Thursday, December 29, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2012



நண்பர்கள் அனைவருக்கும் இனிய உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2012 ம் ஆண்டில் அனைவரும் அனைத்து நன்மைகளும் கிடைக்கப்பெற்று சுபீட்சமாய் வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

நம்மால் இயன்ற வரை பிறர்க்கு நனமைகள் செய்வோம். முடியாது போனால் துன்பம் செய்யாது இருப்போம்.

Saturday, December 24, 2011

4ம் ஆண்டில் நடை பயில்கிறது

இந்த வலைப்பூ நாளையுடன் நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. 149 பதிவுகளை தாங்கி குறுகிய நண்பர்களின் பின்னூட்டத்துடன் வெற்றி நடை பயில்கிறது.

இந்த வலைப்பூவை பார்த்தவர்கள், பின்னூட்டம் இட்டவர்கள், தொடர்ந்து படித்து வருபவர்கள், நண்பர்களுக்கு பரிந்துரைத்தவர்கள் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இயேசுபிரான் அனைவருக்கும் அமைதியையும் நன்மையையும் அளிப்பாராக... வாழ்க வளமுடன்..!!

Friday, December 23, 2011

முல்லைப் பெரியாறு – என்னதான் தீர்வு?



கடந்த சில நாட்களாக நிறைய ஆணிகள் இருந்ததால் வலைப்பக்கம் வரமுடியவில்லை. ஆதலால் இந்த வலைப்பூவை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்றவர்கள் மன்னிக்கவும்.

விஷயத்திற்கு வருவோம். இன்று கரூர் முழுவதும் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் (டாஸ்மாக், மருந்தகங்கள், மருத்துவமனைகள் நீங்கலாக) அழைப்பு விடுத்து ஒட்டு மொத்தமாக கடையடைப்பு நடத்தி தங்களது ஒன்றுபட்ட கருத்தினை முல்லை பெரியாறு விவகாரத்தில் காண்பித்தனர். முல்லைப் பெரியாறு எங்கிருக்கிறது? அதன் பிரச்சனை என்ன? எதற்காக போராட்டம்? இப்படி யாதொரு கேள்விக்கும் விடை தெரியாத சாமான்ய மக்களும் இந்த கடையடைப்பிற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். எங்கும் சிறிய அசம்பாவிதங்களும் இல்லை.

பத்து நாட்களுக்கு முன்பு கரூரில் மலையாளிகள் நடத்தி வரும் வணிக நிறுவனங்கள், டீக்கடைகளை சில அமைப்பின சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி மூடச்செய்து சங்கடத்தினை ஏற்படுத்திய நிலையில் இந்த பந்த் நடைபெற்றுள்ளது. கரூருக்கும் முல்லைப் பெரியாறுக்கும் சம்பந்தம் இல்லை எனினும் தமிழக மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த பெரியாற்றின் பிரச்சனையை அனேகமாக எல்லா தொலைக்காட்சிகளிலும் அங்குலம் அங்குலமாக விவரித்து விட்ட நிலையில் அதன் விபரத்தினை எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும் சுருங்க சொல்லலாம்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் சமஸ்தானத்தினை ஆண்ட சேதுபதி மன்னர் நாட்டின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு இந்த அணையை கட்ட உத்தேசித்து நிதி நிலமை கைகொடுக்காததால் விட்டுப்போனது. பின்பு வந்த ஆங்கிலேயர்கள் இந்த அணையை கட்ட முடிவு செய்து கடும் முயற்சி எடுத்து நிறைய உயிர்ப்பலிகளுக்கு பின்பு கட்டி முடித்தனர். இதனை கட்டிய பொறியாளர் கடைசியில் தன் கைக்காசை செலவு செய்திருக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது இந்த அணை இரு மாநில எல்லையில் மாட்டிக்கொண்டது. அணையினை தமிழகமே நிர்வகித்துக்கொள்ள இசைந்த கேரளம் அதற்கு 999 வருடங்களுக்குண்டான குத்தகை தொகையை நிர்ணயித்து ஒதுங்கிக்கொண்டது. தண்ணீர் தேவை அவ்வளவாக தேவைப்படாத கேரளம் பிற்காலத்தில் மின்சார தேவைக்காக தமிழகத்துடன் மீண்டும் ஒப்பந்தம் ஒன்றினை போட்டது. அதாவது மின்சாரமும், மீன்பிடி உரிமையை கேட்டுப்பெற்றது. அப்பொழுதும் தண்ணீர் தேவை அவர்களுக்கு இல்லை.

