Tuesday, August 31, 2010

இதுங்க எல்லாம் எங்க உருப்பட போகுது?

என்னாடா டாபிக்கே சரியில்லைன்னு நினைக்கிற மக்காள்.. முழுசா படிச்சிட்டு சொல்லுங்க.

காலை எழுந்தவுடன் படிப்பு.. இதெல்லாம் காலேஜ் முடிக்கிற வரைக்கும்தான். அதுக்கப்புறம் ஒரு வருசமாவது வீட்டில சும்மா இருக்குறது தான் ஸ்டைலு. கரெக்ட்டா அப்பா 7:30 மணிக்கு வேலைக்கு போனதும் டான்னு முழிப்பு வந்துடும் நமக்கு. அப்புறம் சாவகாசமாக குளிச்சு ரெடியாகி ஒரு 7 ரூபாய் எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டு (சுயமாகவா சம்பாதிக்கிறோம்.. அப்பாவுதுதானே) ஒரு ஸ்டைலோட வாக்கிங் கிளம்பினம்னா டார்மெண்ட்ரி வந்துடும். யாரும் அந்த நேரத்துக்கு இருக்க மாட்டாங்க. அப்படியே வராதுன்னு தெரிஞ்சும் வரும்ங்கிற நம்பிக்கைல போஸ்ட் ஆபீஸ் வரை போய் லெட்டர் இருக்கான்னு பாத்துட்டு வீட்ல இருந்து கொண்டு வந்த டோக்கன்ல பரமானந்தம் கபே ல ஒரு டீ சாப்பிட்டுவிட்டு திரும்ப அதே டார்மென்ட்ரிக்கு வந்தம்னா (போகிறதுக்கு வேற இடம் இல்லங்குறது வேற விசயம்) அனேகமாக எல்லாரும் வந்து அசெம்பிள் ஆய்டுவாங்க. ஒரு அரை மணி நேரம் வெறும் கடலை போட்டுட்டு எல்லாரும் வந்தாச்சான்னு ஒரு பார்வை பாத்துட்டு ”வாங்கப்பா மேல போலாம்”ன்னு யாராவது ஒருத்தர் ஆரம்பிச்சா வெள்ளாட்டு மந்தை கணக்கா எல்லாரும் மேல போய்ட வேண்டியதுதான். இதுக்கும் மேல இதை யூஸ் பண்ண முடியாதுங்குற ஸ்டேஜ்ல ஒரு 3 கட்டு சீட்டை எடுத்து வி.டி.ஆர் பாய்ண்ட் போட ஆட்டம் ஆரம்பிக்கும். 320 பாயிண்ட்க்கு 5 ரூபா. 8 பேர் சேந்தாலே 40 ரூபாய்தான் கேபிடல். .அந்த 5 ரூபாயை காப்பாத்த இழுக்குற இழுவை ஆண்டவனுக்கு அழுகை வந்துடும். செந்தில், சிசுபால், விடிஆர், சுப்பன், பிருதிவி, தர்மா (கோழின்னு இவனுக்கு எவண்டா பேர் வச்சது?), பன்னீர், அனலு இப்படி பல ஜெனரேசன் கலந்து அடிக்க மேட்ச் விருவிருப்பாய்டும். ஒரு வழியா 5 கை அவுட்டாகி மிச்சம் இருக்குறவங்க சீட்டை வச்சு அவுங்க கேம் ஆட ஆரம்பிச்சுடுவாய்ங்க. மணி 2 ஆகுற போது 2 கை மட்டும் இழுத்துகிட்டு நிக்கும். எவனுக்கும் பசிக்காது. ஒரு வழியா காம்ப்ரமைஸ் ஆகி கைக்காசு குடுத்தோ இல்லை பாகம் பிரிச்சோ ஆட்டம் முடியும்.

