Thursday, December 18, 2014

எழில் மிகு 7ம் ஆண்டில்

அன்பு நண்பர்களே!

இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப்பூவை பார்வையிட்டு வருவது மகிழ்ச்சி. முக நூலின் வரவு இங்கு வேலையை குறைத்துவிட்டது என நினைக்கிறேன்.

வருகை தரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!!!!

Saturday, December 6, 2014

Walky Jacky

A new entry in our life..........Jacky Chan


Tuesday, October 21, 2014

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....!!!

Saturday, October 18, 2014

ருசி - இந்த பொழப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது

படித்ததில் பிடித்தது: (பேஸ்புக்ல சுட்டது)
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..!
1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை
2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா
3. சிதம்பரம் கொத்சு
4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்
5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை
6. கும்பகோணம் பூரி-பாஸந்தி
7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்
8. மன்னார்குடி அல்வா
9. கூத்தாநல்லூர் தம்ரூட்
10. நீடாமங்கலம் பால்திரட்டு
11. திருவையாறு அசோகா
12. கும்பகோணம் டிகிரி காபி
13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா
14. கோவில்பட்டி கடலை மிட்டாய்
15. ஆம்பூர் தம் பிரியாணி
16. நாகர்கோவில் அடை அவியல்
17. சாத்தூர் சீவல்
18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்
21. மணப்பாறை அரிசி முறுக்கு
22. கீழக்கரை ரொதல்அல்வா
23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி
24. பண்ருட்டி முந்திரி சாம்பார்
25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்
26. சாயல்குடி கருப்பட்டி காபி
27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா
28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்
29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி
30. புதுக்கோட்டை முட்டை மாஸ்
31. தூத்துக்குடி மக்ரூன்
32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி
33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு
34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்
35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்
36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும்.
அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..
1. குழிப்பணியாரம்
2. வாழைப்பழ தோசை
3. எண்ணெய் கத்தரிக்காய்
4. பால் பணியாரம்
5. பூண்டு வெங்காய குழம்பு
6. ரவா பணியாரம்
7. பால் கொழுக்கட்டை
8. சேமியா கேசரி
9. மோர் குழம்பு
10. நாட்டுகோழி மிளகு வறுவல்
11. இறால் தொக்கு
12. நாட்டுக் கோழி ரசம்
13. நண்டு மசாலா
14. வெண்டைக்காய் புளிக்கறி
15. பருப்பு சூப்
16. ரிப்பன் பக்கோடா
17. பருப்பு உருண்டை குழம்பு
18. குருமா குழம்பு
19. தேன்குழல்
20. கருப்பட்டி பணியாரம்
21. சீயம்
22. மாவுருண்டை
உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.
"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்.

Sunday, September 28, 2014

அம்மா அரெஸ்ட் - தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும், தலா நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் தலா, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெ., பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் இவர் முதல்வராக நீடிக்க முடியாது. இந்நிலையில், அடுத்து யாரை முதல்வராக தேர்வு செய்யலாம் என்பது குறித்து அ.தி.மு.க., வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன்படி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஷீலா பாலகிருஷ்ணன், சைதை துரைசாமி , விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோர் பெயர் அடிபடுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம், ஷீலா பாலகிருஷ்ணன், சைதை துரைசாமி ஆகிய 3 பேரும் டாப்லிஸ்ட்டில் உள்ளனராம்.

பத்திரிக்கை செய்தி - தினமலர்

Tuesday, September 23, 2014

அம்மா உணவகம் - அம்மா மருந்தகம்



கரூர் மா நகரின் அடுத்த கட்ட நல் முயற்சியாக அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகம் செயல்பட இருக்கிறது. அம்மா உணவகம் மலிவு விலையில் உணவுகளை பல நகரங்களில் வழங்கி வரும் சூழலில் கரூரின் மையப்பகுதியான உழவர் சந்தை திடலில் (பழைய பேருந்து நிலையம்) தொடங்கப்பட உள்ளது. இந்த இடமானது வெகுஜன மக்கள் அதிகம் புழங்கும் இடம் என்பதால் உண்மையிலேயே மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.

அதே போல அம்மா மருந்தகம் கோவை சாலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வர இருக்கிறது. இதுவும் மக்களுக்கு எளிதில் சென்றடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஏற்கனவே கரூரின் அமராவதி ஆற்றின் மேல் பசுபதிபாளையம் செல்ல மேம்பாலம், மண்மங்கலம் தனி தாலுகா, புதிய மருத்துவக்கல்லூரி, சாய ஆலைகளுக்கான சுத்திகரிப்பு நிலையம், பேருந்து நிலைய விரிவாக்கம் போன்ற அறிவிப்புகள் என நல்ல திட்டங்கள் கரூரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும்.

நன்றிகள் பல.

Tuesday, July 15, 2014

பகட்டு உலகின் பிளாஸ்டிக் மனிதர்கள்: விடைபெறும் ஐ.டி. ஊழியனின் சில வரி(லி)கள் - படித்தது


வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை வாடிக்கையாக மாறும்போது கொண்ட வியப்பு எல்லாம் விரக்தியாய் மாறும் என எதிர்ப்பார்த்தில்லை. சினிமா போலி பிம்பத்தை கொடுத்து சில சமயங்களில் யதார்த்தை மறைத்து விடும் என்று கேட்டதுண்டு. ஐ.டி.துறையில் இணைந்த பிறகு தான் இத்துறை பற்றிய பிம்பம் எவ்வளவு அபத்தமாக திரையில் அமைந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.
கடந்து செல்லும் நீண்ட நெடும் சாலையை கடக்க முடியாமல் மீளத் துடிக்கும் மன ஓட்டங்கள் ஏராளம். ராஜீவ் காந்தி சாலையில் மனதால் தொலைந்துபோன சில மனிதர்களின் கதைதான் இப்பதிவு.
ஐ.டி. துறையில் நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கைதான் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கதாப்பாத்திரப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது.
உறக்கத்தை தேடும் கனவு:
என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் ரகு. கல்லூரி காலங்களில் எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பான். யாருக்கும் உதவிட தயங்க மாட்டான். படிந்த தலை, நெற்றியில் அணுதினம் பூசிய திருநீர், கையில் கல்கியின் புத்தகம், தன்மையாக பேசும் அணுகுமுறை, மொத்தத்தில் இவன் ஒரு சாந்த ஸ்வரூபி. அன்பன்றி யாரிடமும் வெறுப்பை சம்பாதித்திடாத ஓர் இளைஞன்.
ஒரே அலுவலகத்தில் நாங்கள் இருவரும் வேலை செய்ததால் உணவு உண்ணச் செல்லும்போது எப்போதாவது யதேச்சையாக சந்திப்பதுண்டு. வெகுநாட்களுக்குப் பிறகு அன்றொரு நாள் இவனை பார்க்க முடிந்தது. சுரத்தில்லாத முகத்தோடு இடுங்கிய விழிகள், முன்பிருந்த முடிகள் கொட்டிப்போய் அரை வழுக்கை மண்டையுடன் என்னை கடந்து சென்றான். பார்த்தாலே இவன் நிலைமை சரியாக இல்லை என்பதை உணர முடிந்தது. எப்படி'டா இருக்க? ஈவ்னிங் டி'க்கு பார்க்கலாமா? என்று கேட்டபோது 'ரொம்ப மோசமா இருக்கேன் டா. நேத்தி காத்ததால பத்து மணிக்கு வந்தேன்... இப்போதான் வீட்டுக்கு கிளம்புறேன். நான் வரலை அப்புறம் பார்ப்போம்' என்று கண்ணை கசக்கிக் கொண்டே சொன்னான். (அவன் கூறியபோது மதியம் ஒரு மணி).
எப்போதும் வாரத்தில் சனிக்கிழமையும் கட்டாயமாக வேலை பார்க்க வேண்டிய சூழல் இவன் ப்ராஜெக்ட்டில் இருந்தது. அதுவும் ஒவ்வொரு நாள் வேலை எப்போது முடியும் என்பதே இவனால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. திடீர் என்று பத்து மணிக்கு க்ளைன்ட்கால் வைத்துக் கொள்ளலாம் என்ற செய்தி வந்தால் அவ்வளவு தான். அன்று உறங்கிய மாதிரி தான். 'முடியல டா, சண்டே ஒரு நாலு லீவ் கேட்பதற்கே முன் கூட்டி பெர்மிஷன் வாங்க சொல்றாங்க. இப்படியே ஒரு வருஷமா போகுது. நான் ரிசைன் செய்து வீட்டுக்கே திரும்பலாம்ன்னு முடிவு செஞ்சுட்டேன்' என்றான்
சரி, வேலையை விட்டுட்டு என்னடா செய்யப் போகுற என்று கேட்டால்? 'தெரியல டா எங்க ஊருக்கே போகலாம்ன்னு இருக்கேன் (தஞ்சை). அங்கப்போய் எதாவது தொழில் செஞ்சுக்க வேண்டியது தான்' என்றான்.
'எதுக்கு டா ரிசைன் பண்ற? ப்ராஜெக்ட்டிலிருந்து ரிலீஸ் கேட்டு வேற எங்கயாவது போக வேண்டியது தானே!' என்று கேட்டேன். 'நீ வேற, நான் ஒரு மாசமா ரிலீஸ் கேட்கிறேன்... இந்த டிசம்பர்லேந்து ப்ராஜெக்ட் ரொம்ப ஹெக்டிக்காக போகுது. இப்போதெல்லாம் படுத்ததா தூக்கமே வரமாட்டேங்குது. 'இந்த ப்ராஜெக்ட்'ல இருப்பதால சரியான நேரத்துக்கு சாப்பிட முடியல, தூக்கத்தையே பார்க்க முடியல ப்ளீஸ் எனக்கு ரிலீஸ் கொடுங்க ' என்று எச்.ஆர் (மனித வளம்) கிட்ட பேசினால் 'நவம்பர் வரைக்கும் வெயிட் பண்ணுங்க அதுக்கு அப்புறம் ஆன்-சைட் தரோம், வேற ப்ராஜெக்ட் வாங்கித் தரோம்ன்னு வடை சுடறாங்க'. இல்லை எனக்கு இது முடியல, என்ன விட்டுடுங்கன்னு கெஞ்சினேன். எனது மேனேஜர் பெரிய தல எச்.ஆர் கிட்டேந்து இதை தெரிஞ்சுகிட்டு 'நீ தான் ப்ரைம் ரிசோர்ஸ், நீ இங்கயே இரு உனக்கு சீக்கிரமா பெரிய போஸ்ட் வாங்கித் தரேன்' என்கிறார்.
இதே ஆள் போன மாசம் 'நீ சராசரியாக பத்து மணி நேரம் தான் வேலை பார்க்குற, உன் வேலை ரொம்ப சுமார் ரகம் தான்'என்று கூறி எனக்கு மோசமான ரேடிங் கொடுத்தார். இப்போது ரிலீஸ் கேட்ட பிறகு 'நீ தானே முக்கியமான ஆள், நீ கிளம்பினால் எப்படி?' என்று ஏதேதோ துதி பாடுகிறார். இப்போ இவங்க ரீலிஸ் தரமாட்டேங்குறாங்க, சரி நான் வேலையை ரிசைன் செய்கிறேன் என்று கூறி பேப்பர் (ராஜினாமா கடிதம்) போட்டு விட்டேன்.
நான் வேலைக்கு சேர்ந்து அந்த நாளோடு இரண்டு வருடம் முடிவடைவதால் பாண்ட் காசு (பாண்ட் வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடத்திற்குள் ராஜினாமா செய்தால் இரண்டு முதல் மூன்று மாத சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்ற கம்பெனியின் விதி) தரவேண்டாம் என்று நினைத்தேன். இப்போது எனது கடைசி நாள் முடிய இரண்டு நாட்களே உள்ள சூழலில் எச்.ஆர் பாண்ட் அமௌன்ட் ஐம்பதாயிரம் நீ கட்ட வேண்டும் என்கிறார். அதான் பாண்ட் பீரியட் முடிவடைந்து விட்டதே என்று கேட்டால், 'நீ உடம்பு சரியில்லன்னு இந்த வருஷத்துல பத்து நாள் தொடர்ந்து லீவ் போட்டிருக்கிற அதுக்காக இன்னும் பதினைந்து நாட்கள் வேலை பார்த்துட்டு போ. இல்லைன்னா ஐம்பதாயிரம் கட்டும்படி வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்புவேன்' என்று கூறுகிறார்.
'நான் சரியா வேலை செய்யலன்னு சொல்றாங்க, அப்புறம் இங்கயே இருன்னு படுத்தறாங்க இவங்களுக்குகெல்லாம் ஏன் கொஞ்சம் கூட மனசாட்சியே இருக்க மாட்டேங்குது? சரி டா நான் போய் அவங்கள பார்த்திட்டு வரேன்' என்று கூறி அவ்விடத்தை விட்டு விலகினான்.
வாழ்க்கையை நடத்த வேலை என்பதை மறந்து வேலை செய்வதற்கும் பொருள் ஈட்டுவதற்குமே வாழ்க்கை என்ற சூழல் இன்றைய சென்னை நகரத்தின் ஒரு புறம் உருவாகி வருகிறது. ஐந்து நாட்கள் மெஷின்களுடன் மெஷினாக வாழ்ந்து வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் வாழ்க்கையின் அத்தனை இன்பங்களையும் அவசர அவசரமாக வாழப்பார்க்கும் மனிதர்கள் இவ்வலையிலிருந்து வெளிவரப் பார்த்தாலும் வேலையை துறந்து வெளியே வந்தால் அடுத்த பொழப்புக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்ற பயத்தினாலே நாளும் தெய்கின்றனர்.
இவனுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கிடைப்பதே கேள்விக்குறியாக இருந்தது. 'அடுத்து என்ன செய்ய போகிறேன்னு தெரியல டா, இருந்தாலும் ஊருக்கே திரும்பப் போய் எதாவது நல்ல வேலை அமைச்சுபேன்' என்று கூறிய அவனின் தன்நம்பிக்கை இங்கே பலரும் தேடும் ஒன்றாக இருக்கின்றது.
கேம்பஸ் இன்டர்வியு-வில் பல சுற்றுக்களை கடந்து ஒரு பெயர் பெற்ற நிறுவனத்தில் வேலை வாங்கி எத்தனை கனவுகளுடன் அவன் இந்த தகவல் தொழில்நுட்பத் துறையினில் நுழைந்திருப்பான். கோடிங்கில் எப்போதும் பிரிச்சு மேயும் திறன் கொண்டவனாக அவன் இருந்ததால் வேலை பார்ப்பதும் இவனுக்கு கடினம் கிடையாது, எப்போதும் செய்கின்ற வேலையை ரசித்து செய்யும் குணம் கொண்டவன், மிகுந்த நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இவன் தன் குடும்பத்து பொருளாதார பின்னடைவை மனதில் கொள்ளாமலா ராஜினாமா செய்யத் துணிந்திருப்பான்? இருப்பினும் இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கிறான் என்றால் அப்போது அவன் மன உலைச்சல் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