அதன் பிறகு தண்ணீருக்குண்டான தேவைகள் அதிகரித்து இடுக்கி அணையை கட்டிய போது அவர்கள் எதிர்பார்த்த நீர் வரத்து இல்லை. மின்சார தேவை அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனை பெரிதானது. இப்பொழுது இருக்கும் அணையின் தண்ணீரை முழுமையாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அணையை திறந்தால் தண்ணீர் கேரளாவிற்கே செல்லும். நாம் புறவழியாகத்தான் தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுக்கொள்கிறோம். அதாவது அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் சமயம் வழியும் நீரினை வேறு மதகு வழியாக நாம் பெற்று வெவ்வேறு அணைகளில் தேக்கி வைத்து நாம் உபயோக்கித்து வருகிறோம்.

இப்பொழுது கேரளம் சொல்லும் வண்ணம் இருக்கும் அணையை இடித்து விட்டு இன்னும் கீழ் இறங்கி வேறு அணை கட்டினால் அதனால் உயரத்தில் இருக்கும் மதகிற்கு தண்ணீரை மேலேற்ற முடியாது. மேலும் அவர்கள் கட்டும் அணை மின்சார தேவைக்குதான். எனவே அணையின் தண்ணீரை திறந்துவிட்டுக்கொண்டே இருப்பார்கள். நமக்கு வெறும் காற்றுதான் கிடைக்கும். தமிழகத்தில் 5 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். இதுதான் நிலைமை.

இப்பொழுது பிரச்சனை வேறு வடிவத்தில் மாறிக்கொண்டு வருகிறது. இது சபரி மலை சீசன். அங்கு செல்லும் நம்மவர்கள் தாக்கப்படுகிறார்கள். அங்குள்ள தமிழர்கள் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இங்குள்ள மலையாளிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். இது உடனடியாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சனை. ஆனால் மத்திய அரசாங்கம் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. இவ்வளவு பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் தமிழகம் வரவுள்ள பிரதமர் இந்த பக்கமே எட்டிப்பார்க்கப் போவதில்லை. இருக்கும் அணையே பாதுகாப்பாக பலமாக இருக்கிறது என விஷய ஞானம் உள்ளவர்கள் சொல்லிவிட்டார்கள். நீதிமன்றமும் இடிக்க கூடாது என சொல்லிவிட்டது. எனினும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் அரசாங்கங்கள் சப்பைக்கட்டு கட்டி வருகின்றன.

எங்கோ உள்ள மக்களின் பிரச்சனை என பார்க்காமல் நம் சகோதரர்களின் பிரச்சனை என்று இதனை பார்க்க வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பிறகு கரூரில் நடந்துள்ள வெற்றிகரமான பந்த் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. எங்கும் சிறிய அளவில் கூட ஆர்ப்பாட்டங்களோ பிரச்சனைகளோ இல்லை. இன்று மட்டும் கரூர் மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தினால் 500 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இரண்டும் வர்த்தக நகரங்களாகும். இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் இந்த இரு நகரங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.

மொத்தத்தில் பேசித் தீர்க்கப்படவேண்டிய இந்த பிரச்சனையை பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பே இரு மாநிலங்களுக்கும் ஒப்புதல் ஏற்படும் வண்ண தீர்க்கப்படவேண்டும்.

Monday, November 14, 2011

ஷாக் அடிக்கும் மின்சாரம்



நம் பாரத திருநாட்டில் மின்சார தட்டுப்பாடு என்பது எல்லா மாநிலங்களிலும் காணப்பட்டாலும் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை உணரப்படவே இல்லை. காரணம் உபரியான மின் உற்பத்தி தமிழகத்தில் இருந்த்தால்தான். நெய்வேலியும் கல்பாக்கமும் மற்றும் பல புனல், காற்றாலை மின்சாரமும் நம் தேவைக்கு போக பிற மாநிலங்களும் விற்பனை செய்யும் வண்ணம் இருந்தன. குறிப்பாக கேரளம் நம்மை நம்பித்தான் இருந்தார்கள்.

