Monday, July 19, 2010

மதராசப்பட்டிணம் - விமர்சனம்

கொஞ்சம் லகான், கொஞ்சம் நாடோடி தென்றல்.. நிறைய டைட்டானிக்கை கலந்து கொடுத்து இருக்கிறார்கள் மதராசபட்டிணமாக. மலையாள மண்ணில் இருந்து வந்த சிறந்த நடிகரான ஹனீபாவின் கடைசி படம். மனிதர் அற்புதமாக நடித்துக்கொடுத்திருக்கிறார். 1945 மதராஸ் ஸ்டேட்டின் கூவம் நதிதான் கதைக்களம். அற்புதமான ஆறாக இருந்திருக்கிறது. 1945ல் மாகாண கவர்னரின் மகளாக வரும் கதா நாயகிக்கும் வண்ணாந்துறையில் வாழும் கதா நாயகனுக்கும் மலர்ந்த காதலே கதை. சுதந்திரம் வாங்கியவுடன் பிரிய வேண்டிய நிலை. காதலின் கதி என்ன என்பதே கதை. பழைய மெட்ராஸை கண்முன் கொண்டுவந்த ஆர்ட் டைரக்டரின் பங்குதான் இதில் மெச்சப்பட வேண்டியது. அற்புத உழைப்பு தெரிகிறது. கதா நாயகியாக எமியும் நாயகனாக ஆரியாவும். மனிதர் நல்ல உடல்வாகு. குஸ்தி வீரனாகவும் வண்னானாகவும் பரிமளிக்கிறார். பயம் கிலோ எவ்வளவு என கேட்கும் அளவிற்கு கண்களில் ஒரு கூர்மை. ஆரியாவின் சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு மைல் கல். சிற்சில முரண்பாடுகள் இருந்தாலும் பார்க்கவேண்டிய படம்தான் இது.

ஆரியாவின் பரம்பரை வீட்டுத்தாலியை எமியிடம் கொடுத்து தைரியமாக போய்வா.. வாழ்வோ சாவோ உனக்கு இந்த மண்ணில்தான் என சொல்லி அனுப்புகிறார். விதி அவர்களை பிரித்துவிட அந்த தாலியை கொடுப்பதற்காக 2010ல் ஆரியாவை தேடி சென்னை வருகிறார் எமி. 30 கோடி பேரில் தொலைத்த ஒருவனை 110 கோடியில் தேட வேண்டிய கட்டாயம். கண்டுபிடிக்கும் நேரத்தில் ஆரியா உயிருடன் இல்லை. எனினும் எமியின் கனவுகள் அனைத்தையும் ஆரியா நிறைவேற்றி இருப்பதும், எமிக்காகவே திருமணம் செய்யாமல் வாழ்ந்ததையும் கண்டு எமி அந்த தாலி எனக்குத்தான் என எண்ணும் சமயம் ஆரியாவின் கல்லறையில் எமியின் உயிர் பிறிகிறது.

எந்த ஒரு திரைப்படத்திலும் பார்க்காத கிளைமாக்ஸ் விஷுவல் இதில். திரையில் படம் எதும் வராமல் வெறும் டயலாக்கில் நகர்த்தி இருப்பது புதுமை. அதே போல் ஆரியா ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வேகத்தைவிட எமி தமிழ் கற்றுக்கொண்ட வேகம் அருமை. எமிக்கு தமிழ் தெரியாது என நினைத்து 2010 தமிழர்கள் கிண்டல் அடிப்பது.. முடிவில் தெரிய வரும்போது நெகிழ்வது எல்லம் சூப்பர். அழகு தேவதையாக எமி. எத்தனை பேர் தூக்கத்தை கெடுத்தாரோ?

நாசர், ஆரியாவின் நண்பர்களாக வரும் அந்த நால்வர், போலீஸ் அதிகாரியாக வரும் ஆங்கிலேயர் என எல்லோரும் அற்புதமாக நடித்திருக்கின்றனர். 1945ல் பிரிந்து போன காதலர்கள் அதற்கப்புறம் ஒருவரை ஒருவர் தேடவில்லை என்பதுதான் பெரிய நெருடல். ஆரியா மிகப்பெரிய மனிதராகவிட்டபோதும் லண்டன் போய் காதலியை பார்க்காமல் அவருக்காகவே வாழ்ந்திருப்பதாக காட்டி இருப்பதும் இடிக்கிறது. கூவம் ஆற்றில் பாலத்தின்கீழ் ஆரியாவை பிரிந்த எமி கிழவியான பிறகு அதே ஆற்றின் பாலத்தின் அருகில் நிற்கும் போது மூக்கை பொத்திக்கொள்ளும் அளவிற்கு நாறி இருக்கிறது. எந்த அளவிற்கு நகரம் பாழ்பட்டுவிட்டது என்பதை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். பாடல்கள் சுமார் ரகம்.

அனைவரும் ஒருமுறை பார்க்கவேண்டிய படம் மதராசப்பட்டிணம்.

No comments:

Post a Comment