அப்பால வீட்டுக்கு போய் செமத்தியா சாப்புட்டு ஒரு தூக்கம் (டயர்ட் ஆய்டும்லப்பா). ஒரு 4 மணிக்கு எழுந்து (கண்டிப்பா நமக்கெல்லாம் காபி கிடையாது) அப்படியே கிரவுண்ட்க்கு வந்தம்னா செக்யூரிட்டி ரூம்ல பதுக்கி வச்சுருக்குற பேட், பேடு எல்லம் எடுத்துகிட்டு ஒரு ஆட்டம் (இந்த ஆட்டத்துக்கு செலவு ஒன்னும் இல்லை. அதிகப்படிய கடலை மிட்டாய்தான்). அப்புறம் கைகால் எல்லாம் கழுவிட்டு நேரா கிளப்புக்கு வந்தா எல்லா பேப்பரும் படிக்க வேண்டியது (எனக்கு தெரிஞ்சு காலைல படிக்க வேண்டிய பேப்பரை எல்லாம் சாயங்காலம் படிச்ச கோஷ்டி உலகத்திலேயே நாம மட்டும்தான்). அப்புறம் இருட்டினதுக்கு அப்புறம் கிளப்புக்கு வெளிய இருக்குற தொட்டில உக்காந்துகிட்டு ஊர் கதை பேச வேண்டியது. 9 மணிக்கு மேல கிளப் மூடிடுவான். அதனால அதுக்குள்ள கிளம்பி வீட்டுக்கு போய் அப்பா ஆரம்பிக்குறதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சு கேட்டும் கேட்காத மாதிரி தூங்கிட வேண்டியது. அடுத்த நாளும் அதே வாழ்க்கை.

இந்த பீரியட்ல நம்மளை பார்த்து அனேகம் பேர் மனசில நினைச்ச ஒரு விசயம் என்னன்னா??? டைட்டிலை படிங்கப்பா..........

Thursday, August 26, 2010

நம்ம ஊர் தெய்வங்கள்

நம்ம ஊரில் காவல் தெய்வங்களாக முனியப்பசாமியே அறியப்பட்டாலும் வடக்கில் கோலோச்சியது மாரியம்ம்னே. எனக்கு தெரிந்து முனியப்பனுக்கு ஒரு முறை திருவிழா எடுத்தார்கள். அதற்கப்புறம் இல்லை. (அந்த திருவிழாவின் போதுதான் இப்போது இருக்கும் 7 கன்னிமார் சிலையும் பெரிய முனியப்பன் சிலையும்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒரு மரத்தின் கீழ் (என்ன் மரம் என்று யாருக்காவது தெரியுமா?) சாதாரண கோவிலாக இருந்தது அந்த திருவிழாவிற்கு பிறகு தினமும் சிலர் வந்து செல்லுமளவிற்கு ஒரு வழிபாட்டுத்தலமானது. அந்த கோவில் ஏரியாவில் ஒரு சிறிய சுனை இருந்தது. அதில் எப்பொழுதும் தண்ணீர் இருக்கும். தண்ணீர் வற்றும் சமயங்களில் கம்பெனியில் இருந்து வண்டியில் நிரப்புவார்கள். நம்ம கம்பெனியின் கிடாவெட்டு ஒன்று வருடத்திற்கொருமுறை நடக்கிறது.

நம்மில் அனைவரும் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட சமயங்களில் அடிக்கடி சென்ற இடம் இந்த கோவில்தான். ஒரு சில முறை மருந்து குடோன் வரை சென்றதுண்டு. இந்த கோவிலின் பின்பக்கம் சில பாறைகள் இருக்கும். அதில் ஏறி விளையாண்டதுண்டு. இந்த கோவிலின் பக்கத்தில் உள்ள தரிசுக்காடுகளில் அரைப்பரீட்சை லீவுகளிம் பொன்வண்டு பிடித்தல் பெரிய பொழுதுபோக்கு. இந்த கோவிலுக்கு அடுத்து பார்த்தால் நம்ம கரட்டுக்கோட்டை பெருமாள் கோவில். இது காவல் தெய்வமாக இல்லை எனினும் நம்ம ஊரின் சிறந்த கோவில்களில் இதுவும் ஒன்று. 3ம் வகுப்பு படித்த சமயம் (1985) செல்வபெருமாள் வாத்தியார் தலைமையில் அனைவரும் அணிவகுத்து இந்த மலைக்கு சென்றோம். அப்பொழுதெல்லாம் இங்கு பெரிய கோவில் இல்லை. படிக்கட்டுகளும் கிடையாது. மிட்டய்களை வாங்கிக்கொண்டு அங்கு போய் ஜாலியாக சுற்றிவிட்டு பின்பு நடராஜா என ஊர் வந்தோம். அதற்கு பிறகு அங்கு போகும் வாய்ப்பு இல்லை. திடீரென 1995ல் அங்கு ஒரு பிரம்மண்டமான மலைக்கோவில் தனியொரு நபரால் கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. ஸ்வாமி பிரமேனந்தா மஹராஜ் ( நம்ம பிரேமானந்தா தான்) தலைமையில் நடைபெற்ற விழா அது. அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி விழாவாகும். அந்த விழாவிற்கப்புறம் ஒரு முறை திருவிழாவும் ந்டந்தது. பறவை என்னும் மஞ்சு விரட்டு போட்டி கூட நடத்தப்பட்டது. அந்த கோவிலில் சின்ன வயசில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் பெரிய கோடீஸ்வரர் ஆனதும் அவர் கட்டியது ஆகும். அவருக்கு இன்றும் திருச்சியில் பெரிய இரும்பு கம்பெனி ஒன்று இருக்கிறது.

