ஒரு நாள் என்பதே 24 மணி நேரம்தான். அதில் பாதிக்கும் மேல் மின்சாரம் இல்லாமல் வாழ பழகி இருக்கிறோம். நமக்கு நாமே வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்ளலாம். காற்றடித்தால் கரண்ட் வரும். மழை பெய்தால் கரண்ட் வரும். அதெல்லாம் சரி காற்றும் மழையும் எப்பொழுது வரும்? விடையில்லா கேள்வி. என்னதான் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டு படுத்தாலும் கடிக்கும் கொசுவிற்கு பதில் சொல்லி மாள முடிவதில்லை. நம் இரத்தத்தை தினமும் ருசி பார்க்கும் கொசு கூட சொல்கிறது… பீகாரிலிருந்து எல்லா கொசுவும் தமிழ் நாட்டிற்கு வந்து விட்டது என்று. பத்து வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட பீகார் இன்று பளிச்சிடுகிறது. ஆனால் மின்மிகை மாநிலமாக இருந்த நம் தமிழ்நாடு இன்று இருளில் தத்தளிக்கிறது. அம்மாவை கேட்டால் அய்யாவை கேள் என்பார். அய்யாவை கேட்டால் அம்மாவை போய் பார் என்பார். நாதியற்று போனோம் நாம்.
நம் ஊரில் மிகையாக கிடைப்பது வெயில் மட்டும்தான். அந்த வெயிலிலும்
மின்சாரம் தயாரிக்க இயலும். ஆனால் அப்படி ஒரு மின் நிலையம் கூட இதுவரையில்
உருவாக்கப்படாமல் இருப்பதும் குறைந்த பட்சம் இனிமேலாவது ஒரு மின் நிலையம் என்கிற
பேச்சும் இல்லாமல் இருப்பதும் நம் துரதிருஷ்டம். குஜராத்தில் மோடியால் சாதிக்க
இயன்றதை நம்மால் ஏன் முடியாது???