****
வீடு, மனைவி, மக்கள், வாழ்க்கை?
"ஆமாம் ப்ரோ நீங்க பேஸ்புக்குல இருக்கீங்களா?"
"ம்... இருக்கேன்டா தம்பி!"
"அப்புறம் ஏன் நம்ம டீம் மேட்ஸ் யார் பிரண்ட்ஸ் லிஸ்ட்லயும் நீங்க இல்லை?"
"ஆமாம் டா அங்க மட்டும்தான் நான் மனசுல நெனச்சத பேச முடியுது. அங்கயும் இவங்கள சேர்த்துகிட்டா, அப்புறம் அங்கயும் போலித் தனமா நடிக்க வேண்டியதாகிடும். நான் பாட்டுக்கு எனக்கு தோணினத சொல்லுவேன் அதெல்லாம் இவங்க கேட்டா அப்புறம் தேவை இல்லாம பேச்சு வார்த்தை உருவாகும்.
ஏன் அங்க அவங்கள எதாவது அசிங்கமா திட்டுவீங்களா? சீச்சீ இல்லைடா எனக்கு தோணினத சொல்லுவேன் அது நிறைய பேரால ஏத்துக்க முடியாது. உதாரணமா? 'பரதேசி படம் பார்த்து ரொம்ப ஃபீல் ஆகிட்டேன். நமக்கும் படத்துல அடிமையா வந்தவங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லைன்னு நினைக்கறேன், நாமளும் நமக்கு முன்னாடி கிளம்பின சீனியர்ஸ், சினிமாவுவல வர காரு, பங்களாவ'லாம் பார்த்து இங்க வந்துட்டோம். உள்ள வந்தாதான் எவ்வளவு கங்காணிங்க நம்மள மாதிரி ஆட்டை கொக்கி போட்டு இழுத்து வந்திருகாங்கன்னு உணர முடிஞ்சிது. என்ன அவங்கள சவுக்கால அடிக்கறாங்க, இவங்க நம்மள பணத்தால, ரேடிங்கால அடிக்கறாங்க, அங்க அதர்வாவுக்கு காலுல சங்கிலி இங்க நமக்கு கழுத்துல ஐ.டி.கார்ட். நாமளும் நம்ம சொந்தக்காரங்க இங்க நம்ம பேச்சை கேட்காம வந்து சேர்ந்திட்டா நாயன்மாரேன்னு வயித்துல வாயில அடிச்சிக்கறோம்.' இந்த ஐடியாவா வெச்சு ஒரு ஸ்டேடஸ் போட்டேன் டா.
'வாழ்கையில விரக்தியா இருக்கிறவங்க பாலா படத்துல வர மாதிரி மொட்டை அடிச்சிகிட்டு, கை காலுல சங்கிலி போட்டு பைத்தியம் மாதிரி காட்டுல மேட்டுல திரியணும்னு அவசியம் இல்லை. நல்ல புல் ஹான்ட் ஷர்ட் போட்டு, முடிவெட்டி, டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணி, கழுத்துல ஐடி கார்டோட உங்கள கிராஸ் பண்ற ஒருத்தனா கூட அந்த ஆள் இருக்கலாம்'ன்னு போட்டேன் டா. இப்படி நான் பல ஸ்டேடஸ் போடற்துனால என் ப்ரண்ட்ஸ்ல சில பேரே என்ன அன்-ப்ரன்ட் பண்ணிட்டாங்க."
***
"இந்த ஏரியாவுல வீடு வாடகைக்கு கேட்டு போனா குறைஞ்சது பதினஞ்சுலேந்து இருபத்தஞ்சாயிரம் வரைக்கும் வாடகை கேட்கறாங்க. பழக்கடைக்காரர் என்ன சார் இருபது ரூபாய்க்குலாம் பழம் வாங்கறீங்க.. நீங்க ஐ.டி ஒரு நூறு ரூபாய்காவது வாங்க வேண்டாமான்னு கேட்கறார். டீ குடிச்சிட்டு மிச்ச சில்லறையை கேட்டா... என்ன சார் இப்படி அசிங்கமா சில்லறையை கேட்கறீங்க, எதாவது பூமர், சாக்லேட் எடுத்துக்கோங்கன்னு சொல்றாரு. என்னோட பேசிக் மாடல் மொபைல பார்த்திட்டு சித்தப்பா என்னடா ஒரு ஆப்பிள் வெச்சிக்க வேணாமா? நீயெல்லாம் என்ன ஐ.டி இன்ஜினியறோ!ன்னு கேட்கிறார். நாம ஏதோ ஆகாசத்த பிச்சுகிட்டு சம்பளம் வாங்குற மாதிரி இந்த சமூகம் நம்மள பார்க்குது. என் வாழ்க்கையை நான் எப்படி இவங்களுக்காக வாழ முடியும்?"
"சரி எதுக்கு இவ்ளோ சூடாகரீங்க? ஒரு கல்யாணத்தை பண்ணி செட்டில் ஆக வேண்டியது தானே?"
"அது ஒண்ணு தான் குறைச்சல் எனக்கு. இன்னிக்கு என் தங்கச்சி கையை புடிச்சு அழறா! காத்தால ஒன்பது மணிக்கு அவ வீட்டுலேந்து கிளம்பினா வீட்டுக்கு போக நைட் ஒன்பது மணி ஆகுது. குழந்தைக்கு காய்ச்சலாம், ரொம்ப கொதிக்கிறதிங்குறா? 'அப்பத்தாவ பார்த்துக்க சொல்லிட்டு இங்க கிளம்பி வந்திட்டேன், வேலையை விட்டுடறேன்னு சொன்னா அவர் கேட்க மாட்டேங்குராறு நீங்க அவருக்கு சொல்லி புரிய வைங்கன்னு' சொல்றா. நான் மச்சான் கிட்ட சொன்னா 'சென்னை விலைவாசி ஜாஸ்தியா இருக்கு ரெண்டு பேர் வேலை பார்த்தாதானே மச்சான் நல்லா காசு சேர்த்து நாளைக்கு பையனுக்கு நல்ல வாழ்க்கை உண்டாக்கித் தர முடியும்னு' சொல்றாரு.
இத்தனைக்கும் அவருக்கு ஊர்ல நல்லா சொத்து இருக்கு. ஆனாலும் கேட்டா அப்பா சேர்த்தது, நானா சொந்தமா என் பையனுக்கு சேர்த்து வைக்கணும்னு சொல்றாரு.
இதே மாதிரி ஒவ்வொரு பையனும் அப்பா சேர்த்து வெச்சது வேண்டாம் நாம தனியா சேர்த்து வைக்கனும்னு நெனச்சா அப்போ ஒவ்வொரு அப்பாவும் எதுக்கு சேர்க்கணும்? எல்லாத்தையும் செலவு பண்ணிட்டு ஜாலியா இருக்கலாமே! இவங்க குழந்தையை நல்லபடியா வளர்கணும்னு மறந்திடறாங்க சும்மா காசு சேர்க்கணும், காசு சேர்க்கணும்னு மட்டும் அலையறாங்க. என் வாழ்க்கைக்கே என்ன தேவைன்னு என்னால இப்போ உணர முடியல, இதுல ஒரு கல்யாணம் பண்ணி என் பையனுக்கு இது தேவைப்படும்ன்னு நான் எப்படி சொல்ல முடியும்? அதுக்கு தான்பா எனக்கு இந்த கல்யாணமே வேணாங்குறேன்னு சொல்றேன்."
வணிகமயமாக்கப்படும் அன்பு:
பட்டர்ப்ளை எபக்ட், கேயாஸ் தியரி என்றெல்லாம் கூறுவார்கள் உலகத்தில். ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்வின் தாக்கம் வேறொரு இடத்தில் கண்டிப்பாக உணரப்படும் என்பது தான் அதன் சாராம்சம். இப்போது கூறப்படும் ஒரு கதையும் நிகழ்வுகள் முன்கூறிய கதையின் தொடர்ச்சியாக நிகழ்வில் அமைய வாய்ப்புண்டு.
ஐ.டி நிறுவனத்திலே பத்து வருடங்களாக வேலைப் பார்ப்பவர் இவர். ஐ.டியிலே ஒரு பெண்ணை காதலித்து மணமுடித்த இவரின் வாழ்க்கையும் ஏறத்தாழ முன் கூறிய கதையுடன் ஒத்துப்போகும். குழந்தைக்கு நிறைய காசு சேர்க்க வேண்டும் என்று இவரின் மனைவியும் அலைந்து ஆன்சைட் வாய்ப்பினை பிடித்து வெளிநாட்டிற்கு சென்று விட்டார். தினமும் இவ்விருவர் ஆன்லைனில் ஸ்கைப்பினில் பேசுவதுண்டு. டேய் ஒரு முறை அம்மாக்கு ஹாய் சொல்லுடா? இங்க பாரு டா? என்று தினமும் இவர் மனைவி தன் மகனிடம் குழைகிறாராம். ஆனால் இதற்கெல்லாம் செவி சாய்க்காமல் அந்த ஐந்து வயது சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே இருக்கிறானாம்.
'டேய் அம்மா உனக்கு என்னெல்லாம் வாங்கிருக்கேன்னு பாரு டா' என்றார் இவர் மனைவி. உடனே அடித்து பிடித்து லாப்டாப் முன் அமர்ந்தான் அச்சிறுவன். இப்போதெல்லாம் குழந்தைகள் எவ்வளவு கமர்ஷியலைஸ்ட் ஆகிட்டாங்கன்னு பார்த்தீங்களா? என்கிறார் அவர்.
இது யார் தவறு? அக்குழந்தையின் தவறா? பணம் சேர்ப்பது மட்டும் தான் கடமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் இதைப்போன்ற பெற்றோர்கள் நாளை சமுதாயத்தில் தன் மகன் எத்தகு குடிமகனாக வருவான் என்று யோசித்து பார்த்திடாமல் பணம் பின்பு மட்டும் ஓடுவதே இதற்கு காரணம். சரி, இத்தனை நாட்கள் தாத்தா பாட்டி இருக்கும் தைரியத்தில் குழந்தையை அவர்களிடம் விட்டுவிட்டீர்கள் நாளைக்கு உங்களுக்கு வயதாகும் போது குழந்தைகள் உங்களினும் பிசியாக இருப்பார்களே அப்போது அவர்கள் உங்களை எங்கே விடுவார்கள் என்று யோசித்து பார்த்தீர்களா?
காலியான பேருந்தில் இரவில் பயணம் செய்யும்போது இந்த அனுபங்கள் எல்லாம் மனதிற்குள் புகுந்து 'எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்' என்ற சேது பாடலை செவிகளில் ஒலிக்கச் செய்கிறது.

