Sunday, June 3, 2012

உருமி – விமர்சனம்பல நூற்றாண்டுகளுக்கு முன்பான கதையின் நாடியை சம காலத்தின் ஓட்டத்தில் விட்டால் வெற்றி என்கிற மகதீரா மந்திரத்தில் மலையாளத்தில் ஒரு சினிமா. தமிழாக்கத்தில் உருமியாகி இருக்கிறது.

500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஆங்கிலேயர்களுக்கு முன்பு வந்த போர்ச்சுக்கல் நாட்டு மாலுமியான வாஸ்கோடகாமாவின் வருகையின் பாதிப்பினை சம காலம் தொட்டு சொல்லும் படம்தான் உருமி.

நில வழியாக வருவதானால் முகம்மதிய நாடுகளை தாண்டி, பாலைவனத்தினை தாண்டி, முக்கியமாக ரஜபுத்திரர்களைத் தாண்டி கேரளா வருவதென்பது சாத்யப்படாத காலத்தில் நீர் வழியாக வருவதே எல்லா நாடுகளுக்கும் எளிதான வழியாக தென்பட்ட சமயத்தில் அதற்குண்டான வழியை முதலில் கண்டவன்தான் இந்த வாஸ்கோடகாமா. ஏனெனில் அவர்களுக்கு தேவை நம் கருப்பு மிளகு. இது எளிதில் எங்கும் விளையாது. அதனால் கிராக்கி அதிகம். இந்தியா செல்ல வழி கண்டுபிடித்ததற்காக போர்ச்சுக்கல் வாஸ்கோடகாமாவை கொண்டாடுகிறது. முதலில் வரும்போது சில போர்ச்சுகீசியர்களை இங்கேயே விட்டு விட்டு செல்கிறார் வாஸ்கோடகாமா. அவர்கள் வியாபாரத்துடன் விளையாட்டையும் ஆரம்பித்து வைத்து விடுகிறார்கள். 22 வருடங்களுக்கு பின் வரும் வாஸ்கோடகாமா மிளகு மட்டுமல்லை மிளகு விளையும் நாட்டையே கபளீகரம் செய்ய துணிகிறார். அதை நம் மன்னர்கள் எப்படி எதிர் கொண்டார்கள் என்பதே கதை.

பிருதிவிராஜ் ஒரு பப் ஒன்றை நடத்தி வருகின்றனர். அவரது நண்பராக வருகிறார் பிரபுதேவா. கடனில் இருக்கும் பிருதிவிராஜிற்கு கேரளாவில் சொந்தமாக ஒரு இடம் இருக்கிறது. இதனை வெளிநாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் விலைக்கு வாங்க வருகிறது. கடன் பிரச்சினையில் அதை விற்று விடும் எண்ணத்தில் இருக்கும் பிருதிவிராஜ், கேரளாவில் அவருக்கு சொந்தமாக உள்ள கண்ணாடிக்காடு என்ற இடத்திற்கு வருகிறார். அந்த இடத்தில் வித்யாபாலன் அப்பகுதி மக்களுக்காக பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த இடத்தை விற்க வேண்டுமெனில் இங்குள்ள ஆதிவாசி மக்களுக்கு பதில் சொல்லிவிட்டு, இடத்தை விற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்.

ஆதிவாசிகளிடம் செல்லும் பிரிதிவிராஜிடம் குகைகால மனிதனாக வரும் ஆர்யா, பிரிதிவிராஜின் மூதாதையர்கள் யார்? அந்த இடத்தின் பெருமை என்ன? என்பதை அவருக்கு விளக்குகிறார். அப்போது துவங்குகிறது 15-ம் நூற்றாண்டுக் கதை.

இந்தியாவை கண்டு பிடிக்க வரும் வாஸ்கோடகாமா, அரைபடி மிளகை வாங்க வந்து அன்னை நாட்டை அடிமை படுத்துகிறான். நாட்டை மீட்கும் முயற்சியில் பிரிதிவிராஜின் தந்தையாக வரும் ஆர்யா முதலாவது ஆளாக உயிரை விடுகிறார்.