இதெல்லாம் எப்பொழுதாவது ஒரு முறைதான் ந்டந்தது. ஆனால் நம்ம மாரியம்மன் கோவில் திருவிழா மட்டும் வருடம் தவறாமல் சிற்ப்பாக ந்டந்தது. அந்த ஏரியா மக்களின் அபிமானத்தை பெற்ற அந்த கோவில் திருவிழா நடக்கும் சமயம் குப்பாயி அம்மாள் கிணற்றில் இருந்து ஒரு வேல் எடுப்பார்கள். தாரை தப்பட்டை கிழிய கிழிய அந்த வேல் கோவில் வந்து சேரும். இந்த வேலை அனைவரும் எடுக்க இயலாது. அருள் வருபவருக்கு மட்டுமே சாத்தியம். அந்த வேல் வந்ததும் விழா இனிதே களைகட்டும். மஞ்சள் நீர் ஊற்றும் விழாவன்று காலணிக்குள்ளும் எல்லா இடத்திலும் வலம் வரும். அனைவரும் ஒருவர்மேல் ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடுவோம். பிறகு இரவு சினிமா காட்சிகள். திடீர் டீக்கடை, பெட்டிக்கடைகள் சகிதம் திருவிழா இனிதே முடியும். கடைசி நாளன்று சிலர் கிடாயும் வெட்டுவர். ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் இந்த கோவிலின் அருகில் ந்டைபெறும் கண் கட்டிக்கொண்டு முட்டி உடைத்தல் வெகு பிரசித்தம். நம்மில் அனைவருமே முயற்சி செய்திருப்போம் என நினைக்கிறேன். ஒரு முறை அர்ஜுனன் அடித்தான்.

அதற்கு அப்புறம் பார்த்தால் சந்தப்பேட்டை சக்தி வினாயகர் கோவில். கோவில் பெரிய விளம்பரம் இன்றி அன்றில் இருந்து இன்று வரை சாதாரணமாகவே இருக்கிறது. ஒரு வேளை பூஜை நடக்கிறது என நினைக்கிறேன். கடைசியாக நம்ம செல்வ வினாயகர் கோவில். கம்பெனி கோவில் என்பதால் பூஜைக்கும் புனஸ்காரத்திற்கும் பஞ்சமே இல்லை. இராமனாதன் செட்டியார் உடைக்கும் தேங்காய்க்கு க்யூவில் நின்றவர்கள் நிறைய பேர். என்னையும் சேர்த்துதான். 2 முறை கும்பாபிசேகம் நடைபெற்ற கோவில் இது. முதலில் வினாயகர் கோவிலும் பின்பு முருகன் மற்றும் ஐயப்பன் கோவிலும் கட்டப்பட்டன. வினாயகர் கோவில் மட்டும் இருந்த சமயத்தில் கோவிலின் கீழ் ஒரு பைப் இருக்கும். எப்பொழுதும் நல்ல தண்ணீர் வரும். கடுமையாக விளையாடும் நாம் குடிப்பது கை கால் முகம் கழுவுவதும் அங்கேதான். இப்ப அந்த பைப் அங்கே இல்லை. சம தளத்தில் இல்லாமல் 18 படி கட்டி கோவிலை தூக்கி நிறுத்தி இருப்பர்கள். இந்த அமைப்பில் இது மாதிரி ஒரு பிள்ளையார் கோவில் இது வரை நான் எங்கும் கண்டதில்லை. பரீட்சை நடக்கும் சமயங்களில் ஸ்கூலின் பின்புறம் இந்த இந்த் கோவிலின் மர நிழல்கள்தான் படிக்கும் தளம். திடீரென்று சூலபுறத்தில் இருந்து சில முஸ்லீம்கள் இந்த கோவிலுக்கு வருவதுண்டு. அவர்களை பொறுத்தவரை அது குவாரி டூர். இந்த கோவிலின் முன்புறம் கார்த்திகை மாதம் கொளுத்தப்படும் சூந்து பிரசித்தம். சூடு தனியும் முன்பே அந்த எரிந்த கொள்ளிக்கட்டைகளுக்கு ஏக டிமாண்டு இருக்கும். எடுத்துக்கொண்டுபோய் வீட்டு தோட்டத்தில் ஏதாவது ஒரு மரத்தில் செருகி வைத்தால் நன்கு காய்க்கும் என்பது ஐதீகம். “கார்த்திகை மாசம் கம்பஞ்சோறு கைவிட்டுப் பார்த்தால் நெல்லுச்சோறு” என்னும் பாட்டு அன்று எல்லோராலும் பாடப்பட்டது.