Sunday, June 22, 2014

அற்புத ஆன்மிக பயணம் - அய்யர் மலை

ராகு - கேது பெயர்ச்சியின் பொழுது நண்பரின் அழைப்பின் பேரில் கரூர் நகரின் குளித்தலை அருகில் உள்ள அய்யர் மலை (ஐவர் மலை) வாட்போக்கி நாதரை தரிசிக்கும் பேறு பெற்றேன். 1017 செங்குத்தான படிகளை ஏறி பல குரங்குகளின் சேட்டைகளால் குடிக்க நீரின்றி கூட மனம் முழுவது மகிழ மகிழ மலையேறி தரிசித்தேன். சில படங்கள் உங்கள் பார்வைக்காக.....





Sunday, June 8, 2014

Friday, May 30, 2014

திருவிழாக்காலம் - திருவிழாக்கோலம்

கரூர் புதுக்காளியம்மன் கோவிலுக்கு காவிரி தீர்த்தம் செல்லும் வழியில் வரவேற்பு விழா - கலை நிகழ்ச்சிகள்


Saturday, May 17, 2014

அள்ளியது அ.இ.அ.தி.மு.க லேடி – பிரதமராகிறார் மோடி




கடந்த சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் தனி மெஜாரிட்டியாக ஜெயலலிதாவை அமர வைத்து அழகு பார்த்தனர். மீண்டும் தனது ஆளுமையை நிருபித்த அவர் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு யாதொரு இடமும் அளிக்காமலேயே 39க்கு 37 என துடைத்து எடுத்துவிட்டார். இந்திய அளவில் மூன்றாவது பெரிய (அதிக எம்பிக்கள்) கட்சியாகவும் உருவெடுத்தது அதிமுக. முதலிடத்தில் பாஜகவும் இரண்டாம் இடத்தில் காங்கிரசும் இருக்கின்றன. ஆனால் மத்தியில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துவிட்டதால் யாதொரு கட்சியின் ஆதரவு இன்றியே பிரதமராகும் வாய்ப்பினை பெற்றுள்ளது. இது அதிமுகவிற்கு பெறும் ஏமாற்றத்தினை அளித்திருக்கும். ஏனெனில் மத்திய அமைச்சரவையில் இடம் என்பது கடைசிவரை அ.இ.அ.தி.மு.க விற்கு வாய்க்கவே மாட்டேன் என்கிறது. 37 உருப்பினர்கள் இருந்தாலும் அனைவருமே வெறும் உறுப்பினர்கள் என்ற நிலைதான். மீண்டும் கடிதம் எழுதியே காரியம் ஆற்றவேண்டிய நிலையில் தான் உள்ளது அ.இ.அ.தி.மு.க.

இந்த முறை தமிழகத்தினை பொறுத்தவரை காங்கிரசிற்கு இடம் கிடைக்காது என அனைவருமே கிட்டத்தட்ட எண்ணியிருந்ததால் பெரிய அளவில் யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் போட்டியிட்ட 40 இடங்களில் ஒரு இடம் தவிர அனைத்து இடங்களிலும் டெபாசிட் கூட பெறவில்லை என்பது உண்மையிலேயே அதிர்ச்சிதான். நாடாண்ட கட்சி கிழிந்து தொங்குவது காண சகிக்கவில்லை.

திமுகவின் நிலையும் சற்றேறக்குறைய அதே நிலைதான். இருப்பினும் சில இடங்களில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது கவனிக்கவேண்டிய ஒன்று. தேமுதிக நிலை சிறிது பரிதாபம்தான் என்றாலும் குறிப்பிடத்தக்க ஓட்டு வங்கி உள்ள கட்சி என மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. சேலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுதீஷ் இரண்டு லட்சம் ஓட்டுக்கள் வாங்கி இருந்தாலும் 3ம் இடத்திற்கே தள்ளப்பட்டார். பாமகவின் அன்புமணி ஆரம்பம் முதலே தருமபுரி தொகுதியில் முண்ணனியில் இருந்து வெற்றியும் பெற்றுள்ளார். இவர் தவிர பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் மூண்றேமுக்கால் இலட்சம் ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இங்கு இவருக்கு அடுத்து வந்த காங்கிரஸின் வசந்தகுமார் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். இங்கு மட்டுமே டெபாசிட் தப்பித்தது. சில தொகுதிகளில் காங்கிரசிற்கும் நோட்டாவிற்கும்தான் போட்டியே இருந்தது.

