Sunday, November 14, 2010

மைனா விமர்சனம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம். ஆனால் நல்ல படங்களுக்கே உண்டான சோகமான முடிவு. என்ன... நாம் முற்றிலும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.

குடித்து குடித்து இறந்து போன அப்பாவால் சின்ன வயதிலேயே குடியிருக்கும் வீடு உள்ளிட்ட சொத்துபத்துகளையும், சொந்தபந்தங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நாயகிக்கும், அவரது அம்மாவிற்கும் அடைக்கலம் கொடுக்கிறான் சிறுவயது ஹீரோ.

பனியாரம் சுட்டு விற்று வயிற்றை கழுவும் நாயகியின் அம்மாவால் நன்றாக படித்தும், நாயகியை படிக்க வைக்க முடுியாத சூழல். அதனால் நாயகியை தானே கூலி வேலையெல்லாம் செய்து படிக்க வைக்கும் நாயகனுக்கு, இனம் புரியாத வயதில் இருந்தே நாயகி மீது காதல்! நாயகிக்கும் நாயகன் மீது அதே ரக காதல்!

இது நாயகியின் அம்மாவிற்கு தெரியவருகிறது.அதுவரை வாய்திறந்து ஹீரோவை மருமகனே.. மருமகனே... என அழைத்து வந்த அவர், அதன் பின் காட்டும் ஆக்ஷனும், ஆக்ரோஷமும், அதற்கு ஹீரோ பண்ணும் ரீயாக்ஷனும், அதனால் எழும் பிரச்னைகளும்தான் மைனா படத்தின் மீதிக்கதை!

இதுவரை மனிதர்களின் காலடி கூட படாத இடங்களில் எல்லாம் கேமரா பயணப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் யாருமே நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு நண்பனின் ஊர் போடி மெட்டு. அவனின் ஏரியாவில் இந்த படத்தின் கதை நடக்கிறது. கோவைக்காரர்களுக்கு சற்றிலும் குறையாத குசும்புக்காரர்கள் போடிக்காரர்கள். நையாண்டி அவர்களுக்கு கைவந்த கலை. இந்த படத்திலும் அவர்களது நையாண்டியை நன்கு ரசிக்கலாம். சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் இறுக்கமாக நகரும் கதையை சற்று இயல்பாக்குவதே இவர்கள்.

க்ளைமாக்ஸில் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் அந்த ஜோடிக்கு ஏற்படும் கொடூரம், படம் முடிந்து நீண்ட நேரமாகியும் நம் நெஞ்சை விட்டு நீங்க மறுப்பது படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும் ப்ளஸ் பாயிண்ட்.

மைனாவின் நாயகராக சுருளி எனும் பாத்திரத்தில் தொட்டுப்பார் விதார்த் நம் மனதை தொடுகிறார். காட்டான் மாதிரி தலைமுடியும், தாடி மீசையுமாக இருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சை உலுக்கும் நடிப்பில் ஜூனியர் ராஜ்கிரண் என்று பட்டமே தரலாம் இவருக்கு.

அதுவும் தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் பெற்ற தாய் - தந்தையையே அடிக்க பாயும் இடத்தில் விதார்த் சிறப்பான நடிப்பை விதைத்திருக்கிறார். அதேமாதிரி, விபத்துக்குள்ளான பேருந்தில் தன்னையும், தன் காதலையும் குழி தோண்டி புதைக்க நினைக்கும் சிறைக்காவலர்களை காப்பாற்றும் இடத்திலும் சபாஷ் வாங்கி விடுகிறார் விதார்த்.

மைனாவாகவே வாழ்ந்திருக்கும் அமலா பால், அருமையான நடிப்பால் நம்மை தன்வசப்படுத்தி விடுகிறார். க்ளைமாக்ஸில் அவருக்கு நிகழும் கொடூரம் கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும்.

விதார்த் - அமலா பால் மாதிரியே ஜெயிலர் பாஸ்கராக வரும் சேது, தம்பி ராமையா, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாய் செய்திருக்கிறார்கள். அதிலும் மைனாவின் சாவிற்கு காரணமான தன் மனைவி உள்ளிட்ட சொந்தபந்தங்களை போட்டுத் தள்ளும் ஜெயிலர் பாஸ்கராக வரும் சேதுவும், சுருளியின் அன்பில் உருகிப் போகும் தம்பிராமையாவும் பிரமாதம்.

இந்த மாதிரி படங்களை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு இளையராஜாவிடம் கொடுத்து விட வேண்டும். பின்னி பெடலெடுத்து விடுவார். இமானும் குறைச்சல் இல்லை. ஆனால் மேஸ்ட்ரோவின் கைவண்ணமே தனி. பாடல்கள் நன்கு படமாக்கப்பட்டு இருக்கிறது.

ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல படம்.

எல்லாரும் பாக்கலாம்.

2 comments:

  1. மிக‌வும் அருமையான‌ திரை விமர்ச‌ன‌ம் karthi,....பார்க்க‌வேண்டிய‌ ப‌ட‌ம்

    ReplyDelete