இன்னும் சுவராஸ்யங்கள் தொடரும்

Monday, August 23, 2010

பிடித்த‌ ஜொள்ளு க‌விதை!

இத்தனை பொண்ணுங்களுக்கு
மத்தியில் என்னை எப்படி
காதலித்தாய் என அப்பாவியாகக்
கேட்கிறாய்...எப்படிச் சொல்லுவேன்..
உன்னைத் தவிர
மற்ற ஃபிகர் எல்லாம் என்னை
கல்லைக் கொண்டு அடிக்காதகுறையாக
விரட்டி விட்டதை....!!!



நான் அழகா இல்லை
என் ட்ரெஸ் அழகா என
கேட்கிறாய்... உனக்கு பொய்
சொன்னா பிடிக்காது எனத்
தெரிந்தும் சொல்கிறேன்...
நீதாண்டி செல்லம் அழகு...!!


என் பர்த்டே க்கு என்னடா
தரப்போறே என உரிமையோடு
நீ கேட்கும் போதெல்லாம்
உனக்கு என்னையே தர
ஆசையாகத்தான் இருக்கிறது...
ஆனாலும் உன் ஹைஹீல்ஸ்சை
நினைத்தால் தான்
யோசனையாக இருக்கிறது...



ஏன் அவகிட்டே மட்டும்
இளிச்சு இளிச்சு பேசற என
கோபமாகக் கேட்கும்போது
எப்படி சொல்லுவேன்....
உனக்கு முன்னமே
நான் ரூட் விட்ட
ஃபிகர் அவள் என...



எனக்கு இந்த பல் எடுப்பா
இருகாடா.... எனக் கவலையாகக்
கேட்கிறாய்...
எடுப்பாய் இருப்பது பல்
மட்டும் இல்லை என பார்வைதாழ்த்தி
சொல்ல நினைத்தாலும்
உன் கிள்ளல் பொறுக்க முடியாதென
தீர்மானித்து சொல்கிறேன்..
அதாண்டி குட்டி உனக்கு அழகே....!!

Sunday, August 15, 2010

வம்சம் – விமர்சனம்

தேவர் சமுதாயத்தின் மண்ணின் மனத்துடன் ஒரு படம். கள்ளர், மறவர், அகமுடையார் என இப்படி தேவர் சமுதாயத்தின் உட்பிரிவில் உள்ள மறவர் இன மக்களின் துடிப்பான கதை. கதைக்களம் சிங்கம்பிடாரி (இப்பொழுது சிங்கம்புணரி என்று பெயர் மாற்றப்பட்ட ஊர்). கதையின் நாயகன் அறிமுகம் கலைஞர் குடும்ப வாரிசு அருள்நிதி. நாயகி நம்ம சுனைனா. நாயகிக்கு அறிமுகம் தேவையில்லை. இயக்கம் நம்ம ‘பசங்க’ பாண்டிராஜ். இயக்குனர்க்கு இது 2 வது படம்.

காலம் காலமாக நமது தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமான கோவிலும் திருவிழாவும் தான் கதையின் முக்கால்வாசி நேரத்தை ஆக்கிரமித்துள்ளது. மஞ்சு விரட்டு, பொங்கல், கிடாவெட்டு என 10 நாள் ஆக்கிரமிக்கும் திருவிழா கொண்டாட்டங்கள். அதன் இன்னொரு முகத்தை மக்களின் வக்கிர எண்ணங்கள், அன்பு, பாசத்தை அற்புதமாக காட்டி இருக்கிறார்கள். நாயகனுக்கு உடல்மொழி இன்னும் ஒத்துழைத்து இருந்தால் இன்னும் படம் நன்றாக இருந்திருக்கும். எனினும் அவரது பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கே உரிய வெயிலில் நன்றாக காய்ந்து போய் இருக்கிறார் சுனைனா. பசங்க படத்தில் சொக்கன் வாத்தியாரக வந்தவர்தான், ஜெயப்பிரகாஷ் இந்த படத்தில் வில்லன்.