ஆனால் நிலமை இன்று தலைகீழாக இருக்கிறது. காரணம் போதுமான திட்டமிடல் இல்லாமை. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நுகர்வோர்களின் எண்ணிக்கையை மனதில் கொண்டு புது புது திட்டங்களை காலத்தே வகுத்திருந்தால் இன்று கையை பிசையத் தேவை இருந்திருக்காது. ஆளும் கட்சிகளும் ஆண்ட கட்சிகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சொல்லிக்கொண்டார்களே ஒழிய தீர்வு கிடைக்கவே இல்லை. ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் என ஆரம்பித்த இந்த பிரச்சனை 4 ஆண்டுகளில் தினமும் 6 – 7 மணி நேரங்கள் என வந்து நிற்கிறது.

கூடங்குளம் வந்துவிடும்.. உபரி உற்பத்தி கிடைத்துவிடும்... அனைவரும் கவலை கொள்ளத் தேவை இல்லை என நம்பிக்கொண்டிருந்த வேளையில் அதன் பிரச்சினையை இன்று நாடறியும். தினம் ஒரு கூட்டம் அங்கே உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறது. கிட்ட்த்தட்ட 13000 கோடி ரூபாய் பணத்தினை செலவளித்து திறப்பு விழா காணும் நேரத்தில் சோதனைகளை வேதனையுடன் பார்த்து வருகிறது நமது கூடங்குளம் அணு மின்சார நிலையம்.

நிலமைக்கு தீர்வுதான் என்ன? அந்த தீர்வினை யார் எடுப்பது? மக்களின் பிரச்சனை என்ன? அறிஞர்கள் விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? பூனைக்கு மணி கட்டுபவர் யார்? உற்பத்தி என்று தொடங்கும்? பலன் என்று மக்களுக்கு கிடைக்கும்? கேள்விகள் விரிந்து கொண்டே இருக்கிறது.




தெலங்கானா விவகரத்தினால் நமக்கு வரவேண்டிய நிலக்கரி நின்று போய்விட்ட்து. இந்த கஷ்டமான சூழ் நிலையில் இது போன்ற திட்டங்களும் கிடப்பில் விடப்பட்டால் நமது மாநிலம் இருளில் மூழ்கிவிடும். நாட்டை ஆளும் தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியில் இல்லை. தமிழகத்தினை ஆளும் கட்சிகளுக்கு தேசிய செல்வாக்கு இல்லை. சென்ற ஆட்சியில் கிடைத்த செல்வாக்கினை எப்படி பயன் படுத்தினார்கள் என்பது இன்றும் கேள்விக்குறியாக உள்ளது.

மின்சாரம் தட்டுப்பாட்டால் ஜெனரேட்டர்கள் மூலம் வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருவதால் டீசல் இழப்பும் சுற்றுசூழல் மாசும் அடுத்த பிரச்சனைக்கு அடி போடுகிறது. தினம் உயரும் டீசல் விலையால் மின்சார உற்பத்தியின் விலையும் அதிகரித்து அதன் சுமையும் மக்கள் தலையில் விடிகிறது.

எது எப்படியோ நமக்கு மின்சாரம் வேண்டும். பிரச்சனைகளை வளர்க்காமல் போர்க்கால நடவடிக்கைகளை மத்திய மாநில அரசாங்கங்கள் மேற்கொண்டு மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் 10 ஆண்டுகளின் மின் தேவையை கணக்கில் கொண்டு இன்றே திட்டங்களை வகுக்க வேண்டும். தீர்வுகள் காணப்பட வேண்டும். பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும். நம் நாடு வளரும் வல்லரசு என்பது இதில் தான் உள்ளது.

Sunday, October 30, 2011

கொண்டாட்டங்கள் குறைந்துவிட்ட தீபாவளி



தீபாவளி – இந்த வார்த்தையை கேட்டதுமே மனம் என்றுமே இளமைக்காலத்தினை பின்னோக்கி சென்று பார்க்கிறது. எனது பால்ய காலம் முழுவதும் திண்டுக்கல் மாவட்டம் ஆலம்பாடி அஞ்சல் சீதை நகரில் மையம் கொண்டிருந்தது. அப்பா தனியார் சிமெண்ட் ஆலையில் பணியாற்ற பணியாளர் குடியிருப்பில் நண்பர்கள் குழாமாக வாழ்க்கை.