வாஸ்கோடகாமா கடல்பகுதியில் வரும்போது ஹஜ் பயணம் செய்துவிட்டு நாடு திரும்பும் 400 முஸ்லீம்களை கொன்று விடுகிறான். இவர்களில் ஒரு பெண்மணி அவர்களிடம் உள்ள நகைகளை சிறுவனாக இருக்கும் பிரிதிவிராஜின் கையில் கொடுத்து விட்டு நாட்டை காப்பாற்றும் படி சொல்லி விட்டு இறந்து போகிறார். அனாதையாக நிற்கும் சிறுவன் பிரிதிவிராஜ், சிறுவயது பிரபுதேவாவின் வீட்டில் வளர்கிறார். அந்நகைகளை உருக்கி உருமி என்ற ஆயுதத்தை செய்கிறார். (தமிழில் 'சுருள் வாள்' எனப்படும் இந்த ஆயுதம் முஸ்லீம்கள் பயன்படுத்திய ஆயுதமாகும். அவர்கள் அந்த ஆயுதத்திற்கு வைத்திருக்கும் பெயர் உருமி.)

காலச்சக்கரம் சுழல, 22 வருடங்களுக்கு பிறகு வீரனாக வளர்ந்து நிற்கிறார் பிரிதிவிராஜ். அப்போது வாஸ்கோடகாமாவும், அவரது மகனும் சேரநாட்டில் அட்டகாசம் செய்கின்றனர். சிரக்கல் மன்னனின் மகளான நித்யா மேனனை வாஸ்கோடகாமாவின் கூட்டம் சுற்றி வளைக்க, பிரிதிவிராஜும் பிரபுதேவாவும் காப்பாற்றுகிறார்கள்.

வாஸ்கோடகாமா கூட்டத்தை நாட்டை விட்டு விரட்டும் முயற்சியில் சிரக்கல் மன்னன் முயற்சிக்கிறார். ஆனால் அவரது அமைச்சனாக வரும் தளபதி சேனாச்சேரியும், மன்னின் மகனான பானுவிக்கிரமனும் வாஸ்கோடகாமாவிற்கு ரகசியமாக உதவி செய்கின்றனர்.

தன்மகளை கைப்பற்ற நினைத்த வாஸ்கோடகாமாவின் மகனை சிறைப்பிடித்து கொண்டு வரும் பொறுப்பை பிரிதிவிராஜிடம் கொடுக்கிறார் சிரக்கல் மன்னன். கூடவே அவரது படையினரில் 5 பேரையும் அனுப்புகிறார். பிரிதிவிராஜும் பிரபுதேவாவும் தங்களது திறமையால் வாஸ்கோடகாமாவின் மகனை சிறைபிடித்து வருகின்றனர். கூட வந்தோர் அரக்கலில் இருக்கும் முஸ்லிம் பெண்களான ஜெனிலியா கூட்டத்தை சிறைபிடித்து வருகின்றனர்.

பிரிதிவிராஜின் திறைமையை பாராட்டும் அரசர், அவருக்கும் பிரபுதேவாவிற்கும் தளபதி பொறுப்பை அளித்து வாஸ்கோடகாமாவை அழிக்க சொல்கிறார். இதனிடையே நித்யா மேனனுக்கும் பிரபுதேவாவிற்கும் காதல் மலர்கிறது. பிரிதிவிராஜிற்கும் ஜெனிலியாவிற்கும் காதல் மலர்கிறது.

சிரக்கல் அரசனின் மகனும், அமைச்சனும் செய்கின்ற சதியால் வாஸ்கோடகாமாவின் மகன் தப்பிச் செல்கிறான். சிரக்கல் மன்னன் கொல்லப்படுகிறார். அரசனின் ஆதரவற்று இருக்கும் பிரிதிவிராஜும், பிரபுதேவாவும் வாஸ்கோடகாமா கூட்டத்தை விரட்டி அடித்தார்களா இல்லையா என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார்.

மொழி தெரியாத சில நபர்களால் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியங்கள் எளிதாக அபரிக்கப்பட்டு ஆளப்பட்டு வந்திருக்கிறது. அதற்கு காரணம் துப்பாக்கி, பீரங்கி போன்ற வெடிப்பொருட்கள் நமக்கு பரிச்சயமாகாத காலத்தில் அவர்கள் அதில் நிபுணர்களாக இருந்துள்ளார்கள். அந்த சூட்சுமத்தினை ஏன் நாம் அன்று கற்றுக்கொள்ள முயலவில்லை என்பது எனக்கும் இன்றளவும் விளங்காத ஒன்றாக இருக்கிறது.