கோவில்களில் தரப்படும் முதல் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் போது வம்சத்தின் பெயரை சொல்லி அழைப்பர். அப்பொழுது அந்த வம்சத்தின் வாரிசுகள் அனைவரும் வந்து அந்த மரியாதையை ஏற்றுக்கொள்வர். இது இன்றளவும் நடந்து வரும் ஒரு நிகழ்வு. அந்த வகையில் புலிவதனம், சிங்கம்பிடரி என இரண்டு தேவர் சமூக கிராமங்கள். இங்கு நடக்கும் 15 நாள் திருவிழா ஏகப் பிரசித்தம். இந்த திருவிழாவில் நடக்கும் ரேக்ளா ரேஸ், கம்புச் சண்டை, கோழிச் சண்டை என அனைத்திலும் ஜெயித்து தள்ளுபவர் லோக்கல் தாதா கிஷோர் (அருள்நிதியின் அப்பா). அவரிடம் தொடர்ந்து தோற்கும் அவமானத்தில் கடுப்பான ஊர்ப் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷ், சாராயத்தில் விஷம் கலந்து கொடுத்து கிஷோரைக் கொன்று விடுகிறார்.

அதன் பிறகு மகனுடன் அந்த கிராமத்தை விட்டே வெளியேறி ஒதுக்குப் புறமாக வசிக்கும் கிஷோரின் விதவை மனைவி, மகனை கணவனின் தாதாயிச நிழல் படாமல் நல்ல பிள்ளையாக வளர்க்கிறார்.

ஆனால் தந்தை செய்தததின் 'பலனை' அனுபவித்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அருள் நிதிக்கு. இந்த நேரம் பார்த்து அவருக்கும் பக்கத்து ஊர் சுனேனாவுக்கும் காதல் அரும்புகிறது. சுனேனாவின் அப்பாவை ஒரு விரோதத்தில் ஜெயப்பிரகாஷ் கொன்றுவிட, அந்த கோபத்தில் ஜெயப்பிரகாஷுடன் நடுரோட்டில் மோதுகிறார் சுனேனா. காதலிக்காக களம் இறங்குகிறார் அருள்நிதி. இருவரையும் போட்டுத் தள்ளப் பார்க்கிறார் ஜெயப்பிரகாஷ். இதில் யார் ஜெயித்தார்கள்? என்பது சற்றே எளிதில் யூகிக்க முடிகிற க்ளைமாக்ஸ்.

கதை பழசுதான் என்றாலும், அதற்கு பாண்டிராஜ் போட்டிருக்கும் பாலீஷ், அட சொல்ல வைக்கிறது. திருவிழாக் காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம் அத்தனை நேர்த்தி. எப்போது கிராமத்துக்குப் போவோம் என்ற ஏக்கத்தையே உண்டாக்கிவிடுகின்றன அந்தக் காட்சிகள்.

படத்தில் உண்மையாக ஜெயப்பிரகாசின் நடிப்பு மெச்சத்தக்கதாகவே உள்ளது. அறிமுக காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை மனிதர் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். காமெடிக்கு கஞ்சா கருப்பு. பரவாயில்லை. மாட்டிற்கும் பூனைக்கும் அசின், த்ரிசா என பெயரிட்டது கூட ஒரு காமெடிதான்.
பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும், கதைக்கு தேவையான அளவே பாடல்கள் உள்ளன. பின்னணி இசை பிரம்மாதம். ஆனால் வசன உச்சரிப்புகள் அனைவருக்கும் புரியுமா என தெரியவில்லை. புதுக்கோட்டைக்காரன் என்கிற முறையில் எனக்கு புரிந்தது. ஆனால் சென்னைக்காரர்களுக்கு கண்டிப்பாக இரண்டாவது முறை பார்க்கும் போது தான் புரியும். 2 தடவை பார்க்கலாம் இந்த படத்தை.

நான் கல்லூரி படிக்கும் சமயம் சிங்கம்புணரியில் என் நண்பனது அழைப்பிற்கிணங்க அந்த ஊர் திருவிழாவின் மஞ்சுவிரட்டினை பார்த்திருக்கிறேன். அந்த நிகழ்வை 20 வருடங்கள் கழித்து நேரில் பார்த்தது போன்ற பரவசம்.

இரண்டாவது படத்திலும் ஜெயித்துவிட்டார் நம்ம பாண்டிராஜ். அடுத்த படத்திலும் இதே நேட்டிவிட்டியுடன் வெற்றி பெறவேண்டும் என நமது நண்பர்கள் சார்பில் வாழ்த்துவோம்.

பாரதிராஜாவுக்கு அடுத்து ஒரு பாண்டிராஜ். தமிழ் சினிமா நல்லா இருக்கும் இது போன்ற இயக்குனர்களால்.