சிறிய வயதில் எந்த ஒரு வேலையும் சரி விளையாட்டும் சரி அவ்வளவு ஏன் அரட்டைக்கு கூட பத்து நபர்களாக சேர்ந்துதான். பொன்வண்டு பிடிக்க, குளத்தில் மீன் பிடிக்க, ஊர் சுற்ற, விளையாட என அனைத்து பணிகளும் கூட்டமாகவே செய்வோம். தீபாவளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அங்கொன்றும் இங்கொன்ற்மாய் பட்டாசு சத்தங்கள் கேட்க ஆரம்பித்துவிடும். தீபாவளி நெருஙக நெருங்க சத்தம் அதிகமாகி விடும். அருகில் இருக்கும் நகரமான கரூரில் ஆடைகள் எல்லாம் வாங்கிய பின் உள்ளூரில் தைக்க கொடுத்து வாங்க 20 நாட்கள் ஆகும். அப்பொழுதெல்லாம் ரெடிமேட் ஆடை கலாச்சாரமே இல்லை. தீபாவளிக்கு முதல் நாள் என் அண்ணன் ஊரிலிருந்து விடுமுறைக்கு வரும்பொழுது கொஞ்சம் பட்டாசுகள் வாங்கி வருவார். அந்த வருகைக்காக நானும் எனது தம்பியும் பஸ் ஸ்டாண்டில் மதிய உணவு முடித்தவுடன் தவமிருக்க ஆரம்பித்து விடுவோம். மாலை 5 மணிக்கு வரும் வண்டியில் அண்ணன் வந்து இறங்கியதும் அவர் கொண்டு வந்த பையை கம்பீரமாக தூக்கிக்கொண்டு காலணிக்குள் செல்வோம். மனம் நிறைய மகிழ்ச்சியாக இருக்கும். அன்று கோடி ரூபாய் பணம் தேவை இருக்க வில்லை இந்த சந்தோசத்தினை பெற.

ஒவ்வொரு நண்பர்களுக்கும் அவர்களது வயதினை ஒத்த குழு இருக்கும். என் அப்பா தரும் ஒரு நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு அண்ணா அருகில் இருக்கும் சிறு நகரமான குஜிலியம்பாறைக்கு பட்டாசு வாங்க செல்வார். வரும் போது ஒரு கூடை நிறைய பட்டாசுகள் இருக்கும். அண்ணன் தம்பி மூவருக்கும் தீபாவளிக்கு முதல் நாள் இரவே பட்டாசுகள் பிரிக்கப்பட்டு விடும். அண்ணனுக்கு ராக்கெட், சரம், அணுகுண்டு என பெரிய வெடிகள். எனக்கு குருவி வெடி, யானைவெடி, டபுள்ஷாட் போன்ற சிறிய வெடிகளும் மத்தாப்புகளும் இருக்கும். தம்பிக்கு வெடியே கிடையாது. மத்தாப்புகளும் துப்பாக்கியும் தான்.



காலை நான்கரை மணிக்கு அப்பா எழுப்பிவிடும் முன்பே எழுந்து எண்ணை தேய்த்து குளிக்க ரெடியாக இருப்போம் நானும் எனது தம்பியும். மெதுவாக குளித்து பூஜையை அப்பா முடிப்பதற்கும் பரபரப்பாகிவிடும். மொத்த காலணியும் பட்டாசு சத்தத்தில் அலறிக்கொண்டு இருக்கும்போது நமக்கு இருப்பு கொள்ளாது. புதுத்துணி உடுத்திக்கொண்டு அண்ணன் முதல் வெடி வெடிக்கும் வரை காத்திருப்போம். எதிலும் கட்டுப்பாடுதான். ஆனால் அதில்தான் சுவராசியம் இருக்கும். எதிர் வீடு ஐயர் என்பதால் அவர்கள் விடிய விடிய வெடித்து களைத்து காபி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது நாங்கள் வெடிக்க ஆரம்பிப்போம். அன்று முழுவதும் வெடிகள் வெடிப்பதை தவிர வேறு வேலையே கிடையாது. வீட்டில் செய்த பலகாரங்களும் கறிக்குழம்புமாய் வீடே களை கட்டி இருக்கும். மதியத்திற்கு மேல் வெடிக்காத பட்டாசுகளை தேடி எடுத்து அவைகளின் மருந்துகளை ஒரு பேப்பரில் கொட்டி அதை எரித்து விளையாடுவோம். யார் வீட்டின் வாசலில் அதிக பட்டாசு குப்பை இருந்தது என்பது முக்கியமான விவாதமாக அன்று இருக்கும். விண்ணை முட்டும் பட்டாசு ரகங்கள் இல்லாத காலம் அது. ஆனால் மனதின் மகிழ்ச்சி விண்ணை தொட்டுவிடும்.

