சென்ற வருடம் நந்தன ஆண்டின் துவக்கத்தில் அந்த வருடத்திற்குரிய பலன்களை
அளித்திருந்தேன். அதே போல இந்த ஆண்டிற்கான பலன்களையும் தொகுத்தளித்திருக்கிறேன்.
படித்து பயனடையவும்.
பஞ்சாங்க கணிதம்: அனைத்து கணக்கு முறைகளும் ஆற்காடு கா.வெ.சீதாராமைய்யர்
சுத்த வாக்கிய கணித முறையில் கணிதம் செய்யப்பட்டதாகும்.
நவக்கிரக ஆதிபத்யங்களின்படி 13.04.2013 சனிக்கிழமை அன்று சுக்லபஷம்
சதுர்த்தி திதியில் கிருத்திகை நட்சத்திரம் 4ம் பாதத்தில் அமிர்த யோகத்தில் இரவு
11.52க்கு தணுசு லக்கினத்தில் ரிஷப ராசியில் சூரியன் ஓரையில் சூரிய தசை செவ்வாய்
புத்தியில் புதன் அந்தரத்தில் விஜய வருடம் இனிதே ஆரம்பிக்கிறது. உலக ஜாதகத்தின்படி
வர்க்கோத்திர யோகமும் சஷ்டாஷ்டக தோஷமும் லக்கின சுகாதிபதியான தேவகுரு 6ல் மறைந்து
குருச்சந்திர யோகமும் கஜகேசரி யோகமும் தனக்கும் சனிக்கும் சஷ்டாஷ்டக தோஷமும்
தனாதிபதி சனி உச்ச பலம் பெற்றும் மேகாதிபதியாகவும் உலக ஜாதக திசா நாயகனாகிய ராஜ
கிரஹமாகிய சூரியன் பலமாக இருப்பதனாலும் இவ்வருடம் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
சென்ற ஆண்டில் ஏமாற்றிய பருவ மழை இந்த ஆண்டு குறையின்றி பெய்யும்.
இந்த ஆண்டு அரசாங்கத்திற்கு வருமானங்கள் குறைந்து புதிய வரிகள்
விதிக்கப்படலாம். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரங்கள் நன்றாக இயங்கும். சரிந்திருந்த
ரியல் எஸ்டேட் தொழிலும் விருத்தி காணும். பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்கள்
விலை உச்சம் காணும். அரிசி, சர்க்கரை, பருப்பு விலை அதிகரிக்கும். அக்டோபர் கடைசி
வாரம் முதல் நவம்பர் முதல் வாரம் வரை பூமிக்கு நல்ல நேரம் இல்லை. பூகம்பங்கள் நிகழ
வாய்ப்புள்ளது. இரயில் விபத்துகளும் ஏற்படலாம். வாசனை திரவியங்கள் விலை ஏறும்.
காற்றாலை மின்சாரம் தடைபடலாம். மின் பற்றாக்குறை குறைய வாய்ப்பில்லை. இந்த ஆண்டு
ஞாயிறு அன்று வேலைகள் துவங்க நன்மை விளையும்.
இந்த ஆண்டு பஞ்சு நூல் விலை குறையும். ஏலக்காய், முந்திரி, திராட்சை விலை
ஏறாது. பூண்டு, வெங்காயம் விலை ஏறும். மஞ்சள் விலையில் அரசு தலையிட்டு நிலையில்லா
வியாபாரமாக இருக்கும். எரிவாயு விலை மிக அதிகமாக ஏறும். இந்த ஆண்டு நல்ல மழை
பொழிந்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வழியும். எள்ளு, எண்ணை வித்துக்கள்
விலை ஏறும். வங்கிகள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும்.
இந்த ஆண்டு சனி, ராகு & கேது பெயர்ச்சிகள் இல்லை. குருப்பெயர்ச்சி மே மாதம் 28 ம் தேதி செவ்வாய் கிழமை அன்று இருக்கிறது. குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுனத்திற்கு வைகாசி 14 அன்று இரவு 9:15 மணிக்கு பிரவேசிக்கிறார்.
மேஷம், கடகம், விருச்சிகத்திற்கு யோகமான பலன்களும், தனுசு, மீனத்திற்கு
மத்திம பலன்களும், சிம்மத்திற்கு சம பலனும் ஏற்படும். ரிஷபம், மிதுனம், கன்னி,
துலாம், மகரம், கும்பத்திற்கு நஷ்ட பலன்களே!
இந்த ஆண்டின் மொத்த ஆதாயம் 53. மொத்த விரையம் 56. எனவே நஷ்டம் 3 வருவதால்
அரசாங்கம் கடனில் கஷ்டப்படும்.
கந்தாய பலன்களை பார்க்கலாம்.
அஸ்வினிக்கு முதல் 4 மாதங்கள் கஷ்ட பலன்களும், கிருத்திகை, திருவாதிரை,
ஸ்வாதி, கேட்டை, உத்திராடம், சதயம் முதலான நட்சத்திரகாரர்களுக்கு இரண்டாம் 4
மாதங்கள் கஷ்ட பலன்களும், பரணி, புனர்பூசம், திருவோணம், உத்திரட்டாதிக்கு கடைசி 4
மாதங்கள் கஷ்ட பலன்களும் இருக்கும். உத்திரம், ரேவதிக்கு கடைசி 8 மாதங்களும்,
ஆயில்யத்திற்கு முதல் 8 மாதங்களும் கஷ்ட பலன்களாகும். ரோகிணி, மிருகசீரிடம்,
பூசம், மகம், பூரம், ஹஸ்தம், சித்திரை, விசாகம், மூலம், பூராடம், அவிட்டம் முதலான
நட்சத்திரக்காரர்களுக்கு ஆண்டு முழுவது சுக பலன்கள் என அறியவும்.
மொத்தத்தில் கடந்த ஆண்டைவிட மழைப்பொழிவு திருப்தியாக இருந்தாலும், விலைவாசி
அதிகம் ஆகும் என இதன் மூலம் அறிய முடிகிறது.