Wednesday, August 11, 2010

Monday, August 9, 2010

வள்ளல்களும் வாழ்ந்த நாடுகளும் – தெரிந்த விசயங்களும் தெரியாத உண்மைகளும்

1. பாரி
2. ஆய்
3. அதியமான்
4. நள்ளி
5. மலயன்
6. பேகன்
7. ஓரி

பாரி – வள்ளல்களிலியே இவர்தான் பெரிய வள்ளலாக சிறப்பு பெற்றிருக்கிறார். இவர் ஆண்ட நாடு பறம்பு மலை. தற்காலத்தில் பிரான்மலை என அழைக்கப்படுகிறது. இவர் வஞ்சகமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இவரின் மகள்களே அங்கவை, சங்கவை. இந்த பிரான்மலை இப்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் இருக்கிறது. உறங்காப்புளி என்னும் புளிய மரம் இங்கு விசேசம். சாதாரண புளியமரங்கள் இரவில் இலை மூடி உறங்கும். உறங்காப்புளி எப்பொழுதும் இலை திறந்தே இருக்கும். முல்லைக்கு தேர் கொடுத்தவன் என்று அறியப்பட்டவன்

ஆய் - இவன், பொதிய மலையினிடத்து உள்ள ஆய் குடியைத்
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். அதனால் ஆய் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுவர். வேள் ஆய், ஆய் அண்டிரன் என்னும் பெயர்களாலும் இவன் அழைக்கப்படுகிறான். பெறுவதற்கு அரிய சிறந்த மணியையும், ஆடையையும் இவன் பெற்றிருந்தான். சிவபெருமான் மீது கொண்டிருந்த பேரன்பால் அவற்றை இறைவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான். இவன், 'ஆர்வ நன்மொழி ஆய்' என்று அழைக்கப்படுகிறான். அள்ளிக் கொடுத்து அயராதவன் அய்கண்டபிரான்

அதியமான் - அதியமான் நெடுமான் அஞ்சி” கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவ்வைக்கு நீண்ட ஆயுள் அளிக்கக் கூடிய அரிய நெல்லிக்கனியை தந்தவர். இவரது மகனின் பெயர் “அதியமான் பொகுட்டெழினி”. அதியமான்கள் தகடூரை மையமாய் கொண்டு மேற்கில் நாமக்கல், கிழக்கில் ஆற்காடு, வடக்கில் மைசூர், தெற்கில் கொங்கு நாட்டை எல்லையாகக் கொண்ட பகுதியை ஆண்டனர். தகடூர் என்பது இன்றைய தருமபுரியை குறிக்கிறது. தருமம் செய்வது கடமை என கொண்ட அதியமானின் ஊர் தருமபுரி என அழைக்கலாயிற்று. கரும்பு பயிரிடுதலை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் அளித்தவர் இவரே. அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர்தான் அவ்வைக்கு கனி கொடுத்தவர். இவருடைய வழித்தோன்றல்கள் அனைவருமே அதியமான் என பெயர் கொண்டவர்கள்தாம். தொண்டைமான் போல. சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிட்ட சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான். அவனது மார்பகத்தே வேல் பாய அவன் மாய்ந்து வீழ்ந்த போது ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார். "மாற்றானின் வேல் அவன் மார்பில் மட்டுமா தைத்ததது! இல்லை இரப்போர் கைகளை துளைத்து, அவனது குடிகள் கண்ணீர் சொரிய, நல்ல புலவர்களின் நாவையும் அல்லவா துளைத்தது. இனி பாடுநர் யாரிருக்கிறார்கள்? பாடுவோருக்கு அளிப்பவர்தாம் யாரிக்கிறார்கள்? என்று. இந்த பெருஞ்சேரல் இரும்பொறைதான் கரூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த சேர மன்னன். அவர்கள் காலத்தில் நமது ஊரின் பெயர் வஞ்சி.
நள்ளி - வளம் செறிந்த கண்டீர நாட்டைச் சேர்ந்தவன் நள்ளி.
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதும், உள்ளத்தில் கருணை இல்லாமல் பிறர்க்கு ஈதலும் (கொடுத்தல்) பயன் தராது என்ற கொள்கை உடையவன். நளிமலை நாடன் நள்ளி என்னும் பெயரை பார்க்கும்பொழுது இவனும் மலை நாட்டை ஆண்டவன் என தெரிகிறது. தோட்டி மலை எனவும் இந்த மலை அறியப்படுகிறது.
மலயன் - மலையமான் திருமுடிக்காரி என்பது இவன் முழுப்பெயர் ஆகும். இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும். மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம். மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. மலாட்டை ஆண்ட சிறந்த மன்னர்களுள் மலையமான் திருமுடிக்காரி முகன்மையான அரசர் ஆவார். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் காரி என்றும் அழைக்கப் படுபவர் ஆவார். காரி, சிறந்த வீரர். 'தடக்கை வேல் காரி' என்று சிறப்பிக்கப் படுபவர்; உயர்ந்த வள்ளலாகவும் விளங்கியவர். மலையமான் நாடான மலாட்டில் கொடுங்கால் என்ற நகரம் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. திருமுடிக்காரி, கொல்லிமலையை ஆண்ட மன்னன் ஓரியைப் போரில் கொன்று, கொல்லிக் கூற்றத்தைச் சேரனுக்குத் தந்ததை அறிய முடிகின்றது வளம் மிக்க மலாட்டுப் பகுதியினைக் கைப்பற்றவும், ஓரியைத் திருமுடிக்காரி போரில் கொன்றதற்குப் பழி தீர்க்கவும் அதிகமான் நெடுமான் அஞ்சி கோவலூரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டார். மலையமான் திருமுடிக்காரி கொடைத் திறன் மிக்கவர்; கடையெழு வள்ளல்களுள் ஒருவர். இவருக்குப் பின், இவர் மகன் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்தில் மலாடு சோழர்களின் ஆட்சிக்கு உடபட்டிருந்தது.