வயது ஏற ஏற பட்டாசின் மோகம் குறைந்தது. தொலைக்காட்சி பெட்டிகளின் வருகை தீபாவளி சிறப்பு ஒளிபரப்புகள் வாழ்க்கையின் ரசனையை வீட்டிற்குள்ளேயே புதைத்துவிட்டது. அதிக பட்டாசுகள் இல்லாமல் வானத்தில் வர்ண் ஜாலங்கள் காட்டும் வெடிகள் வந்துவிட்டன. சீனப்பட்டாசுகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. தரத்தில் சிவகாசி தயாரிப்புகளுக்கு அருகே கூட நிற்க முடியாத சீனத்து பட்டாசுகளினால் உள்ளூர் நுகர்வு குறைந்துவிட்டது. இந்த தீபாவளிக்கு துணி எடுக்க கூட மனம் உற்சாகம் பெறவில்லை. அவரவர்களின் தகப்பனார்கள் பணி ஓய்வு பெற்று அவரவர்கள் சொந்த ஊர்களில் செட்டிலாகிவிட்டபடியால் நண்பர்கள் எல்லாம் பிரிய வேண்டி வந்தது. ஊர் தாண்டி நாடு தாண்டி பணத்திற்காக அடுத்த அடுத்த தேவைகளுக்காக யாருக்கோ சம்பாதித்து கொடுத்து நாமும் ஊதியம் பெற்று இது போன்ற விழா கொண்டாட்டங்களை இழந்து விட்டோம். இன்றைய தீபாவளி சந்தோஷம் என்பது ஒரு சில மெயில்களிலும் SMSகளிலும் அடங்கிவிடுகிறது. அடுத்த தலைமுறைக்கு இந்த சந்தோஷ தருணங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லாமலேயே போய்விட்டது.

Monday, October 24, 2011

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்




2011 ம் ஆண்டின் தீபாவளி இன்னும் இரு நாட்களில்...
பட்டாசு மத்தாப்புகளை முடிந்தவரை தவிர்த்து சுற்றுப்புற சூழலை காப்போம்...
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

Sunday, October 16, 2011

Tuesday, October 4, 2011

வாகை சூட வா – விமர்சனம்



1966ம் வருடம் புதுக்கோட்டை மாவட்டம் என ஆரம்பித்ததும்... அட! நம்ம ஊர் கதைக்களமா என நிமிர்ந்து உட்கார்ந்தேன்.. (எனது பூர்வீகமும் புதுகைதான்).

ஒரு டூரிங் டாக்கீஸில் எம்ஜிஆரை அடிக்கும் நம்பியாரை பார்த்துவிட்டு பொங்கி எழும் ஒரு குறவர் தனது துப்பாக்கியால் திரையை நோக்கி சுடும்போது மக்களின் அறிவின்மையை ஒரு காட்சியில் கொண்டு வருகிறார் இயக்குனர் சற்குணம். பாராட்டுக்கள். களவாணியில் சிக்சர் அடித்தவர்.. இந்த படத்தில் ஃபோர் அடிக்க முயற்சித்திருக்கிறார்.

