Monday, August 9, 2010

வள்ளல்களும் வாழ்ந்த நாடுகளும் – தெரிந்த விசயங்களும் தெரியாத உண்மைகளும்

1. பாரி
2. ஆய்
3. அதியமான்
4. நள்ளி
5. மலயன்
6. பேகன்
7. ஓரி

பாரி – வள்ளல்களிலியே இவர்தான் பெரிய வள்ளலாக சிறப்பு பெற்றிருக்கிறார். இவர் ஆண்ட நாடு பறம்பு மலை. தற்காலத்தில் பிரான்மலை என அழைக்கப்படுகிறது. இவர் வஞ்சகமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இவரின் மகள்களே அங்கவை, சங்கவை. இந்த பிரான்மலை இப்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் இருக்கிறது. உறங்காப்புளி என்னும் புளிய மரம் இங்கு விசேசம். சாதாரண புளியமரங்கள் இரவில் இலை மூடி உறங்கும். உறங்காப்புளி எப்பொழுதும் இலை திறந்தே இருக்கும். முல்லைக்கு தேர் கொடுத்தவன் என்று அறியப்பட்டவன்

ஆய் - இவன், பொதிய மலையினிடத்து உள்ள ஆய் குடியைத்
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். அதனால் ஆய் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுவர். வேள் ஆய், ஆய் அண்டிரன் என்னும் பெயர்களாலும் இவன் அழைக்கப்படுகிறான். பெறுவதற்கு அரிய சிறந்த மணியையும், ஆடையையும் இவன் பெற்றிருந்தான். சிவபெருமான் மீது கொண்டிருந்த பேரன்பால் அவற்றை இறைவனுக்குக் கொடுத்து மகிழ்ந்தான். இவன், 'ஆர்வ நன்மொழி ஆய்' என்று அழைக்கப்படுகிறான். அள்ளிக் கொடுத்து அயராதவன் அய்கண்டபிரான்

அதியமான் - அதியமான் நெடுமான் அஞ்சி” கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவ்வைக்கு நீண்ட ஆயுள் அளிக்கக் கூடிய அரிய நெல்லிக்கனியை தந்தவர். இவரது மகனின் பெயர் “அதியமான் பொகுட்டெழினி”. அதியமான்கள் தகடூரை மையமாய் கொண்டு மேற்கில் நாமக்கல், கிழக்கில் ஆற்காடு, வடக்கில் மைசூர், தெற்கில் கொங்கு நாட்டை எல்லையாகக் கொண்ட பகுதியை ஆண்டனர். தகடூர் என்பது இன்றைய தருமபுரியை குறிக்கிறது. தருமம் செய்வது கடமை என கொண்ட அதியமானின் ஊர் தருமபுரி என அழைக்கலாயிற்று. கரும்பு பயிரிடுதலை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் அளித்தவர் இவரே. அதியமான் நெடுமான் அஞ்சி என்பவர்தான் அவ்வைக்கு கனி கொடுத்தவர். இவருடைய வழித்தோன்றல்கள் அனைவருமே அதியமான் என பெயர் கொண்டவர்கள்தாம். தொண்டைமான் போல. சிறந்த வீரன் இறுதியில் தகடூரில் முற்றுகையிட்ட சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனால் தகடூர்ப் போரில் வீழ்த்தப்பட்டான். அவனது மார்பகத்தே வேல் பாய அவன் மாய்ந்து வீழ்ந்த போது ஔவை கதறி அழுது பாடியிருக்கிறார். "மாற்றானின் வேல் அவன் மார்பில் மட்டுமா தைத்ததது! இல்லை இரப்போர் கைகளை துளைத்து, அவனது குடிகள் கண்ணீர் சொரிய, நல்ல புலவர்களின் நாவையும் அல்லவா துளைத்தது. இனி பாடுநர் யாரிருக்கிறார்கள்? பாடுவோருக்கு அளிப்பவர்தாம் யாரிக்கிறார்கள்? என்று. இந்த பெருஞ்சேரல் இரும்பொறைதான் கரூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த சேர மன்னன். அவர்கள் காலத்தில் நமது ஊரின் பெயர் வஞ்சி.
நள்ளி - வளம் செறிந்த கண்டீர நாட்டைச் சேர்ந்தவன் நள்ளி.
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதும், உள்ளத்தில் கருணை இல்லாமல் பிறர்க்கு ஈதலும் (கொடுத்தல்) பயன் தராது என்ற கொள்கை உடையவன். நளிமலை நாடன் நள்ளி என்னும் பெயரை பார்க்கும்பொழுது இவனும் மலை நாட்டை ஆண்டவன் என தெரிகிறது. தோட்டி மலை எனவும் இந்த மலை அறியப்படுகிறது.
மலயன் - மலையமான் திருமுடிக்காரி என்பது இவன் முழுப்பெயர் ஆகும். இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற ‘மலாடு’ என்னும் பெயர் கொண்டிருந்த ‘பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ‘ஓய்மாநாடு’ ஆகும். மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம். மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படுகிறது. மலாட்டை ஆண்ட சிறந்த மன்னர்களுள் மலையமான் திருமுடிக்காரி முகன்மையான அரசர் ஆவார். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் காரி என்றும் அழைக்கப் படுபவர் ஆவார். காரி, சிறந்த வீரர். 'தடக்கை வேல் காரி' என்று சிறப்பிக்கப் படுபவர்; உயர்ந்த வள்ளலாகவும் விளங்கியவர். மலையமான் நாடான மலாட்டில் கொடுங்கால் என்ற நகரம் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. திருமுடிக்காரி, கொல்லிமலையை ஆண்ட மன்னன் ஓரியைப் போரில் கொன்று, கொல்லிக் கூற்றத்தைச் சேரனுக்குத் தந்ததை அறிய முடிகின்றது வளம் மிக்க மலாட்டுப் பகுதியினைக் கைப்பற்றவும், ஓரியைத் திருமுடிக்காரி போரில் கொன்றதற்குப் பழி தீர்க்கவும் அதிகமான் நெடுமான் அஞ்சி கோவலூரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டார். மலையமான் திருமுடிக்காரி கொடைத் திறன் மிக்கவர்; கடையெழு வள்ளல்களுள் ஒருவர். இவருக்குப் பின், இவர் மகன் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்தில் மலாடு சோழர்களின் ஆட்சிக்கு உடபட்டிருந்தது.