பேகன் - பருவ மழை தவறாது பெய்யும் வளம்மிக்க மலை நாட்டை
உடையவன் பேகன். மயில் காட்டில் அகவியதை இவன் கேட்டான்.
குளிரால் நடுங்கியே மயில் அகவியது என்று எண்ணினான். அதன்
மீது மிகுந்த இரக்கம் கொண்டான். அம் மயில் மீது தன் விலை உயர்ந்த கலிங்கப் பட்டாடையை அதற்குப் போர்த்தினான். ஆனால் இந்த அரசன் கட்டிய மனைவியை தவிக்க விட்டு மாற்றான் தோட்டத்து மல்லிகையை நாடியவன் என கபிலர் எனும் புலவர் தன் பாட்டில் சொல்லி இருக்கிறார். ஆவியர் எனும் குடியில் பிறந்த இவனும் மலையக நாட்டினை ஆண்ட அரசனாவான்.

ஓரி - ஓரி என்பவன் அக்கொல்லிமலையை அப்பொழுது ஆண்டு கொண்டிருந்தவன். அவனது வில் திறனால் வல்வில் ஓரி எனப்பட்டான். அவனுக்கு ஆதன்ஓரி என்றும் பெயர் உண்டு. மிக வேகமாகச் செல்லும் ஓரி என்றே பெயர் பெற்ற குதிரையை உடையவன். ஓரி இசையிலும் நாட்டியத்திலும் மிகமிக ஈடுபாடு கொண்டவன். அவனிடம் வந்த கூத்தர்களுக்கு பொன்னினால் குவளைமலர் செய்து வெள்ளி நாரிலே தொடுத்து மாலையாக அணிவித்து ஏராளமான செல்வத்தை அளிப்பான். நாட்டியம் புரிவோருக்கும் இசை வாணருக்கும் ஏராளமான செல்வத்தைக் கொடுத்ததாலேயே கடையேழு வள்ளல்களில் ஒருவனாக புலவர்களால் பாடப்பட்டான். அவன் கொடுத்த செல்வத்தால் கூத்தரும் விறலியரும் ஆடலையும் பாடலையும் கூட மறந்து விடுவாராம். அவன் மீது ஒரு வண்ணம் இசை பாடினான் ஒரு பாணன். உடனிருந்த விறலியர் யாழ் இசைத்தனர். சிறுபறையையும் பெருவங்கியம் என்னும் கருவியையும் இசைத்தனர். அவனை 21 பாடல் துறைகளிலும் பாடல் இசைத்துப் பாடினராம். பாணன் "அப்பேர்பட்ட பெருமகனே" எனப் பாட தன் பெயர் கேட்க நாணி ஏராளமான செல்வம் கொடுத்தானாம். ஆதலால் மிகச் சிறந்த புரவர்களாகிய கபிலர், பரணர், பெருஞ்சித்திரனார், கல்லாடனார் போன்றோர் அவனைப் பாடினர். அவனது கொல்லி மலையை "ஓரி கொல்லி" என்றும் பாடினர். இவ்வளவு புகழ்வாய்ந்த ஓரி ஏனோ சேரனோடு பகமை பூண்டான். ஒளவைப் பிராட்டிக்கு நெல்லிக்கனி கொடுத்து இறவாப் புகழ் கொண்டானே அதியமான் நெடுமான் அஞ்சி. அவன் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். அது கொல்லி மலைக்கு வடக்கே 60 கல் தொலைவில் உள்ளது. அதியமானும் சேரனுடன் பகைமை பூண்டான். அதியமான், ஓரி, சோழன் பாண்டியன் ஆகியோர் கூட்டாக இணைந்து சேரல் இரும்பொறையை ஒடுக்க விரும்பினர். அதனால் இருதரப்பினருக்கும் கடும் போர் மூண்டது. முதலில் மலையமான் திருமுடிக்காரி கொல்லி மலைமீது படையெடுத்து ஓரியோடு போரிட்டான். பேராற்றல் மிகுந்த காரியோடு ஓரியால் சமமாகப் போரிட முடியவில்லை. போரில் ஓரியைக் கொன்று கொல்லிமலையைக் கைப்பற்றி சேரனிடம் ஒப்படைத்தான் காரி. அதே நேரத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லிக் கூற்றத்தில் நீர்கூர் என்ற இடத்தில் அதியனையும், சோழனையும், பாண்டியனையும் போரில் முறியடித்தான். சோழனும், பாண்டியனும் தமது போர் முரசுகளையும் கொற்றக் குடைகளையும் முடி முதலிய கலன்களையும் இழந்து ஓடினர். சேரன் பெற்ற வெற்றி மிகப்பெரும் வெற்றி. அதோடு அவன் விடவில்லை. அவர்களுக்கு உதவிய அதிகனைச் துரத்திச் சென்றான். அவனுடன் அவனுடைய தானைத் தலைவன் பிட்டன் கொற்றனும் இருந்தான். இவர்கள் முன் நிற்க இயலாமல் அதியமான் அஞ்சி தகடூர்க் கோட்டைக்குள் சென்று மறைந்து கொண்டான். தகடூரை முற்றுகையிட்டான் சேரன். பின்னர் ஏற்பட்ட போரில் அதிகமான் மார்பிலே வேல் தைத்து இறந்து வீழ்ந்தான். இதை ஒளவை பார்த்தாள் பதறினாள்.

