Tuesday, March 22, 2011

அரசியல் நிலவரம் - 2011




ஒருவழியாக தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கி இருக்கிறது. வழக்கம் போல திமுக ஒரு அணியாகவும் அதிமுக ஒரு அணியாகவும் களம் இறங்குகிறது. இன்னும் சில நாட்களே பாக்கி இருக்கும் நிலையில் காங்கிரஸில் யார் யார் போட்டியிட போகிறார்கள் என்பதே சஸ்பென்சாக இருக்கும் நிலையில் நமது கரூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இங்கு அதிமுக சார்பில் மீண்டும் செந்தில் பாலாஜி அவர்களே போட்டி இடுகிறார்கள். சென்ற முறை திமுக சார்பில் போட்டியிட்ட வாசுகி முருகேசன் அவர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்ததால் இம்முறை சரியான போட்டி வேட்பாளர் திமுக வில் இல்லை. கேசிபி அய்யா அருகில் இருக்கும் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை தேமுதிக விற்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. சென்ற முறை தனியாக நின்று தேமுதிகவின் ரவி அவர்கள் கணிசமான வாக்குகளை பெற்றது ஆச்சரியம்தான்.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அம்மா போட்டியிடுவதால் திருச்சி களை கட்டி இருக்கிறது. இம்முறை காவிரிக்கரையில் ஸ்ரீரங்கத்தில் அம்மாவும் திருவாரூரில் அய்யாவும் சொந்த ஊர்களில் போட்டியிடுகிறார்கள். கரூர் – திருச்சி சாலையில் முத்தரையர் என்று சொல்லப்படும் மக்களே அதிகம். இதற்கு அடுத்த வாய்க்கால் கரை பகுதியில் ரெட்டி மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். திருச்சியை தாண்டிவிட்டால் தேவரின மக்கள்தான் அதிகம்.

கரூரை பொறுத்தவரை சென்றமுறை அதிமுகவின் செந்தில்பாலாஜி அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வாசுகி முருகேசன் அவர்களை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். எதிர்கட்சி என்பதால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. கரூரில் சில சாலைகள் புதிதாக போடப்பட்டது. மற்றபடி ஒன்றுமில்லை. தொழில் நகரமான கரூரில் நூல் விலையேற்றம் மற்றும் மின்வெட்டினால் தொழில் பாதிக்கப்பட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடியபோது இவரும் களத்தில் நின்றார். கேசிபி அய்யாவும் ஆதரவு அளித்தார்.

இந்த முறை திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரசிற்கு இந்த தொகுதி வழங்கப்பட்டதும் அதிமுகவின் வெற்றி எளிதாகிப்போனது. ஏற்கனவே சட்ட மன்ற உறுப்பினராக அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக அதிமுக வேட்பாளர் தம்பித்துரை வெற்றி பெற்று கரூர் அதிமுகவின் கோட்டை என நிருபித்துள்ளார். காங்கிரசில் வேட்பாளரே இன்னும் யார் என தெரியாத நிலையில் அதிமுக வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டது. பார்க்கலாம்.

மற்றபடி தேமுதிகவின் எழுச்சிதான் இப்பொழுது பேச்சாக உள்ளது. பாமகவின் கோட்டையை தேமுதிகதான் முற்றுகை இட்டுள்ளது. விஜயகாந்த் இம்முறை ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறார் என பேச்சு. ரிஷிவந்தியம் காங்கிரஸ் ஏரியா. முடிவு என்ன என்பது மே மாதம் தெரியும். விருது நகரில் மாபா பாண்டியராஜன் போட்டி இடுகிறார். தனிப்பட்ட செல்வாக்கு அங்கு அவருக்கு அதிகம். ராதாபுரத்தில் சினிமா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் போட்டி இடுகிறார். சென்ற முறை தனித்து போட்டியிட்டே தொண்ணூறாயிரம் ஓட்டுகளை பெற்றவர் இவர். திருவாடானை, பண்ருட்டி, விருத்தாச்சலம் போன்ற தொகுதிகளிலும் தேமுதிக கடுமையான சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கலைஞரின் இலவச திட்டங்கள் எந்த அளவிற்கு கைகொடுக்கும் என தெரியவில்லை. ஆனால் இலவச திட்டங்களில் ஏதாவது ஒன்றாவது அனைவருக்கும் கிடைத்துள்ளது. குறிப்பாக டிவி. ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆரம்பத்தில் பெரிதாக பேசப்பட்டடு இப்பொழுது அனைவராலும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப்பட்டு வருகிறது. இதைபற்றி பேசும் மேல்தட்டு மக்கள் ஓட்டு போட வருவதில்லை என்பதால் இதன் தாக்கம் பெரிய அளவில் இருக்காது. இருப்பினும் விலைவாசி ஏற்றம் கீழ் நிலை மக்கள் வரை பாதித்தது என்பது மறுக்கமுடியாத நிஜம். ஒரு கிலோ தக்காளி, ஒரு கிலோ சின்ன வெங்காயம், ஒரு கிலோ பெரிய வெங்காயம் வாங்கினால் 250 ரூபாய்வரை செலவானது இந்த ஆட்சியில்தான். ஆனால் அது அந்த வெள்ளக்காலத்தில்தான். இப்பொழுது நார்மலாகிவிட்டது.

பொதுவாக அம்மா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும் என்பது ஒரு பேச்சாகவே இருக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில்தான் இதன் வித்தியாசம் தெரியும். சிறு நகரங்களில் பெரிய வித்தியாசம் இல்லை. எனினும் கவுன்சிலர் முதல் வார்டு மெம்பர் வரை ஏசி காரில் செல்வது திமுகவிற்கு சிறிய சறுக்கல் ஆகலாம்.

தேர்தல் வாக்குறுதிகளை பார்க்கும் போது, தடுப்பணை கட்டும் திட்டங்களே, பெரிய தொழிற்சாலை திட்டங்களோ, மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கக்கூடிய வகையில் பெரிய திட்டங்களோ இல்லை. வெறும் இலவசம் வெற்றி தருமா? மே மாதம் மகேசன் தீர்ப்பில் தெரியும்.

1 comment:

  1. கார்த்திகேயன்March 24, 2011 at 8:04 AM

    கரூர் - காங்கிரஸ் வேட்பாளர் - ஜோதிமணி (பெண் வேட்பாளர்). 10 வருடங்களுக்கு முன்பு கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் திரு. நாட்ராயன் வெற்றி பெற்றுள்ளார். பார்க்கலாம்.

    ReplyDelete