கரூரை பொறுத்தவரை ஆரம்ப பிரச்சார நேரத்தில் திமுகவின் வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தாலும் அம்மா வந்து பிரச்சாரம் செய்து திரும்பிய பிறகு அ.இ.அ.தி.மு.க வின் வண்டி வேகமெடுத்துவிட்டது. கடைசிவரை அவர்களது வேகத்திற்கு எவராலும் ஈடு கொடுக்க முடியவில்லை. இங்கு பதிவானது 10,43,909 வாக்குகள். இதில் அ.இ.அ.தி.மு.க வின் தம்பித்துரை 540722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக திமுகவின் சின்னச்சாமி 345475 வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவதாக தேமுதிகவின் கிருஷ்ணன் 76560 வாக்குகளும் காங்கிரசின் ஜோதிமணி 30459 வாக்குகளும் ஆம் ஆத்மி சார்பில் வளையாபதி 2440 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவில் 13763 வாக்களித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட மதுரைவீரன் 5694 வாக்குகள் பெற்று ஆம் ஆத்மியை விட முன்னிலை பெற்றுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய சென்னை மாறன் 46170 வாக்குகள் வித்தியாசத்திலும் விருதுநகரில் வைகோ 145551 வாக்குகள் வித்தியாசத்திலும் அ.இ.அ.தி.மு.க விடம் தோல்வி அடைந்துள்ளனர். புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரசின் ராதாகிருஷ்ணன் தனக்கு அடுத்தபடியாக வந்த நாராயணசாமியை 60854 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து விட்டார். இங்கும் அ.இ.அ.தி.மு.க 3வது இடத்தில் 132657 வாக்குகள் பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. இங்கு நோட்டா ஓட்டுக்களை விட பாமக வெறும் 500 ஓட்டுக்கள் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளது.

ஆலந்தூர் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்று தனது பலத்தினை சட்டசபையில் அதிகரித்துள்ளது. இங்கு தேமுதிக இம்முறை 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

திமுக முன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட தொகுதிகள்:
  • தர்மபுரி
  • ஈரோடு
  • திருப்பூர்
  • கோயம்புத்தூர்
  • பொள்ளாச்சி
  • விருதுநகர்
  • கன்னியாகுமரி (4ம் இடம்)
  • புதுச்சேரி (4ம் இடம்)

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை தேமுதிக பெற்ற தொகுதிகள்:
  • திருவள்ளூர் (2 இலட்சத்திற்கும் அதிகம்)
  • மத்திய சென்னை
  • விழுப்புரம் (2 இலட்சத்திற்கும் அதிகம்)
  • கள்ளக்குறிச்சி
  • சேலம் (2 இலட்சத்திற்கும் அதிகம்)
  • நாமக்கல்
  • திருப்பூர் (2.5 இலட்சத்திற்கும் அதிகம்)
  • கடலூர்
  • திருநெல்வேலி

50000 வாக்குகளுக்கு மேல் காங்கிரஸ் பெற்ற தொகுதிகள்

  • அரக்கோணம்
  • கோயம்புத்தூர்
  • திருச்சிராப்பள்ளி
  • மயிலாடுதுறை
  • சிவகங்கை (கார்த்தி சிதம்பரம்)
  • தேனி
  • இராமநாதபுரம் (திருநாவுக்கரசர்)
  • தூத்துக்குடி
  • தென்காசி
  • திருநெல்வேலி
  • கன்னியாகுமரி (வசந்தகுமார்)
  • புதுச்சேரி (நாராயணசாமி)

நோட்டாவும் – காங்கிரசும் மோதிய தொகுதிகள்
  • வட சென்னை – 18265 (நோட்டா – 17446)
  • மத்திய சென்னை – 26009 (நோட்டா – 21982)
  • ஸ்ரீபெரும்புதூர் – 39015 (நோட்டா – 27676)
  • தர்மபுரி – 15450 (நோட்டா – 12681)
  • நாமக்கல் – 19800 (நோட்டா – 16002)
  • நீலகிரி – 37702 (நோட்டா – 46559) – நோட்டாவிடம் காங்கிரஸ் தோல்வி
  • ஆலந்தூர் சட்டசபை – 6535 (நோட்டா – 4248)

ஒரு சில வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் வென்று ஆண்ட தொகுதியில் நீலகிரி முக்கியமானது. அங்கு நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தத்தில் இந்த தேர்தலில் தமிழகத்தினை பொறுத்தவரை ஒரு இடத்தில் மட்டுமே வென்றிருந்தாலும் இந்திய அளவில் கொண்டாடிக்கொண்டிருப்பது பாஜக மட்டுமே. பெருத்த வெற்றி எனினும் அமைச்சரவையில் பங்கேற்க இயலாமல் போனது அ.இ.அ.தி.மு.க.

மிகவும் கவனத்தில் கொள்ளப்பட்ட மதிமுக குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றிருந்தாலும் 3ம் இடத்திற்கே தள்ளப்பட்டது சோகம். இனி தனியாக காங்கிரஸ் பயணம் செய்வதென்பது தமிழகத்தில் தற்கொலைக்கு சமம். தேமுதிக விழித்துக்கொள்ளவேண்டிய தருணம் இது. திமுக விற்கு இன்னும் கதவுகள் மூடப்படவில்லை என்பது பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தை தக்க வைத்திருப்பதில் இருந்து தெரிகிறது.


வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வார்களா என்பது இன்னும் சிறிது மாதங்களில் தெரிந்துவிடும். நம்புவோம். அதுதானே எல்லாம். 

Wednesday, May 7, 2014

அக்கினியில் மழை


வருடம் தோறும் இந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நம்மில் பலர் புலம்புவது வெயிலின் கொடுமையைத்தான். இந்த ஆண்டும் விதி விலக்கில்லாமல் வெயில் பின்னி எடுத்துவிட்டது. கரூரில் 105 டிகிரி என உச்சம் தொட்டது. அக்கினி நட்சத்திரத்தினை எண்ணிப்பார்க்கையில் கண்ணில் நீரே வந்துவிட்டது.

ஆனால் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலையினால் வந்த கரு மேகங்களின் கூட்டம் கன மழையை அளித்து மண்ணை குளிர்வித்தது. மழை வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு பளீர் என இருந்த வானத்தை மேகக்கூட்டம் கவர்ந்ததை புகைப்படம் எடுத்தேன். இந்த மேகத்தினை பார்க்கும்போது எப்படி மழை பொழிந்திருக்கும் என உங்கள் கற்பனைக்கு விட்டுவிட்டேன்.


வாழ்க மழை. நீரின்றி அமையாது உலகு. வருணபகவானுக்கு நன்றி.

Saturday, April 19, 2014

அறிவோம் ஆன்மீகம் - மந்திரத்தின் பலம்

நாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்;
நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு முறை ஒரு மந்திரத்தை ஜபித்தால்,1000 முறை ஜபித்ததற்கான பலன்கள் கிடைக்கும்;
மலை மேலே இருக்கும் ஒரு கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,1,00,00,000 தடவை ஜபித்தபலன்கள் நம்மை வந்து சேரும்;
கடலோரக்கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,2,00,00,000 தடவை ஜபித்ததற்குரிய மந்திர ஜபசக்தி நமக்கு உருவாகும்;
இந்த எண்ணிக்கை சாதாரண நாட்களில்,ஜபித்தால் கிடைக்கும் எண்ணிக்கை ஆகும்.இதே மந்திரஜபத்தை தமிழ் வருடப்பிறப்பு,தமிழ்மாதப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,கிரகண நாட்களில் ஜபித்தால்,மேலே கூறிய எண்ணிக்கையோடு 100 கோடி மடங்கு பலன்களாக நம்மை வந்து  சேரும்.
எந்த ஒரு மந்திரத்தையும் நாம் 1,00,000 தடவை ஜபித்தபின்னரே,அந்த மந்திரத்துக்கு உயிர் உண்டாகி,நம்மை பாதுகாக்கத் துவங்கும்;ஆனால்,நாம் ஓம்சிவசக்திஓம் மந்திரஜபம் மட்டும் 10,000 தடவைகளுக்கு ஜபித்துவிட்டாலே,ஓம்சிவசக்திஓம் நம்மை பாதுகாக்கத் துவங்கும்;1,00,000 தடவை ஓம்சிவசக்திஓம் ஜபிக்கும்வரையிலும்,நமக்கு ஓம்சிவசக்திஓம் ஜபிக்கமுடியாத அளவுக்கு பல தடைகள் வரத்தான் செய்யும்;நமது மன உறுதியாலும்,குருபக்தியாலும்,சிவபெருமானாகிய அண்ணாமலையாரின் மீதான பாசத்தாலும் அந்த தடைகளை முறியடித்து,ஓம்சிவசக்திஓம் ஜபத்தை ஒரு லட்சம் தடவை வரை ஜபித்துமுடித்துவிட வேண்டும்;அதன் பிறகு ஒரு நாளுக்கு 108 முறை அல்லது 15 நிமிடம் வரையிலும் ஓம்சிவசக்திஓம் ஜபித்துவருவது நல்லது & அவசியம்.இப்படி தினமும் 108 முறை வீதம் நமது ஆயுள் முழுவதும் ஒரு நாள்கூட விடாமல் ஓம்சிவசக்திஓம் ஜபித்துவர வேண்டும்.