மொத்தத்தில் சில வள்ளல்கள் சூழ்ச்சியாலும் சிலர் போரினாலும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இதில் பாரியும் ஓரியும் மிக ஒழுக்க சீலர்களாகவும் அடுத்தவன் நாட்டிற்கு ஆசைப்படாதவனாகவும் இருந்திருக்கின்றான். அதியமான் இன்னொரு வள்ளலுக்காக உயிரை இழந்ததன் மூலம் மிகப்பெரிய வள்ளலாகிறான். இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று எதுவெனில் அனைத்து வள்ளல்களுமே சிற்றரசர்கள்தான். மேலை மலையக நாடுகளை ஆண்டிருக்கிறார்கள். அந்த மலைகள் இன்றைய காலகட்டத்திலுமே பெரும் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது (கொல்லிமலை, பிரான்மலை). அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நோக்கினால் அது வெறும் காடுகளாகவே இருந்திருக்கும்.
இன்னும் சிந்திப்போம்!

Sunday, August 1, 2010

நம்ம ஊரு சங்கதி

ஹாய்! எப்படி இருக்கீங்க எல்லாரும்… நேற்று கரூரில் சில நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.. ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கும் வழக்குச்சொல் பற்றிய பேச்சு நடந்து கொண்டிருந்தது. அவரவர்கள் ஊர்களில் பேசும் வழக்குச்சொல்லுக்கு அடுத்தவர்கள் விளக்கம் சொல்ல வேண்டும். சற்றேறக்குறைய எல்லோரின் கேள்விகளுக்கும் நான் பதிலை சொல்லிவிட்டேன். ஆனால் நான் சொன்ன பல வார்த்தைகளுக்கு அவர்களுக்கு அர்த்தம் தெரியவில்லை. காரணம் அவை நாம் குவாரியில் மட்டுமே கேள்விப்பட்ட வார்த்தைகள்.. அவைகளில் சில உங்கள் பார்வைக்கு

1. அனிபுல்
2. 904
3. ரீச் குழி
4. டார்மெண்ட்ரி
5. 3 ½ - 12 & 6:00 – 2:00
6. லோக்கோ
7. லோடர், டெம்பர்
8. ஹால்பாக்
9. பென்சு கடை
10. டாம் டாம்

சுவாரஸ்யமாக இருந்தது இந்த போட்டி. இதில் டார்மெண்ட்ரி மட்டும் ஒருத்தன் கண்டுபிடிச்சான். மததது எல்லாம் யாருக்குமே தெரியவில்லை.