Thursday, October 24, 2013

சாந்தி முகூர்த்தம் – சிறிய விளக்கம்
சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் என்னிடம் ஒரு குழப்பமான கேள்வியை கேட்டார். யாதெனில், முதன் முதலில் கணவன் மனைவி சேர்வதற்கு சாந்தி முகூர்த்தம் என்றொரு முகூர்த்தம் தேவையா என்ன என்பது. சிலர் இதற்கு முக்கியத்துவம் அளிக்க சிலர் அளிப்பது இல்லையே! இதன் பின் விளைவுகள் என்ன? மிக நல்ல கேள்வி. இதற்கு பதிலை அவருக்கு அளித்துவிட்டேன் எனினும் நிறைய மக்களுக்கு இதன் பொருட்டு சந்தேகங்கள் இருப்பின் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

முதலில் சாந்தி முகூர்த்த விளக்கத்தினை பார்ப்போம். கணவனும் மனைவியும் கைப்பிடிக்க மணம் முடிக்க ஒரு முகூர்த்தமும் கலவிக்கு ஒரு முகூர்த்தமும் என இரு முகூர்த்தங்கள் இருக்கின்றன. இந்த இரு விசயத்திற்கு தான் நிறைய முக்கியத்துவங்கள் இருக்கின்றன என்பதால் அதை முகூர்த்த நேரத்தில் செய்யவேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.

ஒரு முகூர்த்தம் என்பது 1½ மணி நேரம் (3¾ நாழிகை) என்பது கணக்கு. ஒரு வருடத்திற்கு சுத்தமான முகூர்த்தம் என்பது ஒரு சில மட்டுமே கிடைக்கிறது. அந்த நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைத்தால் சிறப்பு. ஆனால் அந்த முகூர்த்தத்திற்காக காத்திருத்தல் என்பது இன்றைய சூழ் நிலையில் ஒவ்வாத விசயம். சில நேரங்களில் அந்த நேரம் சில நாட்களில் அந்தி நேரம் ஏன் பகலில் கூட வந்து விடும். சுத்தமான முகூர்த்தம் என்றால் மாந்தி நிற்காத (பார்க்காத) நல்ல ஓரை, கரணம், முக்குண வேளை, நட்சத்திர தியாச்சியம், வேதை, சுப விலக்கு, கரி நாள், யோகம், சூலம், யோகினி நிற்கும் திசை, ஜீவன், வக்கிர நிலைகள், பிறை அம்சங்கள், கோள் சாரம், விஷ கடிகை, தோஷங்கள், வாசி, பஞ்ச பட்சி, சகுனங்கள், சூனியங்கள், மாதவிலக்கு கணக்குகள், தசாபுத்தி மற்றும் ஆண் மற்றும் பெண்ணின் ராசிகள் போன்றவற்றை கணித்து தீயவைகளை ஒதுக்கி நல்ல முகூர்த்தம் கண்டு இந்த நேரத்தின் முக்கியத்துவத்தினை மணமக்களுக்கு முன்பே எடுத்து சொல்லி தயார் நிலைக்கு கொண்டு வரவேண்டும். FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION என்னும் ஆங்கில பழமொழியை இங்கு நாம் மனதில் கொள்ளவேண்டும். ஆரம்பம் சரியான நேரம் எனில் அடுத்து எல்லாமே சுபமே. மிக நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை மிக நன்றாக நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அகால சேர்க்கையில் உண்டாகும் பலன்களை சொல்ல ஆரம்பித்தால் பக்கம் பக்கமாக எழுத வேண்டி வரும். இதன் விளைவாக வரும் குழந்தைகள் தானும் சிரமப்பட்டு சமுதாயத்தினையும் சிரமப்படுத்தும். துரதிர்ஷ்டம் யாதெனில் இப்பொழுது எல்லாம் திருமணத்திற்கு நாள் குறிக்க தேர்ந்த குருக்கள் அல்லது ஜோதிடரிடம் செல்லாமல் காலண்டரை பார்த்து அவர்களே நாள் குறித்து கொள்கின்றனர். அப்புறம் திருமண மண்டப தேவைக்காகவும் நாட்கள் குறிக்கப்படுகின்றன. மேலும் திருமண இரவில் நல்ல நேரம் கூட பார்க்காமல் சாந்தி முகூர்த்த ஏற்பாட்டை நடத்தி விடுகின்றனர். இதனால் பிறக்கும் குழந்தையின் குணம், ஆரோக்கியம் என பல முக்கிய இடங்களில் குறைகள் ஏற்படலாம். பிறப்பு சரியாக இருந்தால் வளர்ப்பு எளிதாகும். இல்லை எனில் இதற்காக நிறைய மெனக்கெடவேண்டும். நம் கடமையை சரியாக செய்து விட்டால் பலன் சரியாகவே இருக்கும். பலருக்கு இயல்பாகவே நல்ல நேரத்தில் முகூர்த்தம் அமைந்து விடுகிறது. அவர்கள் அதை கணித்து தெரிந்துகொள்ளவில்லை என்றாலும் நல்ல நேரம் நல்ல நேரமே.