Saturday, March 29, 2014

குக்கூ - நல்ல படம்


நல்ல படம் வந்தால் கண்டிப்பாக எல்லாருக்கும் சொல்லனும். இந்த படம் ரொம்ப நல்ல படம். தேசிய விருதுகளுக்கு தகுதியான படம். படத்தில் நாயகனும் நாயகியும் கண் தெரியாதவர்களாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை யாரேனும் நமக்கு சொன்னால்தான் அவர்கள் பார்வையுள்ளவர்கள் என நாம் உணர்கிறோம். அந்த அளவிற்கு சிறந்த நடிப்பினை வெளிக்கொணர்ந்துள்ளனர்.

மொத்தத்தில் பார்வையற்றவர்களின் பார்வையில் விரியும் காதல் கதையினை பார்க்கும் வண்ணம் நமக்களித்த இயக்குனருக்கும் அந்த படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நடிக நடிகைகளுக்கும் பாராட்டுக்கள்.

சீக்கிரம் இந்த படத்தை தியேட்டரில் பார்த்துவிடுங்கள். காலம் தவறி டிவியில் பார்த்தால் அதன் தரம் உணர இயலாது.

Tuesday, March 18, 2014

ஜய வருடம் எப்படி இருக்கும்?


ஆற்காடு சீதாராமய்யர் சுத்த வாக்கியப்படி கணிதம் செய்து
கண்டு கீழ்கண்ட பலன்கள் தரப்பட்டுள்ளன.

மங்களகரமான ஜய வருடம் நவக்கிரக ஆதிபத்யங்களில் இராஜா – சந்திரன், மந்திரி – சந்திரன், அர்க்காதிபதி – சூரியன், மேகாதிபதி – சூரியன், ஸஸ்யாதிபதி – குரு, சேனாதிபதி – சூரியன், இரஸாதிபதி – சனி, தான்யாதிபதி – செவ்வாய், நீரஸாதிபதி – புதன், பசு நாயகர் – கோபாலன், வருஷ தேவதை – சாத்தான் (துர் தேவதை) இராஜ கிரகமாகிய உச்சம் பலம் பெற்ற சூரியனுக்கு வர்கோத்திர யோகமும், மூன்று முக்கிய ஆதிபத்தியம் வருவதும் இந்த ஜய வருடம் திங்கள் கிழமை சுக்லபஷம் சதுர்தசி திதி அஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம் வியாகாந்தம் நாமயோகம் வணஜீ நாமகரணம் சித்த யோகம் கூடிய நன்னாளில் காலை 06:05 மணிக்கு இராஜஸ மேஷம் லக்கினத்தில் கன்னி ராசியில் சந்திர ஓரையில் ஜெகத் உலக ஜாதகத்திற்கு சந்திரன் மகா தசை, ராகு புத்தி, செவ்வாய் அந்தரம் நடப்பதும் வர்க்கோத்திர யோகமும் சந்திர மங்கள யோகமும் உலகத்திற்கு ஏழரை ஆண்டு நடப்பதும் மார்கழி மாதம் 01ம் தேதி (16-12-2014) செவ்வாய்கிழமை ஏழரை ஆண்டு சனி ரத்தாவதும், ஆதாயம் 58 விரையம் 37 (19 லாபம்) வாயு மேகம் வருவதும், மழை முக்குருணி 3 மரக்கால் மழையும் மகர சங்கராந்தி புருஷர் ஆண்யானை வாகனம் காஜீ நாமகரணம் மந்தன் என்கிற பெயரால் ஸ்தான சலனமும் புரட்டாசி, பங்குனி மாதங்களில் பாதாளத்தில் இரண்டு சந்திர கிரகணங்கள் பிடித்து விடுவதும், இவ்வாறு கூடிய கிரக சஞ்சார காலங்களில் குழப்ப நிலமையுடன் இந்த ஜய வருடம் பிறக்கிறது.

இதன் பலன் யாதெனில் பருவ காலங்களில் பருவம் தவறி விரைவாக காற்று உற்பத்தி ஆகி இடி மின்னலுடன் மழையும் மேக கர்ஜணையுடன் பச்சை வில் போட்டு மழையும் பொழியும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஏற்றமும் நிலக்கரி பற்றாகுறையும் உண்டாகும். இனிப்புகள், தங்கம், செம்பு, இரும்பு விலை ஏற்றம் கடுமையாக இருக்கும். அரசாங்க வருமானம் உயரும். எல்லையில் கண்காணிப்பு அதிகரிக்கும். புரட்டாசியில் ஏற்படும் கிரகணங்களால் கடல்களில் விபத்துகள் நேரும். நீர் தேக்கங்கள் பாதிப்படையும். கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புகள் பெறும். சூரியனின் புயல் கதிர் வீச்சுகளால் விமான சேவைகள் பல நாடுகளில் பாதிப்படையும்.

பங்குனி முதல் சித்திரை வரை தென்கோடு உயர ஆலங்கட்டி மழை அயல் நாடுகளில் பெய்யும். விவசாய நிலங்களில் உள்ள எலிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விளைச்சல் பெறுகும். நல்ல மழைப்பொழிவு இருக்கும். ஆடி மாதத்தில் கிழக்கே இந்திரவில் போடுவதால் கலகம் உண்டாகும். ஆவணி 8, 9 தேதிகளில் வானம் குமுறுதலும் மாலை வேளையில் சீக்கிரம் இருட்டாவதும் வானம் மந்தமாகவும் இருக்கும். இந்த ஆண்டு எந்த வேலையும் திங்கள் கிழமை செய்வது நலம் தரும்.

உலக அளவில் ஏழரை சனி என்பதால் பல இடங்களில் பிரளயங்கள் ஏற்படலாம். விமான சேவைகள் அடிக்கடி பாதிப்பிற்கு உள்ளாகும். பறவைகளாலும் தொந்தரவுகள் ஏற்படும்.

சித்திரை அக்னி நட்சத்திர தோஷ வேளைகளில் ஈசல், எறும்பு கூட்டம் கூடுதல், தவளைகள் கத்துதல், பூச்சிகளின் ரீங்காரம், கடல் நீர் மட்டம் உள்வாங்குதல், மழை இருக்கும். மத்தியில் அரசாங்கத்தில் புதிய மாற்றங்கள் வரும். மாநில ஆட்சியில் குழப்பங்கள் இருக்காது. தங்கம், வெள்ளி, செம்பு, மின்சாரம், அலுமினியம், கார் விலை அதிகரிக்கும். மணல் பிரச்சனை தீரும்.