கதை நாயகனாக விமல். நாயகியாக இனியா. அறிமுகமாம்.. ஆனால் நடிப்பில் அப்படி தெரியவில்லை. பாரதிராஜாவின் அறிமுகம் போல அதகளம். முகத்தில் உணர்ச்சிகளை எளிதில் கொண்டுவந்து மாற்றிக்காண்பிக்கிறார். ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பாட்டு. இருந்தாலும் எல்லாமே சின்ன சின்ன பாட்டாக வருகிறது. இசை அமைப்பாளரும் அறிமுகமே.. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை. தமிழ் சினிமாவில் புதுமை. ஒளிப்பதிவு படத்தின் உயிரோட்டத்திற்கு முக்கிய காரணம். செம்மண் பூமி கதை என்பதால் விஷுவலில் ஒரு வித்யாசத்தினை காட்டி இருக்கிறார்கள். பீரியட் படம் என்பதை விஷுவல் புரிய வைக்கிறது. படத்தில் வரும் சிறுவர்களும் அவர்களது நக்கல்களும் கலகலப்பு.

விமலை சுற்றியே கதை நகர்ந்து வருகிறது. உணர்ச்சிகள் இல்லாத அந்த முகத்தினை தொடர்ந்து பார்க்க அலுப்பு வந்து விடுகிறது. கமலஹாசனின் கால்சீட் கிடைக்கததால்தான் தமிழ் சினிமாவிற்கு மோகன் என்றொரு ஹீரோ வந்தார். அதுபோல அஜீத், விஜய் எல்லோரும் கலக்கல் சினிமா கான்செப்ட்டிற்கு போய்விட எதார்த்த சினிமாவிற்கு நாயகனாக விமல் நம்பிக்கை அளிக்கிறார்.

டூனாலெட்டு என்னும் கேரக்டர் தம்பி ராமையா பொருந்திப்போகிறார். மற்ற கதை மாந்தர்களும் பொருத்தம் தான்.. ஆனால் எதற்காக கதையை 45 வருடங்களுக்கு முன்பு நடந்தது போல காட்ட வேண்டும்? சம காலத்திய படமாகவே காட்டி இருக்கலாமே? மேலும் படத்தில் அப்பா கேரக்டராக வரும் பாக்யராஜிற்கு அதிகம் வேலை இல்லை. கிடைத்த இடத்தில் முத்திரை பதிக்கிறார். 1966லேயே அரசு வேலை கிடைக்க கஷ்டம் என்பது போல காட்டியிருக்கிறார்கள். அந்த காலத்தில் அது எளிதுதானே? அது காமராசர் ஆட்சிக்காலம் ஆச்சே! வாத்தியார் உத்தியோகம் எளிதில் கிடைத்ததே..! சரி.. பாக்யராஜ் படித்தவர் தானே.. அதுவும் சுதந்திரம் கிடைத்த காலத்திலேயே..! அவருக்கு கூடவா அரசு வேலை கிடைக்கவில்லை??! அதே போல 1950 களிலேயே முடிவுக்கு வந்து விட்ட “ஆண்டே” (ஜமீன்தார்களின் திவான்கள்) கேரக்டர்களை 1966 கதைக்களத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.. நெருடல்.

நான் 90களின் ஆரம்பத்தில் பாலிடெக்னிக் படிக்க செட்டிநாட்டில் இருந்த சமயம் இந்த படத்தில் வரும் டூனாலெட்டு கேரக்டர் போல் ஒருவர் இருந்தார். இப்படித்தான் புரியாத வகையில் கேள்விகள் மூலம் கணக்கு போட்டு “படிச்ச பசங்களா இதுக்கு பதில் சொல்லுங்க” என்பார். நாமதான் ஸ்கூல்ல படிக்கிறப்பவே அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடெண்ட்ஸ் (கணக்கு பீரியட்ல கிளாஸ்க்கு வெளியே அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடெண்ட்ஸ்) ஆச்சே.. எப்படி சொல்ல முடியும்? அவரை கண்டாலே ஓட்டம்தான். கடைசி ஆண்டு படிக்கும் போதுதான் அவரின் பல கணக்குளை ஆராய்ந்து விடை தெரியாமல் அவரிடமே கேட்டு தெரிந்து கொண்டோம். பார்க்க பைத்தியக்காரன் போல இருந்த அவர் அந்தக்கால இண்டர்மீடியேட் வரை படித்தவர் என்பதும் விளங்கியது. பர்மாவில் சம்பாத்யம் செய்து வசதியாக இருந்த அவர் அங்கே கலவரத்தில் சொத்துக்களை இழந்து பூர்வீக பூமிக்கு வந்து பிரமை பிடித்தவர் போல ஆகிவிட்டாராம். ஆனால் பேச்சில் மிகவும் தெளிவு இருக்கும்.

