தேவர் சமுதாயத்தின் மண்ணின் மனத்துடன் ஒரு படம். கள்ளர், மறவர், அகமுடையார் என இப்படி தேவர் சமுதாயத்தின் உட்பிரிவில் உள்ள மறவர் இன மக்களின் துடிப்பான கதை. கதைக்களம் சிங்கம்பிடாரி (இப்பொழுது சிங்கம்புணரி என்று பெயர் மாற்றப்பட்ட ஊர்). கதையின் நாயகன் அறிமுகம் கலைஞர் குடும்ப வாரிசு அருள்நிதி. நாயகி நம்ம சுனைனா. நாயகிக்கு அறிமுகம் தேவையில்லை. இயக்கம் நம்ம ‘பசங்க’ பாண்டிராஜ். இயக்குனர்க்கு இது 2 வது படம்.
காலம் காலமாக நமது தமிழ்க் கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமான கோவிலும் திருவிழாவும் தான் கதையின் முக்கால்வாசி நேரத்தை ஆக்கிரமித்துள்ளது. மஞ்சு விரட்டு, பொங்கல், கிடாவெட்டு என 10 நாள் ஆக்கிரமிக்கும் திருவிழா கொண்டாட்டங்கள். அதன் இன்னொரு முகத்தை மக்களின் வக்கிர எண்ணங்கள், அன்பு, பாசத்தை அற்புதமாக காட்டி இருக்கிறார்கள். நாயகனுக்கு உடல்மொழி இன்னும் ஒத்துழைத்து இருந்தால் இன்னும் படம் நன்றாக இருந்திருக்கும். எனினும் அவரது பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்திற்கே உரிய வெயிலில் நன்றாக காய்ந்து போய் இருக்கிறார் சுனைனா. பசங்க படத்தில் சொக்கன் வாத்தியாரக வந்தவர்தான், ஜெயப்பிரகாஷ் இந்த படத்தில் வில்லன்.
கோவில்களில் தரப்படும் முதல் மரியாதையை ஏற்றுக்கொள்ளும் போது வம்சத்தின் பெயரை சொல்லி அழைப்பர். அப்பொழுது அந்த வம்சத்தின் வாரிசுகள் அனைவரும் வந்து அந்த மரியாதையை ஏற்றுக்கொள்வர். இது இன்றளவும் நடந்து வரும் ஒரு நிகழ்வு. அந்த வகையில் புலிவதனம், சிங்கம்பிடரி என இரண்டு தேவர் சமூக கிராமங்கள். இங்கு நடக்கும் 15 நாள் திருவிழா ஏகப் பிரசித்தம். இந்த திருவிழாவில் நடக்கும் ரேக்ளா ரேஸ், கம்புச் சண்டை, கோழிச் சண்டை என அனைத்திலும் ஜெயித்து தள்ளுபவர் லோக்கல் தாதா கிஷோர் (அருள்நிதியின் அப்பா). அவரிடம் தொடர்ந்து தோற்கும் அவமானத்தில் கடுப்பான ஊர்ப் பெரிய மனிதர் ஜெயப்பிரகாஷ், சாராயத்தில் விஷம் கலந்து கொடுத்து கிஷோரைக் கொன்று விடுகிறார்.
அதன் பிறகு மகனுடன் அந்த கிராமத்தை விட்டே வெளியேறி ஒதுக்குப் புறமாக வசிக்கும் கிஷோரின் விதவை மனைவி, மகனை கணவனின் தாதாயிச நிழல் படாமல் நல்ல பிள்ளையாக வளர்க்கிறார்.
ஆனால் தந்தை செய்தததின் 'பலனை' அனுபவித்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அருள் நிதிக்கு. இந்த நேரம் பார்த்து அவருக்கும் பக்கத்து ஊர் சுனேனாவுக்கும் காதல் அரும்புகிறது. சுனேனாவின் அப்பாவை ஒரு விரோதத்தில் ஜெயப்பிரகாஷ் கொன்றுவிட, அந்த கோபத்தில் ஜெயப்பிரகாஷுடன் நடுரோட்டில் மோதுகிறார் சுனேனா. காதலிக்காக களம் இறங்குகிறார் அருள்நிதி. இருவரையும் போட்டுத் தள்ளப் பார்க்கிறார் ஜெயப்பிரகாஷ். இதில் யார் ஜெயித்தார்கள்? என்பது சற்றே எளிதில் யூகிக்க முடிகிற க்ளைமாக்ஸ்.
கதை பழசுதான் என்றாலும், அதற்கு பாண்டிராஜ் போட்டிருக்கும் பாலீஷ், அட சொல்ல வைக்கிறது. திருவிழாக் காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம் அத்தனை நேர்த்தி. எப்போது கிராமத்துக்குப் போவோம் என்ற ஏக்கத்தையே உண்டாக்கிவிடுகின்றன அந்தக் காட்சிகள்.
படத்தில் உண்மையாக ஜெயப்பிரகாசின் நடிப்பு மெச்சத்தக்கதாகவே உள்ளது. அறிமுக காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை மனிதர் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். காமெடிக்கு கஞ்சா கருப்பு. பரவாயில்லை. மாட்டிற்கும் பூனைக்கும் அசின், த்ரிசா என பெயரிட்டது கூட ஒரு காமெடிதான்.
பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும், கதைக்கு தேவையான அளவே பாடல்கள் உள்ளன. பின்னணி இசை பிரம்மாதம். ஆனால் வசன உச்சரிப்புகள் அனைவருக்கும் புரியுமா என தெரியவில்லை. புதுக்கோட்டைக்காரன் என்கிற முறையில் எனக்கு புரிந்தது. ஆனால் சென்னைக்காரர்களுக்கு கண்டிப்பாக இரண்டாவது முறை பார்க்கும் போது தான் புரியும். 2 தடவை பார்க்கலாம் இந்த படத்தை.
நான் கல்லூரி படிக்கும் சமயம் சிங்கம்புணரியில் என் நண்பனது அழைப்பிற்கிணங்க அந்த ஊர் திருவிழாவின் மஞ்சுவிரட்டினை பார்த்திருக்கிறேன். அந்த நிகழ்வை 20 வருடங்கள் கழித்து நேரில் பார்த்தது போன்ற பரவசம்.
இரண்டாவது படத்திலும் ஜெயித்துவிட்டார் நம்ம பாண்டிராஜ். அடுத்த படத்திலும் இதே நேட்டிவிட்டியுடன் வெற்றி பெறவேண்டும் என நமது நண்பர்கள் சார்பில் வாழ்த்துவோம்.
பாரதிராஜாவுக்கு அடுத்து ஒரு பாண்டிராஜ். தமிழ் சினிமா நல்லா இருக்கும் இது போன்ற இயக்குனர்களால்.
அற்புதமான விமர்சனம் கார்த்தி!..படத்தை இன்னும் பார்க்கவில்லை..ஆனால் பார்த்ததொரு விளக்கம்..தேவர்கள் பற்றிய படம் என்று சொன்னதால் படத்தை பார்க்கும் ஆவல் கூடுவதை தவிர்க்க முடியவில்லை..மதுரைக்காரன் என்பதால்...!!! ☺
ReplyDeleteகண்டிப்பாக பார் சரவணா.. பாதியில் இருந்து பார்த்தால் புரியாது. படத்தை முதலில் இருந்து பார்க்கவேண்டும்.
ReplyDelete