பேகன் - பருவ மழை தவறாது பெய்யும் வளம்மிக்க மலை நாட்டை
உடையவன் பேகன். மயில் காட்டில் அகவியதை இவன் கேட்டான்.
குளிரால் நடுங்கியே மயில் அகவியது என்று எண்ணினான். அதன்
மீது மிகுந்த இரக்கம் கொண்டான். அம் மயில் மீது தன் விலை உயர்ந்த கலிங்கப் பட்டாடையை அதற்குப் போர்த்தினான். ஆனால் இந்த அரசன் கட்டிய மனைவியை தவிக்க விட்டு மாற்றான் தோட்டத்து மல்லிகையை நாடியவன் என கபிலர் எனும் புலவர் தன் பாட்டில் சொல்லி இருக்கிறார். ஆவியர் எனும் குடியில் பிறந்த இவனும் மலையக நாட்டினை ஆண்ட அரசனாவான்.

ஓரி - ஓரி என்பவன் அக்கொல்லிமலையை அப்பொழுது ஆண்டு கொண்டிருந்தவன். அவனது வில் திறனால் வல்வில் ஓரி எனப்பட்டான். அவனுக்கு ஆதன்ஓரி என்றும் பெயர் உண்டு. மிக வேகமாகச் செல்லும் ஓரி என்றே பெயர் பெற்ற குதிரையை உடையவன். ஓரி இசையிலும் நாட்டியத்திலும் மிகமிக ஈடுபாடு கொண்டவன். அவனிடம் வந்த கூத்தர்களுக்கு பொன்னினால் குவளைமலர் செய்து வெள்ளி நாரிலே தொடுத்து மாலையாக அணிவித்து ஏராளமான செல்வத்தை அளிப்பான். நாட்டியம் புரிவோருக்கும் இசை வாணருக்கும் ஏராளமான செல்வத்தைக் கொடுத்ததாலேயே கடையேழு வள்ளல்களில் ஒருவனாக புலவர்களால் பாடப்பட்டான். அவன் கொடுத்த செல்வத்தால் கூத்தரும் விறலியரும் ஆடலையும் பாடலையும் கூட மறந்து விடுவாராம். அவன் மீது ஒரு வண்ணம் இசை பாடினான் ஒரு பாணன். உடனிருந்த விறலியர் யாழ் இசைத்தனர். சிறுபறையையும் பெருவங்கியம் என்னும் கருவியையும் இசைத்தனர். அவனை 21 பாடல் துறைகளிலும் பாடல் இசைத்துப் பாடினராம். பாணன் "அப்பேர்பட்ட பெருமகனே" எனப் பாட தன் பெயர் கேட்க நாணி ஏராளமான செல்வம் கொடுத்தானாம். ஆதலால் மிகச் சிறந்த புரவர்களாகிய கபிலர், பரணர், பெருஞ்சித்திரனார், கல்லாடனார் போன்றோர் அவனைப் பாடினர். அவனது கொல்லி மலையை "ஓரி கொல்லி" என்றும் பாடினர். இவ்வளவு புகழ்வாய்ந்த ஓரி ஏனோ சேரனோடு பகமை பூண்டான். ஒளவைப் பிராட்டிக்கு நெல்லிக்கனி கொடுத்து இறவாப் புகழ் கொண்டானே அதியமான் நெடுமான் அஞ்சி. அவன் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். அது கொல்லி மலைக்கு வடக்கே 60 கல் தொலைவில் உள்ளது. அதியமானும் சேரனுடன் பகைமை பூண்டான். அதியமான், ஓரி, சோழன் பாண்டியன் ஆகியோர் கூட்டாக இணைந்து சேரல் இரும்பொறையை ஒடுக்க விரும்பினர். அதனால் இருதரப்பினருக்கும் கடும் போர் மூண்டது. முதலில் மலையமான் திருமுடிக்காரி கொல்லி மலைமீது படையெடுத்து ஓரியோடு போரிட்டான். பேராற்றல் மிகுந்த காரியோடு ஓரியால் சமமாகப் போரிட முடியவில்லை. போரில் ஓரியைக் கொன்று கொல்லிமலையைக் கைப்பற்றி சேரனிடம் ஒப்படைத்தான் காரி. அதே நேரத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லிக் கூற்றத்தில் நீர்கூர் என்ற இடத்தில் அதியனையும், சோழனையும், பாண்டியனையும் போரில் முறியடித்தான். சோழனும், பாண்டியனும் தமது போர் முரசுகளையும் கொற்றக் குடைகளையும் முடி முதலிய கலன்களையும் இழந்து ஓடினர். சேரன் பெற்ற வெற்றி மிகப்பெரும் வெற்றி. அதோடு அவன் விடவில்லை. அவர்களுக்கு உதவிய அதிகனைச் துரத்திச் சென்றான். அவனுடன் அவனுடைய தானைத் தலைவன் பிட்டன் கொற்றனும் இருந்தான். இவர்கள் முன் நிற்க இயலாமல் அதியமான் அஞ்சி தகடூர்க் கோட்டைக்குள் சென்று மறைந்து கொண்டான். தகடூரை முற்றுகையிட்டான் சேரன். பின்னர் ஏற்பட்ட போரில் அதிகமான் மார்பிலே வேல் தைத்து இறந்து வீழ்ந்தான். இதை ஒளவை பார்த்தாள் பதறினாள்.