காதலித்து மணம் முடிப்பவர்களின் விசயத்தில் பார்த்தோமேயானால், அவர்களில் உடலில் இருந்து வரும் அலைக்கற்றைகள் (wave length & vibration) ஒன்றையொன்று ஈர்த்தே இருக்கும். அதனால்தான் அவர்களுக்குள் காதல் ஈர்ப்பே வருகிறது. எனவே கந்தர்வ விவாக கூடல்களில் கால நேரங்கள் அனிச்சையாகிறது. அனால் நாடக காதல்களில் முடிவு நன்றாக இருப்பதில்லை.  நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் இவைகளையும் முன்கூட்டியே கணக்கிட்டு நிச்சயத்துவிட வேண்டும். மேற்கூறிய உடல் அலைகள் சேர்வதற்காக நிறைய சடங்குகளை பெரியவர்கள் விளையாட்டுக்கள் வாயிலாக நமக்கு அளித்திருக்கிறார்கள். குறைந்தது 7 நாட்களுக்கு முன்பிருந்தே மணமக்களுக்கு நல்ல உணவுகளை அளிக்க வேண்டும். அதனால் திசு உற்பத்தி நன்றாக இருக்கும். எளிதில் சீரணம் ஆகும் நல்ல சத்து நிறைந்த உணவுகளாக இவை இருக்க வேண்டும் என்பது முக்கியம். திருமணம் வரை உடலில் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. சாந்தி முகூர்த்த நேரமாக குறிப்பிட்டு தரும் முகூர்த்த வேளையில் உணவு ஏதும் அருந்தக்கூடாது. அதற்கு முன்போ பின்போ சாப்பிட தடை இல்லை. கலவி நேரத்தில் பேசவும் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. இல்லை எனில் பிறக்கும் குழந்தையின் பேச்சுத்திறன் மற்றும் வாதத்திறனில் குறை இருக்கும்.

சாந்தி முகூர்த்த மனம் மற்றும் உடல் ஒற்றுமைகளை பொருத்தம் பார்க்கும் சமயமே (வேதை பொருத்தம்) கண்டுகொள்ள முடியும். தேர்ந்த ஜோதிடர் இதை எளிதில் கண்டு விடுவார். பொருத்தம் பார்க்கும் சமயத்தில் சில பொருத்தங்கள் இல்லை எனில் அதமம் என ஒதுக்கிவிடுவர். அதில் ரச்சு மற்றும் வேதை முக்கியம்.

அதே போல சூரியன் நின்ற நட்சத்திரத்தில் இருந்து மூலம் நட்சத்திரம் வரை எண்ணிக் கணக்கிட்டு எத்தனை எண் வருகிறதோ அதே எண் அளவு பூராட நட்சத்திரத்தில் இருந்து எந்த நட்சத்திரத்தில் முடிகிறதோ அதே எண் தான் லாடம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இது வாழ் நாள் முழுவது விலக்க வேண்டிய நட்சத்திரம் ஆகும். எளிதில் விளங்க, ஒருவனின் ஜாதகத்தில் சூரியன் பூசம் நட்சத்திரத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். கணக்கிட்டால் பூச நட்சத்திரத்தில் இருந்து 12வது நட்சத்திரமாக மூலம் வரும். அதன் பிறகு பூராட நட்சத்திரத்திலிருந்து கணக்கிட்டால் 12வது  நட்சத்திரமாக ரோஹிணி வரும். இந்த நட்சத்திரமே அந்த ஜாதகருக்கு லாடம் ஆகும். இந்த நட்சத்திர தினத்தை எப்பொழுது நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. இது பின் வரும் கணவன் மனைவி சேர்க்கைக்கும் பொருந்தும். அவரவர்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலையை பாதசார நிலையில் காண  முடியும். குழப்பம் இருப்பவர்கள் தேர்ந்த ஜோதிடரிடம் தெரிந்து கொள்ளவேண்டும்.