கதைக்கு வருவோம்.. இடைவேளை வரை ஜவ்வு மிட்டாய் போல காட்சிகள் நகர்ந்தாலும் இடைவேளைக்கு பிறகு படம் வேகமாக பயணிக்கிறது. கண்டிப்பாக இந்த படம் 20 நாட்களுக்கு அதிகமாக ஓடாது. ஆனாலும் பரவாயில்லை அந்த ஓட்டமே தயாரிப்பாளருக்கு இலாபத்தினை அளித்திருக்கும்.

ஒரு முறை பார்க்கலாம்.

Monday, September 19, 2011

இந்தியா உண்மையில் சாம்பியன்தானா?



இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து அடிவாங்கி சொதப்பி சுண்ணாம்பாகி இந்தியா வந்து சேர்ந்தும் விட்ட நிலையில் இந்த கேள்வி அவசியமா?

அவசியம்தான். பிள்ளைப்பூச்சியை அதுவும் சொந்த மண்ணில் அடித்துவிட்டு நான் பெரிய ஆளுன்னு சொல்லிக்கிறதுல பெருமை இல்லை. சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ், ஜாகீர்கான், ஹர்பஜன் என இந்த அறுவர் படை ஒன்றாக சேர்ந்து ஒரு போட்டியிலேனும் ஆடி இருந்தால் தெரிந்து இருக்கும் சேதி. நம் துரதிர்ஷ்டம் சிங்கம் பசுக்கூட்டத்தை தனித்தனியா சாப்பிட்டதை போல ஒவ்வொரு வீரரும் தனித்தனியாக போராடி காயப்பட்டு திரும்பியும் விட்டனர். மிச்சம் இருந்த கோலி, தோனி, ரெய்னா மூவரும் தங்கள் பங்கிற்கு போராடி தோற்றனர். அணியின் சுவர் டிராவிட் மட்டும் வழக்கம்போல் சிறப்பாக ஆடி கேவலமான தோல்வியை கவுரவமாக்கினார்.

டெல்லிப்புயல் சேவாக்கின் ஓபனிங் இல்லை எனில் அணியின் நிலமை நடனம் ஆடுவது கண் கூடாக தெரிகிறது. ரஹானேவை ஆகா ஓகோ என சொன்னவர்கள் அவரின் ஆட்டத்தை பார்க்கும் போது லீக் மேட்ச் கூட ஆட தெரியாவர் என சொல்ல தோன்றியது. அனைத்து ஷாட்களும் எட்ஜ் வாங்கியது. சும்மா பேட்டை சுழற்ற எங்கெங்கோ பட்டு அதிர்ஷ்டத்தில் பவுண்டரியை தொட்டதை விபரமறிந்தவர்களின் கணிகளில் தெரியும். பார்த்தீவின் ஆட்டத்தில் இருந்த நேர்த்தி ரஹானேவிடம் சுத்தமாக இல்லை. கிடைத்த வாய்ப்பில் சொதப்பினார். ஜெயிக்க வாய்ப்பிருந்த ஆட்டத்தில் எல்லாம் வருண பகவான் ஆடி இங்கிலாந்தினை காப்பாற்றினார். கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் கோலியும் தோனியும் எங்கள் அணி சாம்பியன்தான் என நிரூபிப்பது போல் ஆடினர். தொடர் வெற்றிகள் கண்டபொழுது நாம் ஆடிய ஆட்டமும் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த தோல்விகள் நம்மை திருத்திக்கொள்ள உதவும்.



அஷ்வினுக்கு நல்ல எதிர்காலம் இருப்பது போல தெரிகிறது. கும்ளே இடத்தை நெருங்க இவருக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதற்கு நிறைய உழைப்பும் அதிர்ஷ்டமும் தேவை. தமிழர்களுக்கு இது மிகவும் குறைவு. முனாப் எடுபடவே இல்லை. பிரவீன் எளிதில் களைத்துவிடுவது ஏமாற்றம் அளிக்கிறது. ஜடேஜாவிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆட்டத்தில் அனுபவம் தெரிகிறது. பார்க்கலாம்.