மொத்தத்தில் சில வள்ளல்கள் சூழ்ச்சியாலும் சிலர் போரினாலும் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இதில் பாரியும் ஓரியும் மிக ஒழுக்க சீலர்களாகவும் அடுத்தவன் நாட்டிற்கு ஆசைப்படாதவனாகவும் இருந்திருக்கின்றான். அதியமான் இன்னொரு வள்ளலுக்காக உயிரை இழந்ததன் மூலம் மிகப்பெரிய வள்ளலாகிறான். இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று எதுவெனில் அனைத்து வள்ளல்களுமே சிற்றரசர்கள்தான். மேலை மலையக நாடுகளை ஆண்டிருக்கிறார்கள். அந்த மலைகள் இன்றைய காலகட்டத்திலுமே பெரும் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது (கொல்லிமலை, பிரான்மலை). அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நோக்கினால் அது வெறும் காடுகளாகவே இருந்திருக்கும்.
இன்னும் சிந்திப்போம்!

6 comments:

  1. excellent post karthi...very intresting to know about them..when we were at school that time it was too boring to read all these stories..but now !!!???
    ithu thaan time bola..ha ha ha..

    ReplyDelete
  2. கார்த்திகேயன்August 11, 2010 at 8:34 AM

    கரெக்ட் சரவணா.. ஸ்கூல் படிக்கும்போது நான் எந்த ஒரு பேச்சுப்போட்டியிலோ, கட்டுரைப் போட்டியிலோ கலந்து கொண்டதே கிடையாது. ஓவியப் போட்டியை தவிர. ஆனால் இப்ப கட்டுரை எழுதனும்னு நினைக்கும் போது இந்த ப்ளாக்தான் உதவி பண்ணுகிறது. யாரும் படிக்கிறார்களோ இல்லியோ... கமெண்ட்ஸ் வருதோ இல்லியோ எழுதிகிட்டே இருப்பேன். ஆனால் எல்லாரும் வந்து படிச்சிட்டுதான் இருக்குறாப்ல இருக்கு. கமெண்ட்ஸ் குடுக்கத்தான் நேரம் இல்லை போல.

    போன வாரம் இராமனாதபுரம் போய் இருந்தேன். ஜீனத் அக்காவை பார்த்தேன். பைராம் மெக்காவில் இருப்பதாக சொன்னார்கள். பாசித் அபுதாபியில் இருப்பதாக சொன்னார்கள். அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. gud maapley!!!!
    thanks to Mr.Punniya moorthy...

    ReplyDelete
  4. கார்த்திகேயன்January 24, 2011 at 6:53 PM

    நன்றி ஓம்பிரகாஷ் அவர்களே.

    எமது வலைத்தளத்தினை தொடர்ந்து பார்த்து தங்களது மேலான கருத்துகளை தெரிவியுங்கள்.

    ReplyDelete