வேதனை என்னவெனில் மக்கள் தாங்கள் ஏற்கன்வே எடுத்துவிட்ட முடிவை ஜோதிடரின் வாயில் இருந்து வரவழைக்க நினைப்பதுதான். ஒரு விசயத்தினை செய்யக்கூடாது என சொன்னால் மக்கள் விடுவதில்லை. அப்படி செய்தால் என்ன விளையும் எனவும் அதற்கு பரிகாரங்கள் என்ன என்றும் ஜோதிடர்களை குடையக்கூடாது. அவர் குரு ஸ்தானத்தில் இருக்கிறார் என்பதை மனதில் கொள்ளவேண்டும். பணம் (தட்சனை) பெறுவதால் அவர் நமக்கு ஊழியர் அல்லர். தட்சனை என்பது அவரின் வாழ்க்கையை நடத்தத்தானே அன்றி உங்களின் கருத்துக்களை திணிக்க அல்ல. வேண்டாம் என்று சொல்லப்பட்டு விட்டால் விட்டுவிட வேண்டும். மாற்று வழிகளையே சிந்திக்க வேண்டும். காலண்டரில் நாட்களை கண்டு குறித்துக்கொண்டு பின் மண்டபத்திற்கு முன் தொகையும் அளித்துவிட்டு பிறகு ஜோதிடரிடம் வருவது தவறாகும். ஜோதிடரிடம் மணமக்களுக்கு பொருத்தமான நாட்களை கணித்து பெற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு மற்ற பணிகளை தொடங்குவதே சரி. திருமணத்தை அதற்குரிய முகூர்த்த நேரத்தில் தான் செய்யவேண்டும். பிரம்ம முகூர்த்தம் கூட சரி கிடையாது. மற்ற எந்த ஒரு வேலைக்காகவும் / நபருக்காகவும் முகூர்த்த நேரத்தினை மாற்றக்கூடாது. எந்த ஒரு மங்கல வேலையையும் ஆரம்பிக்கும் முன்பு கணபதியையும், குல தெய்வத்தினையும் மனதில் நன்றாக வணங்கிக்கொள்ள வேண்டும்.

அமாவாசையின் கடைசி நேரத்தில் பிரதமையின் முதல் பகுதியில் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தில் விஷக்கடிகை வருமானால் அதை குருதோஷம் என சாஸ்திரம் கூறுகிறது, இதுவும் சாந்தி முகூர்த்தத்தில் தவிர்க்கவேண்டியதாகும். சூரியோதய முகூர்த்த வேளை 1½ மணி நேரம் பிராதகால முகூர்த்தம். மதியம் வருகிற முகூர்த்தம் அவிச்சின் முகூர்த்தம். ஆனால் அஸ்தமனத்தில் வரும் முகூர்த்தம் கோதாளி முகூர்த்தம் என குறிப்பிடப்படுகிறது. இந்த முகூர்த்தம் நல்ல முகூர்த்தம் கிடையாது. கோதாளி முகூர்த்தம் வரும் நாட்களிலும் சாந்தி முகூர்த்தம் விலக்க வேண்டும். அதே போல நாட்களில் சனி மற்றும் செவ்வாய்கிழமைகளை அசுப நாட்கள் என கொண்டு விலக்கி விடவேண்டும். கிழக்கு மேற்காக படுக்கலாம். தெற்கு இரண்டாம் பட்சமே. வடக்கு திசையில் தலைவைத்து படுக்கலாகாது. சாந்தி முகூர்த்தம் முடிந்த, விடியும் நேரத்தில் அமங்கலிகளை பார்க்கலாகாது. மணமக்களின் பெற்றோர்களை விட அத்தை மற்றும் அக்காமார்களே நலங்குகளை கவனிக்கவேண்டும். அதே போல தலை ஆடி மாதம் மணமக்கள் விலகி இருக்கவேண்டும்.

இன்னும் நிறைய விசயங்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட முக்கிய விளக்கங்களை மட்டுமே அளித்திருக்கிறேன். எனவே முகூர்த்தம் குறிப்பதை விளையாட்டாக எண்ணாமல் வேதம், ஜோதிடம் பயின்றவர்களின் துணைகொண்டே நிர்ணயிக்கவேண்டும். நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் நன்மையையே விளைவிக்கும்.

ஆசிகள்.


3 comments:

  1. nalla pathivu. padikka nalla irunthichu. but ithula ellam nampikkaiye illa!

    ReplyDelete
  2. நீங்கள் சொல்லுவது சரி இதை யார் கடைபிடிக்கிறார்கள், ஞாயிறு அன்று வைத்தால்தான் மொய் பணம் வரும், 27 வருடம் வளர்த்த பிள்ளையை ஒரு
    மாதம் சேர்த்து பார்க்க முடியாதா ?

    ReplyDelete