Monday, October 1, 2012

நாட்டு நடப்புகளும் - நன்றிகளும்!!!!


அனைவருக்கும் வணக்கம். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு “காஞ்சனா” திரைப்படம் பார்க்கப்போகும் நம் அனைவருக்கும் காந்தியை நினைக்கும் வண்ணம் அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்புகள் வராமல் பார்த்துக்கொண்ட (ஹேராம் தவிர) அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகுக.

ஒரு வழியாக நீதிமன்றங்கள் பிதுக்கிய பிதுக்கில் வேறு வழியில்லாமல் ஷட்டரை திறந்து விட்டார் ஜெகதீஷ் ஷட்டர். காவேரி என்பது வெறும் தண்ணீர் இல்லை. அது ஜீவ நதி. தமிழ் நாட்டின் 9 மாவட்டங்களின் வாழ்வாதாரம். தமிழகத்தின் அரிசி தேவையை முக்கால்வாசி தீர்ப்பது இந்த நதிதான். அதனால்தான் ஒவ்வொரு முறையும் காவிரி நதி நீர் திறப்பு என்பது கவனத்திற்குள்ளாகிறது. தமிழ் நாடு என்பது ஒரு வடிகால் கிடையாது. மழை அதிகமாகி அணைகள் நிரம்பிவிட்டால் திறந்து விடுவதற்கு. இருக்கும் நதி நீரை தேக்கி வைத்து பருவத்திற்கு திறந்து விட்டு பயிர் செய்யத்தான். குறுவை சாகுபடி குற்றுயிராய் போனது. சம்பாவாவது சாப விமோசனம் பெறவேண்டும். இல்லை எனில் தமிழகத்தில் அரிசி விலை விண்ணை முட்டிவிடும். இதையும் ஒரு பிரச்சினை ஆக்கி பேருந்து உள்பட எந்த வாகனமும் எல்லை தாண்ட விடாமல் பார்த்துக்கொண்ட போக்குவரத்து துறைக்கும் நன்றிகள்!!!

மேலும் மேட்டூர் அணை திறக்கும் சமயம் செய்யப்படும் மின் உற்பத்தி தமிழக்கத்தின் புழுக்கத்தினை குறைக்க உதவும். இப்பொழுது தினமும் 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் கரூரில் மின் தடை ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கும் குறைந்து விட்டது (போன வாரம் வரை 14 – 15 மணி நேரம் மின் விநியோகம் கிடையாது). இதில் ஷட்டர் அண்ணாச்சி இந்த தண்ணீரை திறப்பதற்கு முன்பே நிறுத்துவதற்குண்டான நாளை சொல்லிவிட்டார். என்னே பெருந்தண்மை! 3 நாட்கள் கழித்து நீதி மன்றத்தில் தடை ஆணை பெற்று தண்ணீரை தடுத்துக்கொள்ளலாம் எனவும் அதுவரை கர்(நாடக) மக்கள் போராட்ட குணத்தினை ஒளித்து வைத்து அமைதி (!) காக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மிக்க நன்றி ஷட்டர்ஜி!!

ஒரு பெரும் தீ விபத்து நடந்து முடிந்து ஒரு மாதத்திற்குள் மீண்டும் சிவகாசி சுற்றுவட்டார ஆலைகளில் அடுத்தடுத்து விபத்துக்கள் என செய்திகள் சொல்கின்றன. 700க்கும் அதிகமான ஆலைகளை 5 பேர் கொண்ட குழு (!) ஒன்று முழுவதுமாக 15 நாட்களுக்குள் ஆய்வுகள் நடத்தி முடித்து விட்டதாம். இனி விபத்துக்கள் நடைபெறாது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். வாழ்க ஜனநாயகம்!! அவர்களுக்கும் நன்றிகள் பல.

காந்தி ஜெயந்திக்கு பிறகு மதுக்கடைகள் பகுதி நேரமாக குறைக்கப்பட போகின்றது என ஒரு வதந்தி நிலவி வந்தது. அப்படி எல்லாம் கிடையாது இன்னும் இன்னும் விற்பனையை பெருக்க வேண்டும் என முதன் முதலில் போனஸ் அறிவிப்பு டாஸ்மாக்கில் வேலை செய்பவர்களுக்கு தான் என அறிவித்த நம் அரசாங்கத்திற்கும் நன்றி!!! எனக்கு ஒன்று புரியவில்லை… குடித்து விட்டு வண்டி ஓட்டக்கூடாது எனில் எதற்கு பார்களின் வெளியில் பார்க்கிங் வசதி???!!

ஆயிரக்கணக்கில் மட்டுமே வேலை வாய்ப்பு என தெரிந்து லட்சக்கணக்கில் தேர்வு எழுதிய நம் தமிழக மக்களில் நம்பிக்கை புல்லரிக்க வைக்கிறது. கடந்த தேர்வில் பெரும் குளறுபடிகள் நடந்த போதும் மீண்டும் இவ்வளவு பேரை நம்பிக்கையாக தேர்வெழுத வைத்த தேர்வாளர்களின் நடவடிக்கைகளுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!!




2 comments:

  1. எனக்கு ஒன்று புரியவில்லை… குடித்து விட்டு வண்டி ஓட்டக்கூடாது எனில் எதற்கு பார்களின் வெளியில் பார்க்கிங் வசதி???!!

    பைக்ல வந்து குடிச்சிட்டு போறவனை அடுத்த முக்குல மடக்கி பிடித்து காவல்துறை தன் கடமையை காட்டத்தான்...

    ReplyDelete
  2. வாங்க ராஜா... கருத்துக்களுக்கு நன்றி.. அடிக்கடி எழுதுங்க தல..கமெண்ட்ஸ் வரணுங்கறத விட எத்தனை பேர் படிக்கிறாங்கன்றது தான் முக்கியம்

    ReplyDelete