Friday, July 19, 2013

வாலி – ஒரு ச(சா)காப்தம்

திரையுலகில் மிக நீண்ட காலம் தனக்கென ஒரு தளத்தினை தக்கவைத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த கவிஞர் வாலி உடல் நலக்குறைவால் நேற்று (18/07/2013) காலமானார். அவருக்கு வயது 82.

திருச்சி – கரூர் செல்லும் சாலையில் உள்ள திருப்பராய்த்துறை தான் இவரது சொந்த ஊராகும். ஸ்ரீரங்கத்தில் வளர்ந்த இவரின் இயற்பெயர் ரங்கராஜன். இளமையில் பல நாடகங்கள், கவிதைகள், ஓவியங்கள் என வாழ்ந்து கொண்டிருந்த வாலிக்கு திரைப்படத்தில் பாடல் எழுதும் துறையே சிறந்த தளமானது. மாலி என்றொரு ஓவியர் இருந்த காலத்தில் அவரை விட சிறப்பாக வரவேண்டும் என்று அவர் நண்பர்தான் வாலி என இவருக்கு பெயர் சூட்டினார். அகில இந்திய வானொலியில் பணியை துவங்கிய இவர் சென்னை வந்து திரைப்படத்துறையில் கால் பதிக்க பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஸ்ரீரங்கத்தில் இவரின் சமகால நண்பர் சுஜாதா ஆவார். பி.பி.ஸ்ரீனிவாஸ் மூலமாக திரையுலக வாழ்க்கையை துவங்கிய இவர் கற்பகம் திரைப்படதிற்கு பிறகு பிரபலமானார். எம்ஜியாரின் ஆஸ்தான பாடலாசிரியராக திகழ்ந்தார். நாடே எம்ஜியாரை ஆண்டவரே என்றழைத்த நேரத்தில் எம்ஜியாரால் ஆண்டவரே என்றழைக்கப்பட்டவர் வாலி. சிவாஜிக்கு ”வாத்தியார்”

கண்ணதாசனின் சமகாலத்தில் அவருக்கு போட்டியாக அறியப்பட்டார். அதே கண்ணதாசனே தனது இசை வாரிசாக இவரை மேடையில் அறிவித்தது சங்கல்பம். பல தலைமுறைகள் கடந்து இவரின் பாடல் இயற்றும் திறன் குறையவே இல்லை. தரைமேல் பிறக்க வைத்தான் போன்ற தத்துவ பாடல்களாயினும் சரி, முன்பே வா என் அன்பே வா என காதலில் குழைந்த போதும் சரி வாலி வாலிதான். பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் பாராட்டுப் பெற்றுள்ளார். அழகிய சிங்கர் தொகுப்பினை சமீபத்தில் அளித்தவர். 2007ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் போன்ற கவிதை நூல்களையும் படைத்துள்ளார்.

ஜோதிடத்தில் கூறப்பட்ட சில சிக்கலான விசயங்களை பாடல்களில் எளிமையாக தந்தவர். உதாரணம் ஒருவனின் அல்லது ஒருத்தியின் அழகை (அக அழகு மற்றும் புற அழகு) அவனது கடக வீட்டு அதிபதியான சந்திரனே தீர்மானிக்கிறான். அதை எளிமையாக “நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ” என சொல்லிவிட்டார். அதே பாடலில் ”மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகியென்பேன்” என முடித்திருப்பார். அது சாமுத்திரிகாவில் வரும் முக்கிய அமைப்பாகும்.

காதலித்து மணம் புரிந்த இவர் தன் காதல் மனைவியின் பிரிவிற்கு பிறகு உடல் நலம் குன்றினார். எத்தனையோ காலத்தை வென்ற பாடல்களை கொடுத்த இவர் மறைவு நமக்கு எல்லாம் மிகப்பெரிய இழப்புதான்.

என் தகப்பனாரின் நினைவு தினமான ஜூலை 18ல் இவரும் மறைந்ததால் இவரின் நினைவு நாளை என்னாளும் என்னால் மறக்க இயலாது.


No comments:

Post a Comment