 இந்த படத்தினை நாம் முதலில் மேக்கிங்கிற்காக பாராட்டியே ஆக வேண்டும். ஆங்கில படங்களுக்கு இணையான ஒளிப்பதிவு மற்றும் காட்சியமைப்பு. அரசர் என்றாலே பளபள உடை மற்றும் கிரீடத்தில் பார்த்தவர்களுக்கு இந்த படம் வித்யாசப்படலாம். அரண்மனை அமைப்பும் அப்படியே. பின்னனி இசையும் பிரம்மாதம். பாடல்களை கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஜெனிலீயாவை கிட்டத்தட்ட கிறுக்கி மாதிரி காட்டி வந்த இயக்குனர்கள் இந்த படத்தினை பார்க்க வேண்டும். சபாஷ் ஜெனிலியா.. விருதை எதிர் நோக்குங்கள். சம்பளம் ஒன்றை மட்டும் கணக்கில் கொள்ளாமல் இந்த திரைப்படம் உருவாக பாடுபட்ட அனைவருக்கும் புண்ணியங்கள் சேரட்டும்.

சேர நாடு என்றவுடன் இன்றைய கேரளம் மட்டுமே என்கிற நினைப்பு பலருக்கு உண்டு. சேர நாடு என்பது கேரளம் தாண்டி கோவை மற்றும் கரூர் வரை உண்டு. ஒரு கட்டத்தில் சேர நாட்டின் தலை நகராக கரூர் (வஞ்சி மாநகரம்) தலை நகராக இருந்தது. இதுதான் வரலாறு. பிற்கால சோழ படையெடுப்பினால் இவை சோழ தேசமாயின. தற்கால கேரளமும் சோழனால் வெற்றி கொள்ளப்பட்டு மலையாளிகளிடம் பாளையத்திற்கு விடப்பட்டவை. இந்த குறிப்பு படத்தின் முதலில் தெளிவாக சொல்லப்பட்டும் இருக்கிறது.

படத்தில் என்ன குறை எனில், தெலுங்கும் தமிழும் உச்சரிப்பின் வேகத்தில் ஒத்துப்போகக்கூடியவை. ஆனால் மலையாளம் உச்சரிப்பில் தமிழை விட வேகம் அதிகம். எனவே டப்பிங் செய்த போது அதே வேகத்தில் தமிழாக்கப்படுத்தி இருக்கிறபடியாலும், தமிழும் பண்டைய உச்சரிப்பில் இருப்பதால் புரிந்து கொள்ளுதல் சிரமமாகிறது. கிளைக்கதைகளும் அதிகம். படத்தின் இடையில் ஒரு ஐந்து நிமிடம் ஒரு போன் பேசிவிட்டு படத்தினை பார்த்தீர்களேயானால் புரிந்து கொள்ள பல நிமிடங்கள் தேவைப்படும். அவ்வளவு வேகம். இந்த வேகம் நமக்கு பழக்கப்படாத ஒன்று.

உருமி நல்ல படம்.

4 comments:

 1. //உருமி – நல்ல படம்.

  பாத்திடுவோம் ...

  ReplyDelete
 2. பாருங்க தல.. கொஞ்சம் பொறுமையும் வேணும்.. அப்பதான் படம் புரியும்.

  தமிழன் ஆண்ட பூமியான கேரளா நமக்கே தண்ணீர் தராமல் தண்ணி காட்டுதே.. எழுதலாம்ல...

  ReplyDelete
 3. //தமிழன் ஆண்ட பூமியான கேரளா நமக்கே தண்ணீர் தராமல் தண்ணி காட்டுதே.. எழுதலாம்ல...

  அதற்க்கு நிறைய விஷயங்கள் சேகரிக்க வேண்டியது இருக்குமே... இப்போதைக்கு தெரிந்ததை வைத்து எழுதினால் அது அரைகுறையாகத்தான் இருக்கும் ,

  அந்த காலத்துல நம்மை ஆண்டவர்கள் தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் உயிரையும் விடக்கூடியவர்களாக இருந்தார்கள் தமிழனும் செழிப்பாக இருந்தான் ,இன்று அப்படியா ம**ரை கூட தரமாட்டார்கள் ,அதான் நம் காலடியில் இருந்தவர்கள் எல்லாம் நம்மை ஏறி மிதிக்கிறார்கள்...

  ReplyDelete
 4. நீங்க சொல்றது கரெக்ட்தான் தல.. ஆனால் இந்த நிலை நிரந்தரம் அல்ல.. நல்லது நடக்கும் என நம்புவதை தவிர வேறு வழி இல்லை.

  ReplyDelete