இந்த ஆண்டு 15 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி 2 பலகீனம் அடையும். ஏனையவை பலம் பெற்று தமிழகத்தில் மழை பொழிவை ஏற்படுத்தும். தென்னை விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு தேங்காய் விலை உயரும். அரசாங்க வரி வருவாய் அதிகரிக்கும். குதிரை விலை குறையும். நூல், பஞ்சு, ரப்பர், அச்சு இயந்திரங்கள், புல்டோசர் விலை குறையும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். புளி, இனிப்புகள் விலை ஏறி இறங்கும். நெல், அரிசி, கோதுமை, மஞ்சள் விலை ஏறும். விளையாட்டு வீரர்கள், சினிமா துறையினருக்கு லாபங்கள் அதிகரிக்கும். பூண்டு, வெங்காயம் விலை குறையும். மஞ்சள் வியாபாரத்திற்கு அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டு வரும். இது நிலையில்லா வியாபாரமாக இருக்கும். எண்ணை வித்துகள், கொப்பரை விலை ஏறும். முட்டை வியாபாரம் பாதிக்கும். அக்டோபர் கடைசி வாரத்தில் இருந்து நவம்பர் முதல் வாரம் வரை வடக்கு வடகிழக்கில் நல்ல மழை இருக்கும்.

இந்த ஆண்டில் வரும் பெயர்ச்சிகள்:

குரு ஜய ஆண்டு வைகாசி மாதம் 30ம் தேதி (13-06-2014) வெள்ளிக்கிழமை மாலை மணி 06:03க்கு புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். பின் கார்த்திகை மாதம் 17ம் தேதி (03-12-2014) புதன் கிழமை மாலை 05:10க்கு மகம் நட்சத்திரம் 1ம் பாதம் சிம்ம இராசிக்கு அதிசார பலம் பெற்று பெயர்ச்சி அடைகிறார். பின் மார்கழி மாதம் 07ம் தேதி (22-12-2014) திங்கள் கிழமை பகல் 12:19க்கு ஆயில்யம் 4ம் பாதம் கடக ராசிக்கு வக்ரம் அடைந்து பெயர்ச்சி அடைகிறார்.

சனி ஜய ஆண்டு மார்கழி மாதம் 01ம் தேதி (16-12-2014) செவ்வாய்கிழமை பகல் 02:17க்கு விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக இராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ராகு ஆனி மாதம் 07ம் தேதி (21-06-2014) சனிக்கிழமை பகல் 11:18க்கு சித்திரை நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி இராசிக்கும், கேது பகவான் அதே நாள் அதே நேரத்தில் ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீனம் ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.

கந்தாய பலன்களின் அடிப்படையில் அஸ்வினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், ஸ்வாதி, விசாகம், மூலம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதிக்கு வருடம் முழுவதும் உத்தம பலன்களாகும். பரணி, பூரம், சித்திரை, அனுசம், பூராடம், உத்திரட்டாதிக்கு இரண்டாம் நான்கு மாதங்கள் (ஆவணி – கார்த்திகை வரை) மத்திம பலன்கள் ஆகும். ஏனைய மாதங்கள் உத்தம பலன்கள் ஆகும். உத்திராடத்திற்கு சித்திரை முதல் ஆடி வரை மத்திம பலன் ஏற்பட்டு பின் உத்தமமாகும். மிருகசீரிஷம், பூசம், ஹஸ்தம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களுக்கு வருடம் முழுவது சற்றேறக்குறைய மத்திம பலன்களே கிட்டும். இருப்பினும் அவிட்டம் முதல் நான்கு மாதங்கள் நன்றாக இருக்கும். ஹஸ்தம் இரண்டாம் நான்கு மாதங்கள் நன்று என அறியவும்.


Monday, March 10, 2014

வியக்க வைக்கும் வீரப்பூர் - வேடபரி - குதிரைத்தேர்

வணக்கம்

இந்த ஆண்டும் சிறந்த முறையில் அண்ணன்மார் அன்னதானக்குழு சார்பில் வீரப்பூரில் வேடபரி தினமான சனிக்கிழமை அன்று பக்தர்களுக்கு அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. 20 ஆண்டுகளாக இந்த திருப்பணி பக்தர்களுக்கு பயனளிக்கும் வண்ணம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மகாமுனீஸ்வரர்






கலர் கலர் இனிப்புகள்

பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

Thursday, February 27, 2014

மாற்றங்கள் நிகழ்ந்த நகரம் – கரூர்


கரூர் ஒரு தொழில் நகரம். இங்கிருக்கும் முக்கால்வாசி மக்களும் ஜவுளி, கொசுவலை உற்பத்தி, பஸ் கட்டுமானம் போன்ற தொழிலில் சார்ந்தே வாழ்கின்றனர். இந்த தொழில் நன்றாக இருந்தால்தான் ஹோட்டல் போன்ற இதனை சார்ந்த தொழில்களும் நன்றாக இருக்கும். ஆனால் இந்த நகரத்திற்கென பல பிரச்சனைகள் இருந்துகொண்டே இருந்தன.

திருச்சியில் இருந்து கரூருக்கு ரயில் சேவை இருப்பதால் குளித்தலை, பெட்டவாய்த்தலை, லாலாபேட்டை, மாயனூர் போன்ற சிறு நகரத்து மக்களும் தினசரி கரூர் வந்து வேலை பார்த்து பிழைக்கின்றனர். ஆனால் கரூரில் இருந்து திண்டுக்கல் மார்க்கத்தில் ரயில் சேவை இருந்தும் பயணிகள் ரயில் இல்லாததால் பேருந்தை நம்பியே வாழ்க்கை ஓடுகிறது. கோவைக்கு ரயிலில் போவதாக இருந்தால் ஈரோடு, திருப்பூர் வழிதான். வெள்ளகோவில் மற்றும் காங்கயத்திற்கென தண்டவாளமே இல்லை. சேலத்துக்கு தனி வழி இன்றி ஈரோடு வழியாகவே இயங்கி வந்த ரயில் சேவை தற்சமயம் தனி வழியாக (நாமக்கல் வழி) இருப்பு பாதை பல வருட கிடப்பில் இருந்து தற்சமயம் துரிதப்படுத்தப்பட்டு சேவையும் துவங்கப்பட்டுள்ளது. விளைவு யாதெனில் கரூருக்கு கூடுதலாக ஒரு ரயில் கிடைத்தது. பழனியிலிருந்து சென்னை செண்ட்ரலுக்கு சேலம் வழியாக தினசரி விரைவு ரயில் கிடைத்தது. இது நாள் வரை சென்னைக்கு செல்லவேண்டுமெனில் இரவில் வரும் மங்களூர் வண்டிதான் அதுவும் எக்மோர் வரைதான். இந்த புதிய பாதை பிற்காலங்களில் கரூருக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதென்னவோ உண்மை.

சாலை வசதிகளும் சமீப காலங்களில் நகருக்குள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மண்மங்கலம் என்னும் புதிய தாலுக்கா பிரிக்கப்பட்டுள்ளது. நகரின் பேருந்து நிலையம் கவலைக்கிடமாக இருந்த நிலையில் முற்றிலும் செப்பனிடப்பட்டு புதிய முறையில் தயாராகி வருகிறது. மேலும் விளையாட்டு அரங்கம் (ஸ்டேடியம்) பூங்கா என நகரின் பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பசுபதி பாளையம் செல்ல இருந்த ஒரே ஒரு தரைப்பாலம் தற்சமயம் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு வரை மின்வெட்டு என்பது அனைத்து தொழில் அமைப்புகளயும் பாதித்திருந்த நிலையில் தற்சமயம் மின்வெட்டு இல்லாத நிலை நிலவி வருகிறது. இது சிறு குறு தொழில்களை காப்பாற்றி வருகிறது.

