Sunday, March 4, 2012

அரவான் – ஓர் அலசல்





இந்த படத்திற்கு விமர்சனம் எழுதலாம்னுதான் பார்த்தேன். நிறைய பேர் எழுதி இருக்கிறதால என் கண்ணோட்டத்தின் அலசலை மட்டும் பதிவு செய்கிறேன்.

அரவான் என்பவன் புராணத்தில் அர்ஜுனனுக்கும் ஒரு பாம்பரசிக்கும் பிறந்த பாதி பாம்பும் பாதி மனுஷனுமானவன். மகாபாரதத்தில் குருசேத்திர சண்டையின் ஆரம்பத்தில் போடப்படும் பூஜையில் களப்பலிக்கு தன்னை தந்தவன். சாவதற்கு முன்பு திருநங்கையை திருமணம் செய்து ஒரு நாள் குடும்பம் நடத்தி பலியானவன். இந்த அரவானுக்கு விழுப்புரம் அருகே கூவாகத்தில் கோவில் இருக்கிறது. அதன் ஒவ்வொரு திருவிழாவிற்கும் நாடெங்கிலும் இருந்து வரும் அரவானிகள் (அரவானின் மனைவிகளாக தங்களை பாவிப்பதால்தான் இந்த பெயர்) என்னும் திருநங்கைகள் நேர்த்தி கடன்களை செய்கிறார்கள். அதே போல தனது ஊருக்காக உறவுக்காக தன்னையே களப்பலியாக தரும் ஒரு சுத்த வீரனின் கதைதான் அரவான்.

ராஜாக்களின் காலம் முடிந்து குறு மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆண்ட ஆங்கிலேய அரசாங்கம் நிலை பெறுவதற்கு முன்பு நடந்த கதை. 250 – 300 வருடங்களுக்கு முன்பு நடந்த கதையாக களம் அமைகிறது. எனவே மிகவும் மெனக்கெட்டு காட்சி அமைப்பினை கொண்டு வந்து இருக்கிறார்கள். சபாஷ் வசந்தபாலன் டீம். ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் என மிகைப்படுத்தப்படாமல் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

20 வருடங்களுக்கு முன்பு கரிகாலன்னு ஒரு வில்லன் நடிகர் அறிமுகம் ஆனார். மிகப்பெரிய ஆளாய் வந்திருக்க வேண்டியவர்.. ஆனால் காணாமல் போனவராகிவிட்டார். நெடிய இடைவேளைக்கு பிறகு அரவானில் அவரை பார்த்தேன். நடிப்பில் பின்னி இருக்கிறார். கதையின் வில்லனாக வித்யாசமான கெட்டப்பில் கோட்டையூரின் காவல்காரனாக நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

கொம்பூதியாக பசுபதி. கூத்துப்பட்டறையில் பட்டைதீட்டப்பட்டவருக்கு இந்த பாத்திரம் எல்லாம் அல்வா சாப்பிடுவதைப் போல. டாக்டரின் படங்களில் லூசுத்தனமான வில்லனாக சித்தரிக்கப்பட்டுவிட்டார். எங்கே இவரின் நடிப்பை இழந்துவிடுவோமோ என எண்ணிக்கொண்டு இருந்த சமயத்தில்தான் வசந்தபாலன் என்னும் திரைச்சிற்பி வெயில் என்னும் திரைப்படத்தில் அற்புதமான நடிப்பினை வெளிக்கொணர்ந்தார். படத்தின் முன்பாதியில் இவர்தான் நாயகன். பின்பு வரும் ஆதி கதையின் நாயகனாக உருவெடுத்து பாக்கி படத்தினை நகர்த்தி இருக்கிறார். அடேங்கப்பா என்ன உடம்பு? சில காட்சிகளில் உடல் மொழியில் கலக்குகிறார். இவரை இன்னும் சில நல்ல இயக்குனர்கள் உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு படத்திற்காக எவ்வளவு மெனக்கெடலான் என்பதை வரிப்புலியாக வரும் ஆதியும், கொம்பூதியாக வரும் பசுபதியும் காட்டி இருக்கிறார்கள். வெயில், அங்காடித்தெரு படங்களில் பதித்த முத்திரையை இந்த படத்தில் இன்னும் ஆழமாக பதித்திருக்கிறார் வசந்தபாலன்.