டிராவிட் இனிமேல் ஒரு நாள் போட்டிகளில் ஆடப்போவதில்லை. இது நம்மை பெரிதாக பாதிக்க போவதில்லை. ஏனெனில் அவர் ஒரு நாள் போட்டிகள் ஆடி வருடம் 2 ஆகிறது. அணியில் அனுபவசாலிகள் இல்லை என்பதாலும் டெஸ்டில் சிறப்பாக ஆடியதாலும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். அதனால்தான் இதுதான் என் கடைசி ஆட்டம் என அறிவித்துவிட்டார். சச்சினும் ஒரு நாள் போட்டிகள் ஆடுவதை வெகுவாக குறைத்துவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு நாள் போட்டிகளில் இந்த இருவரின் பங்களிப்பு மிகவும் குறைவு (உலக கோப்பை அணியில் சச்சினின் பங்களிப்பு தவிர).



இப்போதைக்கு அணிக்கு தேவை சேவாக், கம்பீர். ஜாகீர், ஹர்பஜன் மற்றும் யுவராஜ் மட்டுமே. இவர்கள் அணிக்கு திரும்பி விட்டால் அணி பழைய நிலைக்கு திரும்பி விடும். மேலும் மேற்கிந்தியதீவுகளோ அல்லது இங்கிலாந்தோ நமது இந்திய கால நிலைக்கு முற்றிலும் எதிரானது. எகிறும் பிட்ச்களில் நம் ஆட்கள் தடுமாறியதெல்லாம் அந்தக்காலம். ஷார்ட் பிட்ச் போடும் போது ரெய்னா தடுமாறுவது எளிதில் அவரால் திருத்திக்கொள்ளப்படும்.

வீரர்களுக்கு தேவையான ஓய்வு அளிக்கப்படவில்லை என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. யாருக்கு ஓய்வு கிடைக்கிறதோ இல்லையோ தோனிக்கு சுத்தமாக ஓய்வில்லை. அடுத்து சாம்பியன் லீக்கிற்கு தயாராக வேண்டும். மெஷின் கூட இப்படி தொடர்ந்து உழைக்குமா என தெரியவில்லை.

எது எப்படியானாலும் அணிக்கு ஒரு லெக் ஸ்பின்னர் தேவை. காயமுற்ற அனைத்து வீரர்களும் சீக்கிரம் குணம் அடைந்து அணிக்கு திரும்ப வேண்டும். இந்தியா உண்மையிலேயே சாம்பியன்தான் என அனைவரும் உணர ஒரு பேயாட்டம் தேவையிருக்கிறது.

Saturday, September 17, 2011

ஊர்களும் – முதல் சினிமாக்களும்

ஒவ்வொரு ஊருக்கும் நமக்கும் உள்ள சம்பந்தத்தில் முக்கியமானவைகளில் ஒன்று அந்தந்த ஊர்களில் நாம் பார்த்த சினிமாக்கள். அந்த வகையில் என் வாழ்நாளில் நான் பார்த்த சில ஊர்களில் நான் பார்த்த முதல் சினிமாக்கள்….

சென்னை – மன்னன்
ஈரோடு – ராஜாதிராஜா
கரூர் – எங்க வீட்டு ராமாயணம்
கோயம்புத்தூர் – உயிரோடு உயிராக
புதுக்கோட்டை – குரு சிஷ்யன்
காரைக்குடி – சூரியன்
அருப்புக்கோட்டை – சந்திரமுகி
மதுரை – எஜமான்
திண்டுக்கல் – ஏர்போர்ட்
சிங்கம்புணரி – ராசுக்குட்டி
திருச்சி – முறைமாமன்
சிதம்பரம் – மாமன் மகள்
கோபிசெட்டிபாளையம் – தாமிரபரணி
மானாமதுரை – முன் அறிவிப்பு
சிவகங்கை – சின்னமுத்து
பள்ளத்தூர் – காவல் நிலையம்
கானாடுகாத்தான் – ரோஜா

இதுக்குமேல நியாபகம் இல்லை....