மேலும் இதுபோன்ற நற்பணிகள் தொடர வேண்டும் என நம்பிக்கையாக உள்ளது.



Thursday, February 6, 2014

நாய்

கடந்த பொங்கல் அன்று இரவில் வித்யாசமாக ஒரு சத்தம் வரவே வெளியில் சென்று பார்த்தேன். அப்பொழுது கருப்பும் பழுப்புமாக இரண்டு நாய்க்குட்டிகள் பனி / பசி தாங்காமல் கத்திக்கொண்டிருந்தன. பிறந்து சில நாட்களே ஆகி இருந்த சூழ் நிலையில் பெண் குட்டிகள் என்பதால் யாரோ வளர்க்க சங்கடப்பட்டு தெருவில் விட்டு விட்டனர். பாவமாக இருந்ததால் அந்த குட்டிகளுக்கு அந்த நேரத்தில் சிறிது பாலை ஒரு டப்பாவில் வைத்து கொடுத்தேன். குடித்த இரு குட்டிகளும் வீட்டு வாசலிலேயே படுத்துக்கொண்டு விட்டன.

அடுத்த நாளில் இருந்து அந்த இரு குட்டிகளும் தெருவில் உள்ள குழந்தைகளின் செல்லப்பிராணிகளாயின. பிஸ்கட், பிரட், பால் என ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குழந்தைகளால் கொடுக்கப்பட்டு கொழு கொழுவென வளர துவங்கின. இதில் கருப்பு நாய் (ப்ளாக்கி) நாட்டு நாய் ஆகும். பழுப்பு நாயான பிரவுனி ஏதோ ஜாதி நாயின் வழித்தோன்றல். தெருவில் இருந்த ஒரே ஒரு நபர் மட்டும், இது பெட்டை நாய்கள். எனவே வளர்ப்பதில் சிரமங்கள் இருக்கின்றன. கடுவனாக இருந்தால் நன்றாக வளர்க்கலாம். எங்காவது கொண்டு சென்று விட்டு விடுங்கள் என்றார்.



ஆனால் வீட்டிற்கு வந்த வெளி நண்பர்களில் சிலர் நாயின் கால் நகங்களை பார்த்துவிட்டு இது அதிர்ஷ்டம் என்றும் மேலும் இது தானாக வந்துள்ளன. எனவே வளருங்கள் என்றனர். அதிலும் ஒரு நண்பர் இப்படி வரும் நாய்களை எங்காவது கொண்டு சென்று விட்டால் நமது வீட்டில் செல்வம் குறையும் என்று கூட பயமுறுத்தி விட்டார். நான் படிக்கிற காலத்தில் என் குருநாதர் ஒரு முறை சொன்னது என் நியாபகத்தில் வந்தது. அது என்னவெனில் போன ஜென்மத்தில் நமக்கு யாரேனும் துரோகம் விளைவித்திருந்தால் அவர்கள் மறு ஜென்மத்தில் நாயாக பிறந்து விசுவாசமாக இருந்து கடனை கழிக்கும் என்று. அது போல ஒரு ஜென்ம தொடர்போ என என்னை சிந்திக்க வைத்தது. எது எப்படியோ சிவராத்திரி முடிந்து விட்டால் குளிர் பனி இருக்காது. அதற்கப்புறம் இதை வளர்க்கலாமா அல்லது எங்காவது உணவுகள் கிடைக்கும் இடத்தில் (கோவில் மாதிரி) விட்டு விடலாமா என்பதை முடிவெடுக்கலாம் என்று விட்டுவிட்டேன். இதற்கிடையில் அந்த குட்டிகள் மிகுந்த பாசத்துடன் எனது அன்னையுடன் வாக்கிங், எங்களுடன் விளையாட்டு என நன்கு ஒட்டிக்கொண்டது. பக்கத்து வீட்டுக்காரரும் ஒரு பாதுகாப்பிற்காக இதனை வீதியிலேயே இருக்கும்படி வளர்க்கலாம் என்றார்.

இந்த சூழ் நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு மணி சுமார் 2 அளவில் திடீரென்று இரு குட்டிகளும் குரைக்க தொடங்கிவிட்டன. எனக்கு உடன் முழிப்பும் தட்டிவிட்டது. எனினும் ஏதேனும் எலி, பூனையை பார்த்திருக்கும் என சமாதானமாகி தூங்க எத்தனித்த வேளையில் ஒரு குட்டி குரைப்பது நின்றுவிட்டது. மனதில் ஏதோ பட வெளியில் வந்து பார்த்தால் பிரவுனியை காணவில்லை. ப்ளாக்கி பயத்துடன் என் காலை பின்னிக்கொள்ள எனக்கு விளங்கியது. யாரோ ஜாதி நாய் என்பதால் அதை மட்டும் லவட்டி விட்டனர் என்று. நேற்றெல்லாம் மனது பிசைய ஆரம்பித்து விட்டது. எனினும் வளர்ப்பதற்கு தானே யாரோ திருடியிருக்கிறார்கள். எனவே நல்ல முறையில் அது வளர்க்கப்பட்டு விடும் என்று நம்பிக்கையானேன்.


எங்கிருந்தாலும் வாழ்க பிரவுனி………… தெரு நாய் என்றால் திரிஷாவிற்கு மட்டும்தான் பாசம் வருமா என்ன?

Monday, January 13, 2014

பொங்கல் நல்வாழ்த்துக்கள்



வலைப்பூவில் வலம் வரும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள். 

Friday, January 3, 2014

பசுவிற்கு உணவளித்தால் வரும் பலன்



பசுவிற்கு உணவளித்தால் வரும் பலன்

திங்கள்தோறும் வாழைப்பழம், புல், அகத்திக்கீரை பசுவிற்கு அளித்தால் தாய் மற்றும் தகப்பன்வழி நமக்கு வந்த தோஷங்கள் நீங்கும்.

செவ்வாய்தோறும் தண்ணீருடன் புல் கொடுத்தால் இடம், நிலம் வீடு அமையும்

புதன் தோறும் பசுவிற்கு புல் கொடுத்துவந்தால் நல்ல வேலை கிடைக்கும்

வியாழன் தோறும் அரிசிக்கஞ்சி அளித்தால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும்

வெள்ளிதோறும் பசுவிற்கு உணவளித்து பூஜை செய்தால் மஹாலட்சுமியின் அருள் கிடைக்கும்

சனிதோறும் அகத்திக்கீரையுடன் புல் மற்றும் தண்ணீர் அளித்தால் இந்த ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் தொலையும்

ஞாயிற்றுக்கிழமை தோறும் பசுவிற்கு உணவளிக்க நல்ல கண் பார்வை கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

அஷ்டமி தோறும் பசுவினை ஒருமுறை வலம் வந்து உணவளித்தால் கொடுத்த கடன் / வாராக்கடன் கிடைக்கும்

துவாதசி தோறும் பசுவிற்கு உணவளிக்க ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிட்டும்.


தினமும் பசுவினை குளிப்பாட்டி பராமரித்து உணவளித்து நோய்களில் இருந்து காத்து கன்றுக்கு அளித்த பால் போக மீதமுள்ள பால் கறந்து தெய்வத்திற்கு அபிஷேகத்திற்கு அளித்து வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் லஷ்மியின் அருள் கிடைக்கும். அதனால்தான் வீட்டில் நம் முன்னோர்கள் பசுவினை காலம் காலமாக வளர்த்து வந்தார்கள். கன்றுக்கு பசிக்கு பால் தராமல் தான் கறந்து பருகினால் மிகப்பெரிய பாவம் என்றும் அந்த பாலினால் அபிஷேகம் செய்தால் பலன்கள் எதுவும் கிட்டாது எனவும் சாஸ்திரம் சொல்கிறது.