படத்தில் பரத், அஞ்சலி ஒப்புக்கு சப்பாணியாக ஒருசில காட்சிகளில் வந்தாலும் பொருத்தமான நடிப்பு. காமெடிக்கு சிங்கம்புலி என்று பார்த்தால் கதையில் ட்விஸ்ட் என்றால் இவர்தான். களவாணி படத்தில் வில்லனாக வந்தவருக்கும் இதில் ஆதியின் தோழனாக நல்ல பாத்திரம். கதையின் நாயகிகளும் நல்ல நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இசையும் பொருத்தம். பாடல்களும் அருமை.

நிறையவே லாஜிக் மீறல்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு வயதான ராஜா எந்த ஒரு அடியாளும் இன்றி களவாணிகளின் ஊருக்குள் வந்து பொது மந்தையில் உறங்கும் ஒரு இளைஞனை பக்கத்தில் உறங்கும் நபருக்கும் தெரிந்து விடாமல் சங்கை அறுக்கிறார் என்றால் இடிக்கிறதே!! இத்தனைக்கும் கழுத்து அறுபடும் சமயம் ராஜாவின் வெள்ளி அரைஞான் கயிறு பரத் கையில் அறுக்கப்படும் சமயம் களவாணிகளின் காதுகளை எட்டாதா? பரத் இறந்தபின்பு மெனெக்கெட்டு எதற்கு எல்லா ஊருக்கும் தகவல் சொல்கிறார்கள்? எரித்துவிட்டு போகவேண்டியது தானே? அந்தக்கால களவாணிகளின் முக்கிய ஆயுதமான உடும்புக்கயிறை பற்றிய பதிவும் இல்லை. அதேபோல் ஜல்லிக்கட்டு காட்சிகளில் மக்கள் யாரும் ஆரவாரம் செய்யாமல் தேமே என்றிருக்க பின்னனி இசையில் ஆர்ப்பரிப்பு வருகையில் நமக்கு சிரிப்பும் வருகிறது. ஆதி ஏன் பசுபதிக்கு அடிமை போல இருக்கிறார்? பசுபதியை காப்பாற்ற உயிரை பணயம் வைக்கும் அளவிற்கு என்ன தேவை இருக்கிறது? ஆதியின் அம்மா ஊரில் ஆதியை யாருக்கும் தெரியாமல் போவது எப்படி? காவல்காரன் ஊரில் இருப்பவர்கள் ஏன் கள்வர்களின் ஊரில் சம்பந்தம் செய்கிறார்கள்? இப்படி கேள்விகள் இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி திரைப்படம் நம்மை ஈர்க்கும்போதுதான் இயக்குனரின் வெற்றி தெரிகிறது.

தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான்.

4 comments:

  1. எனக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. வசந்தபாலனின் கடும் உழைப்புக்காகவே படத்தை பாராட்டலாம்.

    ReplyDelete
  2. though it lacks little it on logic, still it deserve for the hardwork given by it's technicians. hats off to vasanthabaln ...

    ReplyDelete
  3. //எனக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. வசந்தபாலனின் கடும் உழைப்புக்காகவே படத்தை பாராட்டலாம்.//

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. எனக்கும் படம் மிகவும் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  4. //hough it lacks little it on logic, still it deserve for the hardwork given by it's technicians. hats off to vasanthabaln ...//
    வருகைக்கு நன்றி ராஜா.. ஊரில் வெயில் எப்படி இருக்கிறது?

    ReplyDelete