச்சிடுங்கம்மா...

ஜெயலலிதா: ஜெயா டி.வி.ல சோல்ஜரான கேப்டன்னு ஒரு புரோக்ராம் செய்யறாங்க...அதுக்கு நீங்க தொகுப்பாளரா இருங்க...சும்மா இருக்கற உங்களுக்கும் பொழுதும் போகும். வருமானமும் கிடைச்சமாதிரி இருக்கும்...சரியா?

என்னை வாழவைத்த தெய்வம் அம்மா வாழ்க...என்ற படி காலில் விழுகிறார் வடிவேலு