Friday, October 11, 2013

கிரிக்கெட்டின் கடவுள் – சச்சின்

உலகில் கிரிக்கெட் ஒரு மதம் எனில் சச்சின் அதன் கடவுள். இது மிகையான வார்த்தை இல்லை என நினைக்கிறேன். இன்று இத்தனை பேர் கிரிக்கெட் பார்க்கிறார்கள் எனில் பார்க்க வைத்தவர் சச்சின்.

24 ஆண்டுகளாக இந்திய அணிக்காக ஆடி வரும் சச்சின் எந்த ஒரு டெஸ்ட் விளையாடும் அணிக்கு எதிராகவும் சதங்களை சாதாரணமாக விளாசியவர். உலகையே ஆட்டத்தில் மிரட்டியவர்கள் ஆஸ்திரேலியர்கள் என்றால் அவர்களை ஆட்டத்தில் மிரட்டியவர் சச்சின். இவரின் சம காலத்தில் அறிமுகமான இன்சமாம் உல் ஹக் மற்றும் பிரயன் லாரா ஆகியோர் போன்ற ஜாம்பவான் வீரர்களைக்கூட பின்னுக்கு தள்ளி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார். குள்ளமான உருவம், மெலிந்த குரல் எனினும் வலுவான ஆக்ரோஷமான ஆட்டத்தில் தனது முத்திரையை பதித்தார். இவர் மைதானத்தில் இருக்கும் வரை வெற்றி என்பதை எதிர் அணியினர் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். இதை எல்லா அணித்தலைவர்களும் ஒப்புக்கொள்ளவே செய்தார்கள். பந்து வீச்சிலும் சிறந்தவர். சச்சின் சாதனைகளை டைப் செய்ய ஆரம்பித்தால் கையே வலி கண்டுவிடும். இவரின் சாதனைகளை ஒருவர் சமன் செய்யவேண்டும் எனில் அவர் 16 வயதில் ஆட வந்து 25 ஆண்டுகள் தொடர்ந்து ஆட வேண்டும். இது நடைமுறையில் சாத்யமில்லை.


பூஜ்ஜியத்தில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்து ராஜ்ஜியத்தையே வென்றார் சச்சின். எத்தனையோ சோதனைகள், எத்தனையோ வேதனைகள் எல்லாவற்றையும் கடந்து வெற்றிக்கொடி நாட்டியவர். நிறைய அறுவை சிகிச்சைகள் செய்து மறுபடியும் அதே தெம்புடன் களம் கண்டார். இவரின் பயிற்சியாளர் ஆச்ரேகர் ஒரு பழக்கம் வைத்துள்ளார். என்னவெனில் வலை பயிற்சியில் ஒரு நாள் முழுவது யார் ஒருவர் அவுட் ஆகாமல் விளையாடுகிறாரோ அவருக்கு ஒரு ரூபாய் நாணயத்தினை வழங்குவார். அவரிடம் அதிகபட்சமாக (13) நாணயங்களை பரிசாக பெற்ற ஒரே சிஷ்யர் சச்சின். 

ரஞ்சி, இரானி மற்றும் துலிப் ட்ராபிகளின் அறிமுக ஆட்டத்தில் சதம் அடித்து கணக்கினை தொடங்கிய ஒரே வீரரும் இவரே. டில்லியில் உள்ள பிரபல திகார் ஜெயிலில் ஒரு வார்டிற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பத்ம விபூஷன், ராஜீவ் கேல் ரத்னா விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமான படையில் கவுரவ பதவி, ராஜ்யசபையில் எம்.பி. பதவி போன்ற கவுரவ பதவிகளும் பெற்றவர். ஆஸ்திரேலியா அணியில் மட்டும் விளையாடும் வீரர்களில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் ”ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா” விருது பெற்ற வெளி நாட்டு வீரர் இவர் மட்டுமே. ஒரு நாள் போட்டிகளில் 49 சதம் மற்றும் 96 அரை சதம் என மொத்தம் 18426 ரன்களை குவித்த இயந்திர மனிதன் சச்சின். விளம்பர வருவாயை நீண்ட ஆண்டுகளாக அதிகம் பெற்ற இந்திய வீரரும் இவரே. ஹோட்டல் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி ஒரு டாக்டர். மகன் அர்ஜுனும் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக தயாராகி வருகிறார். சாரா என்ற மகளும் உண்டு. 


இந்திய அணிக்காக விளையாடப்போகும் கடைசி ஆட்டமாக இவரது 200 வது டெஸ்ட் அமைய உள்ளது. ஒய்விற்கு பிறகு இந்திய அணியில் ஆலோசனையாளராக வந்து அடுத்த தலைமுறைக்கு இவரது அனுபவத்தினை அளிக்க வேண்டும் என்பது அனைவரது ஆவல்.

உலகில் கிரிக்கெட் ஒரு மதம் எனில் சச்சின் அதன் கடவுள். இது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை அல்ல. முற்றிலும் உண்மையே.

2 comments:

  1. Sorry karthik..once upon a time...visited this blog..
    ippa thaan thonuchu...paakanumnu...

    You r great...! karthi machi

    ReplyDelete
  2. Welcome machi.. நேரம் கிடைக்கும் சமயம் வந்து பார்..

    அப்புறம் வீட்ல சவுக்கியம்தானே.. போன் பண்ணலாம் தானே! பேசி எவ்வளவு நாளாச்சு

    ReplyDelete